முன்னெச்சரிக்கை தேவை

கேரள மாநிலம், சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கேரள மாநிலம், சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, ஐயப்பன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து மாளிகைபுறத்தம்மன் கோயில் வரையிலான பகுதியில் கயிற்றால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அறுந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் என்பது புதிதல்ல. புல்மேட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு மகர விளக்கு பூஜையின்போது ஜீப் வாகனம் ஒன்று பக்தர்கள் மீது மோதியதில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பக்தர்கள் 106 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் நேரிட்ட மிகப்பெரிய உயிரிழப்பு சம்பவமாக இது கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, கடந்த 1952-ஆம் ஆண்டில் கோயிலில் இரு பட்டாசு கிடங்குகளில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 66 பக்தர்கள் பலியாகினர்.
கடந்த 1999-ஆம் ஆண்டில் பம்பையில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 52 பேர் இறந்தனர். சரங்குத்தியில் 2000-ஆம் ஆண்டு நேரிட்ட நெரிசலில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.
1999-ஆம் ஆண்டு மற்றும் 2011-ஆம் ஆண்டு நேரிட்ட உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசேகர மேனன் தலைமையிலான ஆணையமும், நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையிலான ஆணையமும் அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தன.
அதில், கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சில பரிந்துரைகளை அந்த ஆணையங்கள் அளித்திருந்தன. இதையேற்று கேரள அரசும், தேவஸ்வம் போர்டும் சில நடவடிக்கைகளை எடுத்தன.
நிகழாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில், பக்தர்கள் கூட்டத்தை அப்படியே மொத்தமாக விடாமல், கட்டுப்படுத்தி படிப்படியாக விடும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. எனினும், இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களுக்கு, அதிகாரிகள் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளும் காரணமாக அமைந்து விடுகிறது.
குறிப்பாக, கடந்த 25-ஆம் தேதி நேரிட்ட கூட்ட நெரிசல் சம்பவம், கூட்டத்தை கட்டுப்படுத்த கடைபிடிக்கப்படும் முறையில் ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், கூட்டத்தை கட்டுப்படுத்த கடைபிடிக்கப்படும் முறை மிகவும் மோசமாகவே உள்ளது. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும்போது அவர்களை கட்டுப்படுத்த இந்தியாவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில், பக்தர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். ஆனால், எந்த கோயிலிலும் அதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நடவடிக்கை பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும், கோயிலின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
மற்றோர் நடவடிக்கை, கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது. ஆனால், அதற்கும் கோயிலில் கடைபிடிக்கப்படும் மரபை சுட்டிக்காட்டி, அனுமதிக்கப்படுவதில்லை.
பல கோயில்களில், ஒரு பக்கம் சுவாமி தரிசனத்துக்காக விரதமிருந்த பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். மறுபக்கமோ, மிகவும் முக்கிய பிரமுகர்கள் எளிதாக சிறப்பு வழியில் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களை காணும்போது, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோபம் நேரிடுகிறது. இதனால் தங்களுக்கு அனுமதி கிடைத்ததும், அது பக்தர்களை இலக்கை நோக்கி ஓடச் செய்கிறது. இதனாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
கூட்ட நெரிசலுக்கு காவல்துறையும் ஒரு காரணம்தான். அதிக அளவில் கூட்டம் கூடும் இடத்தில் அதை கட்டுப்படுத்த தேவையான காவல்துறையினர் இருப்பதில்லை. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 25-ஆம் தேதி நேரிட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காவல்துறை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு தாற்காலிக நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, பக்தர்கள் செல்லும் வழியில் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், கோயிலுக்கு வரும் பக்தர்களும் கூட்ட நெரிசலுக்கு ஒருவகையில் காரணம்தான். விதிகளை கடைபிடிக்காமல், தாங்கள் செல்லும் வழியில் பழங்களை தின்றுவிட்டு அதன் தோல்பகுதியை கீழே வீசுவது, நினைத்த இடத்தில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது, பட்டாசுகளை வெடிப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு முன் செல்லும் பக்தர்கள் விதிகளை மீறி செய்யும் செயல்கள், அவர்களின் பின்னால் வரும் பக்தர்களுக்கு பாதிப்பை தருகிறது. பழத்தோல், உடைந்த தேங்காய் போன்றவற்றை மிதித்து பக்தர்கள் கீழே விழும்போது, தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கோயில் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் தாற்காலிக ஏணிகள், நடைபாதைகள் போன்றவையும் பிரச்னையைத் தரக்கூடியவைதான்.
எனவே, மேற்கண்ட காரணங்களை கவனத்தில் கொண்டு, முன்கூட்டியே அசம்பாவிதங்கள் நேரிடக்கூடிய பகுதிகளை கண்டுபிடித்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த பிறகு, அதுதொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைப்பதை காட்டிலும், நிரந்தர மற்றும் உறுதியான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com