முதலீட்டில் கவனம் தேவை

இந்தியாவில் நிலவும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு, குறைந்த தொழிலாளர் ஊதியம், அதிக மக்கள்

இந்தியாவில் நிலவும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு, குறைந்த தொழிலாளர் ஊதியம், அதிக மக்கள் தொகை, மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் போன்றவை சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை நம்நாட்டின் பக்கம் ஈர்க்கின்றன.
இதனால், உலகின் முன்னணி நிறுவனங்கள், பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அண்மையில் ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு வங்கி (ஜே.பி.ஐ.சி.) நடத்திய ஆய்வில், எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவதாக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
இதேபோன்று, அமெரிக்க அரசின் கருவூலத்துறையிடம் இருக்கும் புள்ளிவிவரம் ஒன்று, கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவிடம் அந்நாட்டின் வெளிநாட்டு பங்குகள் 1.8 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கிறது. சீனாவிடம் அத்தகைய பங்குகள் 1.6 சதவீதம் இருப்பதாக குறிப்பிடுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில், இந்தியாவில் சீனாவின் முதலீடு 870 மில்லியன் டாலராகும். இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.5,804 கோடி ஆகும். கடந்த 2014-ஆம் ஆண்டு அளவோடு ஒப்பிடும்போது, இது ஆறு மடங்கு அதிகம்.
இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிற வெளிநாட்டு முதலீட்டுத் தொகையான ரூ.2.62 லட்சம் கோடியுடன் (39.3 பில்லியன் டாலர்கள்) ஒப்பிடும்போது, சீனாவின் முதலீடு வெறும் 2.2 சதவீதமே ஆகும்.
இந்நிலையில், நிகழாண்டில் சீனாவைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. சீனாவிலும், உலக அளவிலும் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) உற்பத்தியில் முங்கிய பங்கு வகிக்கும் ஹுவோய் நிறுவனம், சென்னையில் தயாரிப்புப் பணியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.
வாண்டா, சேனி ஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஷியோமி, சி-டிரிப் ஆகியவையும் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான தங்களது திட்டங்களை முன்வைத்துள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனமும், பாஸ்கான், சாப்ட் பேங்க் ஆகியவை இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைதளங்களில் ஒன்றான ஸ்நாட்-டீலில் ரூ.3,335 கோடியை (500 மில்லியன் டாலர்) முதலீடு செய்தன.
பாய்து, அலிபாபா, டென்சென்ட் ஆகியவையும் இந்தியாவில் தனித்து முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால், நமது நாட்டில் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதி மேம்படும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.
மேலோட்டமாக இவற்றை பார்க்கையில், சீன நிறுவனங்களின் முதலீடுகளால் அதிக நன்மை ஏற்படுவது போன்ற தோற்றம் ஏற்படும். இது உண்மையா எனில், கேள்விக்குறிதான்.
ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், மேலைநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
இந்தியாவின் நம்பகமாக பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் திகழ்கிறது. இந்த நாடுகளின் முதலீடுகளையும், சீனாவின் முதலீடுகளையும் ஒன்றாக நாம் கருதக்கூடாது. ஏனெனில், மேற்கண்ட நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லைத் தகராறோ, பொருளாதார ரீதியிலான போட்டியோ கிடையாது.
ஆனால், அத்தகைய போட்டி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்லாண்டுகளாக நிலவி வருகிறது. இரு நாடுகளும் இதை மறுத்தபோதிலும், சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பரஸ்பரம் எதிராகவே செயல்படுகின்றன.
குறிப்பாக, இந்தியாவுக்கு என்எஸ்ஜி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனா வெளிப்படையாக தடை போட்டு வருகிறது. இந்தியாவும் தென்சீனக் கடல் பிரச்னை, திபெத் விவகாரம் போன்றவற்றில் சீனாவுக்கு எதிரான நிலையையே கடைப்பிடிக்கிறது.
இதுபோன்ற காரணங்களினால், இருநாடுகள் இடையே போர் அல்லது போர் போன்ற சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில், இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை சீன நிறுவனங்கள் தாமதிக்காமல் உடனடியாக திரும்பப் பெறும். அப்போது இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பர்.
இந்தியாவும் பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதேபோல், இந்தியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களில் தொலைத் தொடர்பு வசதி தொடர்பான நிறுவனங்களும் உள்ளன.
இதனால் அந்த நிறுவனங்கள் மூலம் நமது பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை சீனாவால் ஒட்டுக் கேட்க முடியும். அதை நமது நாட்டுக்கு எதிராக சீனா பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் சீனப் பொருள்களை புறக்கணிப்பது தொடர்பான பிரசாரம் தீவிரமடையும் பட்சத்தில், தங்களது முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் அந்நாடு தலையிடக் கூடும்.
எனவே சீன நிறுவனங்களின் முதலீடுகளை கண்மூடிக் கொண்டு வரவேற்காமல், அதனால் ஏற்படும் சாதக-பாதகங்களை தீவிரமாக ஆராய வேண்டும்.குறிப்பாக, சீன முதலீடுகளால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பதை கவனத்துடன் ஆய்வு செய்தபிறகே, சீன முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com