தாமதம் கூடாது

சீனாவின் ஷின்சியாங் மாகாணத்திலுள்ள காஷ்கர் பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவாடர் துறைமுகம் வரையிலும் "சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம்' என்ற பெயரில் ஒரு த

சீனாவின் ஷின்சியாங் மாகாணத்திலுள்ள காஷ்கர் பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவாடர் துறைமுகம் வரையிலும் "சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம்' என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக இணைந்து செயல்படுத்திவரும் இத்திட்டத்துக்கு அடித்தளமிட்டது, பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், முன்னாள் ராணுவத் தலைமை தளபதியுமான பர்வேஷ் முஷாரஃப்.
இந்தத் திட்டத்தில், சீனா தரப்பில் 51 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.45 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின்கீழ், காஷ்கர் முதல் குவாடர் வரையிலும் தேசிய நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில்வே பாதைகள், எரிவாயு குழாய்கள், மின்சார திட்டங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், பாகிஸ்தானில் மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் பலூசிஸ்தான் வளம்பெறும், அப்பகுதியில் இருக்கும் வேலையில்லாத திண்டாட்டம் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்து வருகிறது.
மேலும், பாகிஸ்தான் வரலாற்றில் இந்த திட்டம், புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி, அந்நாட்டை ஆசியக் கண்டத்திலுள்ள பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாற்றும் என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தை மேலோட்டமாக பார்க்கையில், இதைக் கண்டு இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், கூர்ந்து கவனித்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த திட்டம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதாவது, பாகிஸ்தான்-சீனா பொருளாதார வழித்தடத் திட்டமானது, இந்தியா தனக்குச் சொந்தமான பகுதியாக தெரிவித்து வரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சீனா பல கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறி, அங்கு தனது ராணுவ வீரர்களை சீனா நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில், ஜம்மு-காஷ்மீரை மையமாகக் கொண்டு பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் போர் மூளும்பட்சத்தில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க இந்திய ராணுவம் தாக்குதல் தொடுக்கக்கூடும்.
அந்நேரத்தில் அங்கிருக்கும் சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்படுவது உறுதி.
இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னை என்பதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் - சீனா என்பதாக மாறும். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில், அந்நாட்டை இந்தியா எளிதில் சமாளித்துவிடும்.
ஆனால் இந்த விவகாரத்தில் சீனா தலையிடும்பட்சத்தில் இந்தியாவின் நிலைமை மோசமடையும். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் திட்டமாகும்.
இதனிடையே, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நட்பு நாடான ரஷியா, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சேரப் போவதாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையெனில், இந்தியாவுக்கு இது பெரும் பின்னடைவாகும்.
பாகிஸ்தானும், ரஷியாவும் அண்மைகாலமாக நெருங்கி வரத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானுக்கு நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ததுடன், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியையும் ரஷியா நடத்தியுள்ளது.
இஸ்லாமாபாதில் முதல்முறையாக இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் அண்மையில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் இதுவரை எந்தத் தொடர்பும் வைக்காமல் ரஷியா இருந்து வந்தது. ஆனால், அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி வருவதாக தெரிவதால், பாகிஸ்தான் பக்கம் ரஷியா சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ரஷியாவின் ராணுவ கூட்டாளியான சீனாவும் ஒரு காரணமாகும்.
அதேபோல், ரஷியா மற்றும் சீனாவுடன் நெருங்கிய ராணுவ உறவு வைத்துள்ள ஈரானும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலும் யோசிக்கக்கூடியதே.
இதுபோல், ஆசியக் கண்டத்தில் இருக்கும் முக்கிய சக்திகள், பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டு வருவதை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
நம் நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடுவதை தடுக்கும் வகையில், அந்நாட்டை எதிர்க்கும் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, வியத்நாம் போன்ற நாடுகளுடன் நட்புறவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் பாதுகாப்பு உடன்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சேரப் போவதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளை தனது ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அத்திட்டத்தில் சேராமல் நிரந்தரமாக இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.
ஈரானில் இந்தியா செயல்படுத்தி வரும் திட்டத்துக்கு பிற நாடுகளிடையே ஆதரவை திரட்ட வேண்டும்.
எதிர்காலத்தில், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு இந்திய விவகாரத்தில் சீனா நிச்சயம் தலையிடும். அப்போது, இந்தியாவுக்கு தனது ஆதரவை ரஷியா தெரிவிக்காமல் கூட போகலாம்.
இதைப் புரிந்து கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தியா தனது ராஜதந்திர நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com