இயற்கையிடம் கற்போம்

கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, சிறுத்தை முதலானவை காடுகளில் பகலில் கூட்டம் கூட்டமாக அலைவதைக் காண முடியாது.
இயற்கையிடம் கற்போம்

கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, சிறுத்தை முதலானவை காடுகளில் பகலில் கூட்டம் கூட்டமாக அலைவதைக் காண முடியாது. இரவு நேரங்களில் மட்டுமே, இவற்றின் நடமாட்டத்தைக் காணலாம். பகல் நேரங்களில் மறைவிடங்களில் ஒளிந்தே கிடப்பன.
சாது விலங்குகளான மான், முயல், குதிரை, ஆடு போன்றவை பகலில் மட்டும் கூட்டம் கூட்டமாகத் திரிவதும், இரவில் இருப்பிடங்களில் ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
பறவைகளிலும் இத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். புறா, மயில், கிளி, குருவி, கொக்கு போன்றவை பகலில் மந்தை மந்தையாகச் சேர்ந்தலைவதும், இரவில் மரக்கிளைகளில் துயில்வதையும் காணலாம். எறும்புகள் தேனீக்கள் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக அன்றித் தனித்துக் காண்பது அரிது.
கழுகு, பருந்து, வல்லூறு, ஆந்தை முதலான பறவைகளும் தேள், பூரான், பாம்பு முதலான ஊர்வனவும் கொடிய உயிர் வாழினங்கள். இவை தனித்தனியே திரிவதல்லாமல் கூட்டம் கூட்டமாகப் பலர் கண் படுமாறு அலைவன அல்ல.
கடல், மலைகள், காடுகள், பாலைவனம் முதலான இடங்களில் வாழும் உயிரினங்களின் வாழ்வு முறை இயற்கையோடு ஒன்றியிருக்க, மனித இனம் மட்டுமே இயற்கைக்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனிதனைத் தவிர்த்துப் பிற உயிரினங்களிடையே இயற்கைக்குப் பிறழ்வான வாழ்வுமுறையில்லை.
உயிரினங்களில் எவையும் விதிக்கப்பட்ட வாழ்வு முறைகளில் பிறழ்ந்து இயற்கையைச் சிதைப்பதோ மாசுபடுத்துவதோ இல்லை. உயிரினப் பெருக்கம் மண்வளப் பெருக்கம் அனைத்திலும் இயற்கையைச் சார்ந்தே பங்காற்றுகின்றன.
காற்றில்லையெனச் செயற்கைக் காற்றையோ, இருண்டு கிடக்கிறதெனச் செயற்கை ஒளியையோ தோற்றுவிக்க முயல்வதில்லை. குடியிருப்புக்கென மரங்களையும் மலைகளையும் சிதைப்பதில்லை.
நாகரிகம், எல்லையற்ற நுகர்வு, காட்சிப் பொருள்கள், உணர்வுகளின் வேட்கை, அனைத்தையும் அடையத் துடிக்கும் வெறி இவற்றால் வாழும் பூமியைச் சிதைப்பதும் அகழ்வதும் இல்லை.
'எரிபொருள் உற்பத்தி, பூமிக்கடியில் ஆய்வு' எனப் பூமியின் கட்டமைப்பைக் குலைப்பதில்லை. சிற்சில உயிர்கள் இப் பூமியைக் குடைவதன் காரணம் வாழ்விடம் அமைக்கவே.
மரங்களைச் சிதைக்காமல், கேடு விளைவிக்காமல் கூடுகள் கட்டிக் கொள்ளும் பறவைகள், மண்ணை மிருதுவாக்கி உரம் செய்வதுடன் தம் வாழ்விடங்களையும் அமைத்துக் கொள்ளும் கரையான்கள், பயிர்களின் இனப்பெருக்கத்திற்கு வழிசெய்து, உணவாகத் தேனையும் மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், இவற்றால் உயிர்ச்சேதம், அழிவுகள் இயற்கைச் சேதம் நிகழ்ந்ததில்லை.
இயற்கையின் போக்கில் தீமை விளைவிக்கும் மாற்றங்கள் நிகழ்த்துவது மனிதன் மட்டும்தான். மனித சமூகத்தில் மட்டுமே தலைகீழான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. சமூக விரோதிகளின் பகிரங்க நடமாட்டம் போல நல்லவர்களின் தலைகாட்டுதல் கண்களுக்குப் புலப்படவில்லை.
அலுவலகம், தொழிற்கூடங்கள், பொது இடங்களில் சகஜமாகப் புகைப்பவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு. புகைப்பழக்கம் இல்லாதவர்கள் பத்து விழுக்காட்டினர் மட்டுமே. பத்து விழுக்காட்டினர் நடமாட்டம் அப்படித்தான். சலனமற்ற முகங்கள் இல்லை.
அலுவலக ஓய்வறையைப் புகை மண்டல மாக்குவது அதிக விழுக்காட்டினர்தாம். புகைத்தல் இல்லாத ஓரிருவர் சேர்ந்து கலந்துரையாடுவதே அதிசய நிகழ்வாகும். மேலதிகாரியும் புகைப்பவராக இருந்தால் புகைப் பிரியர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
அலுவலக நேரத்தைச் சரியாகப் பின்பற்றுவோர் பத்து விழுக்காட்டினர்தாம். அலுவலகத்தையே தூக்கி நிறுத்தும் இவர்களை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இருக்கும் ஐந்து பேர்களும் ஒருவருக்கொருவர் கருத்துகள் பரிமாறிக் கொள்வதில்லை. உதவிகள் செய்யவும் அச்சமும் தயக்கமும் காட்டுவர்.
அலுவலகத்தை மதிக்காத 90 விழுக்காட்டினர் வைத்ததே சட்டம். இவர்களில் ஒருவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமானால் தேனீக்களாக மொய்த்து விடுவர்.
லஞ்சம் ஊழல் தொடர்புள்ளவர்களே அலுவலகங்களில் மிகுதியாகவும், மற்றவர்கள் ஒரு சிலராகவே இருப்பர். ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நேர்மையாளர்களிடம் இல்லை.
ஊழல்வாதிகளைக் கண்டு நிர்வாகம் அஞ்சுகிறது. ஒதுங்குகிறது. நேர்மையாளர்களுக்கே நெருக்கடி மற்றும் பனிச்சுமைகளை ஏற்றுகிறது.
குடிப் பிரியர்கள், ஊழல்வாதிகள், ரெளடிகள், கொலைக் குற்றவாளிகள் தலைமைப் பீடத்தில் உயர்ந்த இடத்தில் நிற்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்குப் பயம் கலந்த மரியாதை நிறையவே உண்டு.
மாலை மரியாதைகளுடன் கெளரவப் பட்டங்களும் அவர்களுக்கே. ஆனால் நல்லவர்களும் நேர்மையாளர்களும் தனித்துவிடப் படுகிறார்கள். சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுகிறார்கள்.
நாட்டின் இத்தகைய வளர்ச்சி ஆரோக்கியமானதல்ல. பொருளாதாரம் அறிவியலில் தன்னிறைவு எட்டியதாகத் தோன்றினாலும் நிரந்தரமான தன்னிறைவாகாது. நல்லவர்கள் வீதிகளில் வலம் வரவும் பாம்பு போன்றவர்கள் வீதிகளில் வலம் வர அச்சப்படவும் வேண்டும். இந்த மாற்றம் ஏற்படுமா?
ஊழல்பேர்வழிகளுக்கே மரியாதை செய்யப்படுவதும், நேர்மையாளர்கள் ஓரங்கட்டப்படுவதும் தொடர்ந்து நிகழும் சமுதாயத்தில் வளரும் இளஞ்சிறார்களும், இளைஞர்களும் எப்படி நல்லவர்களாக உருவாக்கப்படுவார்கள்? '
புறவளர்ச்சியை வெளிச்சமிடும் ஆட்சியாளர்கள் அகவளர்ச்சியால்தான் சமுதாயம் சீரான அமைதி வாழ்வு காணமுடியும் என்று தெளிவு பெறுவார்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com