சதிகளை முறியடிப்போம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவத் தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது என்பதில் ஐயம் இல்லை.
சதிகளை முறியடிப்போம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவத் தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருந்தது என்பதில் ஐயம் இல்லை. முன்பு பதான்கோட்டில், இப்பொழுது உரியில் --- இரண்டும் ஒரே மாதிரியான தாக்குதல்கள்.
உயர்தரப் பயிற்சி பெற்று, தங்களது உயிரைக் கொடுக்க தயாராக வந்தவர்களின் திட்டமிட்ட செயல் இது. சுதந்திரமாகவும், பாகிஸ்தானிய ராணுவத்தின் உதவி இல்லாமலும் இப்படியொரு தாக்குதல் நடத்தும் திறமை காஷ்மீரிலுள்ள எந்த இயக்கத்திற்கும் இல்லை.
ஆக, பாகிஸ்தான் என்ன செய்கிறது, என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பது ஊகிக்க முடியாத விஷயம் அல்ல. இந்தியா இந்த நிலையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இன்று நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
அடி வாங்குபவர் ஒன்றும் செய்ய முடியாமல் எவ்வாறு ஓடி ஒளிவாரோ, அதே நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. பதிலடி கொடுத்தால், அணு குண்டுகள் வைத்திருக்கும் இரண்டு நாடுகளுக்கிடையே போர் தொடங்கும் அபாயம் இருக்கிறது. அந்தப் போர் எதில் போய் முடியும் என்று தெரியாது.
அது மட்டுமல்ல, போர் ஆரம்பித்தால் ஜனநாயக நாடான நம் நாட்டில் அதற்கு எதிர்ப்பு வரும். அறிவுஜீவிகள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சிலர், காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கெனவே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் ஒரு சாரார் பாகிஸ்தானிய பாடகர்கள் - நடிகர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், இன்னும் சிலர் இரு நாட்டினரிடையே கலாசாரத் தொடர்பு தொடர வேண்டும் என்றும் வாத - பிரதிவாதம் செய்கிறார்கள்.
பாகிஸ்தானில் பேருக்கு ஜனநாயகம் இருந்தாலும்கூட நடைமுறையில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெனரல் ரஹீல் வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பாகிஸ்தானுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் நிர்வாகம் முழுமையாகவே அவர் கையில் உள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி இல்லை, ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறது என்பதை காட்டுவதற்காகவே பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வைக்கப்பட்டுள்ளார்.
ரௌடிகளுக்கு பயிற்சியளித்து இந்திய ராணுவத்தைத் தாக்க அனுப்புகிறது பாகிஸ்தான். அப்படி அனுப்பப்பட்டவர்களின் சாவினால் பாகிஸ்தானுக்கோ, உலகத்திற்கோ எந்த இழப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், பாகிஸ்தானின் இந்த முறையற்ற செயலால் நம் நாடு சிறந்த அதிகாரிகளையும், நாட்டுப்பற்று மிகுந்த இளைஞர்களையும் இழந்துவிடுகிறது.
பாகிஸ்தான் நடத்தும் விளையாட்டுக்கு சரியான பதில், பலமான அடிதான். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா?
"கவலைப்படாதே இன்னும் செய்' என்று பாகிஸ்தானை ஊக்குவிக்கும் சீனா பின்னணியில் நிற்கிறது. ரஷியாவும் கூட்டுப் பயிற்சியின் நிமித்தம் தன் ராணுவ வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் மீது தாக்குதல் வந்தால் பாகிஸ்தானுக்கு பக்கபலமாக நிற்போம் என்று சொல்லியுள்ளது சீன நாடு.
இந்தியா ஓரிரண்டு ஆண்டாக நம்பி வந்த அமெரிக்காகூட உரி தாக்குதலை மிக தெளிவாக பாகிஸ்தானிய ஊக்குவிப்பில் நடந்திருப்பதாகச் சொல்லவில்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச் சியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது சீனா. இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு சீனாவிற்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா, போட்டியிலிருந்து ஒதுங்கிவிடும் நிலை ஏற்படும் என்று சீனா கனவு காண்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கி வந்துள்ளது ரஷியாவிற்குப் பிடிக்கவில்லை. இதுவரை ரஷியாவின் நெருங்கிய நண்பனாக இருந்து வந்த இந்தியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொண்டு, அமெரிக்காவிற்கு பலவிதமான சலுகைகளை அளிக்கச் சம்மதித்துள்ளது.
நம் நாட்டைப் பொருத்தவரை, இந்த உடன்பாடு சீனாவிற்கு எதிராகவே இருந்தாலும் கூட, ரஷியா இதை தனக்குப் பாதகமாகப் பார்க்கிறது. அதனால்தான் அது பாகிஸ்தானுடன் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
நாம் ஒரு தப்புக் கணக்கு போட்டு விட்டோம். பாகிஸ்தான், உலகம் முழுவதும் தீவிரவாதத்தை விளைவிக்கும் நாடாக அறியப்பட்டுவிட்டதால், அது தனிமைப்படுத்தப்படும்; எந்த நாடும் இனிமேல் பாகிஸ்தானுடன் உறவு வைத்துக் கொள்ளாது என்று நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. உலகளவிலும் கொள்கைகளை சுயநலம் தோற்கடித்துவிட்டது. தீவிரவாதம் வளர்ந்தாலும் வளரட்டும் அது நம்மை பாதிக்காமல் இருந்தால் போதும் என்கிறது இச்சுயநலம்.
சீனாவில் சில பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலை தூக்கும்போது, சீனா அதை நசுக்குகிறது. முஸ்லிம்களின் பாதுகாவலனாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் பாகிஸ்தான், முஸ்லிம்களுக்கு எதிரான அந்த மனித உரிமை மீறல்களின் பக்கமே பார்ப்பதில்லை. இதைப் போலவே ரஷியாவில் இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போதும், பாகிஸ்தான் கண்டுகொள்வதே இல்லை.
இச்சூழலில் இந்தியா ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சீனா மற்றும் ரஷியாவிற்கு, பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதம் வளருவதால் இழப்பு இல்லை.
மாறாக, இந்தத் தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்கும்போது இப்பிரச்னையுடன் போராடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைப்படுமேயானால், அதை சீனா தனக்கு லாபம் என்று கருதுகிறது.
ஆக, இப்பொழுது உள்ள நிலையில், இந்தியா மீது தாக்குதல்கள் அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
* இந்தியாவின் மீது வெற்றிகரமான, அதிக சேதங்கள் விளைவிக்கும் தாக்குதல்களை நடத்தினால் பாகிஸ்தானிய ராணுவத்திற்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும் அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் மதிப்பும் கூடும்.
* காஷ்மீர் பிரச்னை தொடர இப்படிப்பட்ட தாக்குதல்கள் உதவும்.
* தனக்கு பாதிப்பு இல்லாமல் தெற்காசியாவின் அரசியல் சிக்கல்களில் ஒரு பொருத்தமான இடத்தை வைத்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதனால், தானாகவே வெட்கப்பட்டு பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நிறுத்திவிடும் என்றோ அல்லது அந்நாட்டு மக்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள் என்றோ நம்புவது முட்டாள்தனம்.
உரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டுவிடும் என்ற பயம் தற்பொழுது பாகிஸ்தான் மக்கள் மத்தியில் உள்ளது.
*நாடு என்கிற முறையில் நம் சுயநம்பிக்கை பாதிப்படையும். கடந்த சில ஆண்டுகளாக நாம் நம்மை வருங்கால உலக சக்தி என்று கர்வமாக விவரித்து வருகிறோம். ஆனால், அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகியும் பதிலடி கொடுக்க முடியாத ஒரு நாட்டை உலக சக்தியாக யார் ஏற்றுக் கொள்வார்கள்?
* பாதிப்புக்குள்ளாகும் நம் ராணுவம் பதிலடி கொடுக்க முடியாமல் போனால், அவர்களின் தைரியம் என்னவாகும்?
* மக்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காத அரசாங்கங்கள் மீது மக்களுக்கு ஆத்திரம் வந்து, அந்த ஆத்திரத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்தால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.
* காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு தீனி கிடைக்கும். தீவிரவாத இயக்கங்கள் மத்தியில், காலம் ஆனாலும் என்றைக்காவது இந்திய அரசாங்கம் காஷ்மீர் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டி வரும் என்ற நம்பிக்கை வலிமை பெறும்.
பாகிஸ்தான் தற்பொழுது பயப்படாத ரௌடியாக மாறிவிட்டது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
1. சீனா பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது. பாகிஸ்தானிய தீவிரவாதி ஸ்கீயுர் ரஹமான் லக்வி பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்டது குறித்து இந்தியா ஐ. நா. சபையில் கேள்வி கேட்க முற்பட்டபோது, சீனா அதை எதிர்த்து, பாகிஸ்தானுக்கு ஊக்கமளித்தது.
2. பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதால், என்ன நடந்தாலும் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாது என்பது அந்நாட்டை ஆண்டவர்களுக்குத் தெரியும்.
இந்நிலையில் காஷ்மீரில் கலவரம் தொடருவது இந்திய அரசாங்கத்திடம் உள்ள தேர்வுரிமைகளை இன்னும் குறைத்துவிடுகிறது. பதிலடி கொடுக்க முடியாத நிலையில் பொதுமக்களின் கோபத்தை எவ்வாறு தீர்ப்பது?
"பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருக்கின்றன என்றால் உங்களிடம் இல்லையா' என்று மக்கள் கேட்பார்கள். அணுகுண்டுகளை உபயோகிக்கப் போவதில்லை என்றால் இவை ஏன் நம் வரிப்பணத்தில் ஒரு பெரும் பகுதியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன?
சிக்கலான இந்த நிலையில் இருந்து விடுபட வழி என்ன?
இந்தியாவும் உலகமும் இந்தச் சவாலை சந்திக்க தயாராக வேண்டும்.
கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் உலகளவில் ஒருபுது செயல்முறை ஆரம்பித்துவிட்டது. அதாவது, அணு குண்டுகளை வைத்திருக்கும் சில நாடுகள் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டன. யாரும் அவர்களுடன் சண்டைக்கு வரமாட்டார்கள் என்ற தைரியம் அந்த நாடுகளுக்கு இருக்கிறது.
இவற்றில் சீனா முன்னணியில் உள்ளது. தெற்கு சீனக் கடலில் உள்ள சில தீவுகளில் ராணுவ முகாம்களை அமைத்து அந்த தீவுகளை ஆக்கிரமித்துவிட்டது சீனா. பிறகு, அகில உலக தீர்ப்பாயம் இதை விசாரித்து சீனாவிற்கு எதிராக முடிவு அளித்ததை சீனா ஏற்க மறுத்துவிட்டது.
இன்னொருபுறம் வட கொரியா அணுகுண்டுகளைத் தயாரித்து அவை அமெரிக்காவின் மீது பயன்படுத்தப்படும் என்று சொல்லி வருகிறது.
பாகிஸ்தானும் இப்போது அதே பாணியில் தான் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் தைரியத்தில் பயப்படாமல் இந்தியாவை தாக்கி வருகிறது. இது நம் நாட்டுக்கு ஒரு மிகப் பெரிய சிக்கலாகும். அடுத்து, என்றைக்கு, என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சத்துடன் வாழும் நிலை வந்து கொணடிருக்கிறது.
இந்த நிலை மாற வழி உண்டா?
கண்டிப்பாக உண்டு. போர்ச்சூழல் உள்ள நாட்டில் வாழும் மக்கள் நிமிர்ந்து நின்றால் வழக்கத்தைவிட அதிகமான சாதனைகளைப் புரிய இயலும். போர்ச்சூழல் நம் மனதின் சக்தியை வெளிக்கொணரும்.
இன்று நாம் நமக்கு எதிராகச் செயல்படும் சக்திகளால் சூழப்பட்டு இருக்கிறோம். நம் முன்னேற்றத்தை நிறுத்த சதிகள் நடைபெறுகின்றன. இந்தச் சதிகளைத் தகர்த்தெடுத்து நம் வீரத்தை நாம் காட்ட வேண்டும். அதற்குத் தேவை ஒழுக்கம்; ஒற்றுமை; மனதில் திடம்!

கட்டுரையாளர்:
காவல்துறை தலைவர் (ஓய்வு).
சதீஷ் குமார் டோக்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com