எச்சரிக்கும் புள்ளிவிவரம்

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த "சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம்' (எஸ்.ஆர்.எஸ்.) எனப்படும் "மாதிரி பதிவு அமைப்'பால் கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த "சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம்' (எஸ்.ஆர்.எஸ்.) எனப்படும் "மாதிரி பதிவு அமைப்'பால் கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில், தேசிய அளவில், ஆண் - பெண் பிறப்பு விகிதத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2011-13 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 909 பெண்கள் என்று இருந்த ஆண் - பெண் விகிதம், 2012-14 காலகட்டத்தில் 1000-க்கு 906-ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த எண்ணிக்கை, தில்லியில் மிகவும் மோசமாக உள்ளது.
தில்லியில் இந்த அளவு 1,000 ஆண்களுக்கு 887 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தது 1000-க்கு 876-ஆக குறைந்துவிட்டது. அதற்கடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்தி மொழி பேசும் மாநிலங்களில்தான் இதுபோன்ற நிலை என்று எண்ணக்கூடாது. தமிழகம் போன்ற தென்மாநிலங்களிலும் ஆண் - பெண் பிறப்பு விகிதத்தில் இதே நிலைதான் காணப்படுகிறது.
தமிழகத்தில் 1,000 ஆண்களுக்கு 927 பெண்கள் என்ற முந்தைய கணக்கெடுப்பில் பதிவான விகிதம், தற்போது 1000-க்கு 921-ஆக குறைந்துள்ளது.
கடந்த 2001, 2011-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் மிகவும் மோசமாக இருந்தது. தற்போதும் அந்த இரு மாநிலங்களும் கடைசி வரிசையில்தான் உள்ளன.
ஆனால், முந்தைய கணக்கெடுப்புகளோடு ஒப்பிடுகையில், தற்போது அந்த இரு மாநிலங்களின் நிலை சிறிதளவு மேம்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.எஸ். அமைப்பின் ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம், பாலியல் தொல்லை ஆகிய காரணங்களுக்காக கல்வி பெற முடியாமல் போன 5 முதல் 19 வயது வரையிலான சிறார்கள், சிறுமிகள் குறித்து கடந்த 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கடந்த 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி, 5 முதல் 19 வயது வரையிலான சிறார், சிறுமிகள், 8.4 கோடி பேர் கல்விக்கற்க முடியாத அவல நிலையில் இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல், 78 லட்சம் சிறார்கள், கல்வி நிலையங்களுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், பொருளாதார தாழ்நிலை போன்ற ஏதோ ஒரு காரணத்துக்காக வலுக்கட்டாயமாக கல்வி கற்பதில் இருந்து அவர்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் அனைவரும் தங்களது வயதுக்கு மீறிய வேலைகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் நாம் ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும், பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தராததும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதேபோன்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததையே 8.4 கோடி சிறார்கள், கல்விக்கற்க முடியாத நிலையில் இருப்பது சுட்டிக்காட்டுகிறது.
பெண் குழந்தைகள் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதேபோல்தான், கல்வியின் முக்கியத்துவத்திற்காக, பல்வேறு நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரு
கின்றன. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட நிதியை அரசுகள் ஒதுக்கி வருகின்றன. எனினும், இன்னமும் முழு பயன் கிடைக்கவில்லை என்பதை மேற்கண்ட கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேநிலை நீடித்தால், நாட்டில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மேலும் குறைந்து, பெண் பாலினத்தில் வெற்றிடம் ஏற்படும். கல்வியிலும் எதிர்கால சமுதாயம் பின்தங்கிவிடும். எனவே, இந்த கணக்கெடுப்பு முடிவுகளை எச்சரிக்கையாகக் கருதி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தடுக்க பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும். இதற்கு கருவுற்றிருக்கும் பெண்கள் குறித்த பட்டியலை ஆரம்பக் கட்டத்திலேயே தயாரிக்க வேண்டும்.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு இடையில் கருக் கலைப்பு போன்ற சம்பவம் நடந்திருந்தால், அதை விசாரித்து, பெண் குழந்தை என்ற காரணத்துக்காக கரு கலைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
பெண் குழந்தை கரு கலைக்கப்பட்டிருந்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பிறரிடம் அத்தகைய செயலில் ஈடுபட்டால் தண்டனை உறுதி என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
கல்வி விவகாரத்தில், குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் விவரத்தையும், பெற்றோர் விவரத்தையும் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட வயதில் அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
சிலர் படிப்பை பாதியில் நிறுத்திவிடும்பட்சத்தில், எந்த காரணத்துக்காக அவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தினார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். பொருளாதார காரணத்துக்காக படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருந்தால், உதவித் தொகை போன்ற உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், நமது எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமானதாகவும், அறிவார்ந்ததாகவும் அமையுமென்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com