வாழும் உரிமை வழங்குவோம்

நம் நாட்டில் முதன் முதலில் 1995}ஆம் ஆண்டு ஊனமுற்ற நபர்கள் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சம பங்கேற்பு) சட்டம் என்ற 74 பிரிவுகள் அடங்கிய ஒரு சட்டம் அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

நம் நாட்டில் முதன் முதலில் 1995}ஆம் ஆண்டு ஊனமுற்ற நபர்கள் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சம பங்கேற்பு) சட்டம் என்ற 74 பிரிவுகள் அடங்கிய ஒரு சட்டம் அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
அச்சட்டத்தின்படி மாநிலந்தோறும், மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகங்கள் திறக்கப்படுவது உறுதியாகியது. மேலும், அவர்களுக்கான நலதிட்டங்களை செயல்படுத்துவதிலும் சிறிது வேகம் காணப்பட்டது என்பது உண்மையே.
அதேசமயம் அவ்வேகம் போதுமானதாக இருந்ததா? மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை உயர்ந்துவரும் அளவிற்கு அவ்வலுவலகங்களின் எண்ணிக்கையோ செயல்திறனோ உயர்ந்ததா? அதற்கான பதில் இல்லை என்பதுதான்.
ஒரு மனிதன் மூன்று வகையில் மாற்றுத் திறனாளியாக உருவாகிறான். ஒன்று பிறப்பிலேயே, இரண்டாவது நோய் மூலமாக, மூன்றாவது விபத்தின் மூலமாக.
அவ்வாறு ஊனமுற்ற ஒரு நபர் அவருடைய குடும்பத்தைச் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு இயற்கையாகவே தள்ளப்படுகிறார். அதன் பிறகு அந்த நபர் படும் சொல்லொனா துயரங்களை யாரும் அறிய மாட்டார்கள். அந்த நபர்களின் மனம் மட்டுமே அறியும்.
இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதற்குகூட தன் வீட்டு நபர்களின் உதவி தேவைப்படும் அளவிற்கு ஊனம் ஏற்பட்டவர்களின் நிலைமை சொல்லி புரியாது.
கல்வி கற்கும் சமயத்தில் பிற மாணவர்களுடன் கல்வி கற்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்.
உதாரணமாக மாடிப் படிக்கட்டுகளில் ஏற இயலாமை. கழிப்பறைகளுக்குச் செல்வதும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் உள்ள சிக்கல்கள். தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு அறைகள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள படிகட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற சின்னஞ்சிறிய பிரச்னைகள்கூட அவர்கள் பெரிய பிரச்னைகளாக எதிர்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார தேவையைப் பொருத்த வரை, தற்காலத்தில் உள்ள விலைவாசி குறியீட்டு அட்டவணையின்படி ஒரு வளர்ந்த நபர் சுமாரான உணவு உண்டு, உடை உடுத்தி, மருந்து மாத்திரைகள் உட்கொண்டு, ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருக்க வேண்டுமென்றால் சராசரியாக குறைந்தது பத்தாயிரம் ரூபாய் தேவை.
ஆனால், உடல் ஊனமுற்றவர்களின் மருத்துவத் தேவைகளோ சராசரி மனிதனின் தேவையைவிட அதிகம்.
நம் தமிழக அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கும் மாதாந்திர உதவித் தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த சொற்பத் தொகையை வைத்துக்கொண்டு ஒரு நபரால் ஒரு மாதத்திற்கான செலவுகளைச் செய்ய இயலுமா? நடைமுறையில் இது சாத்தியமா?
தற்போது நமது நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் 95% கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளை மனதில் கொண்டு கட்டப்பட்டவையல்ல.
அரசு கட்டடங்கள், பொது பயன்பாட்டிற்காக இருக்கும் கல்லூரி, சினிமா தியேட்டர், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகள் சென்றுவர ஏதுவான வசதிகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
நீதிமன்றங்களிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இதுவரைச் செய்யப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தமளிக்கும் விஷயம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 15(2)}இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு குடிமகனும் அவரின் மதம், ஜாதி, நிறம், பாலினம், பிறப்பிடம், ஊனம், ஆகியவற்றைக் காரணம் காட்டி எந்தவொரு கடை, பொது உணவகங்கள், பொது பொழுதுபோக்கிடங்கள் போன்றவற்றில் நுழைவதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது.
பொது கிணறு, நீர்நிலைத் தொட்டிகள், படித்துறைகள், சாலைகள், மற்ற பொதுவிடங்களை பயன்படுத்துவதில் தடை ஏற்படுத்தக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது.
அதேபோல் கடந்த 2016}ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் பிரிவுகள் 16(ண்ண்), 20(2), 40, 41, 42 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளபடி பழைய கட்டடங்கள் மற்றும் பொதுவிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக செய்யப்பட வேண்டிய வசதிகள் செய்யப்படவில்லை.
தமிழகத்தின் பல நீதிமன்ற வளாகங்களிலேகூட அத்தகைய வசதிகள் இன்னும் செய்யத்தொடங்கவே இல்லை என்பது மற்றொரு வேதனை.
வேறு எங்காவது மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், அத்தகைய மாண்புமிகு நீதிமன்றங்களிலேயே அவ்வசதிகள் செய்யப்படவில்லை என்றால் யாரிடம் சென்று முறையிடுவது?
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பு 21}இன் படி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
வாழும் உரிமை என்பது முழுமையான மற்றும் கெளரவமான வாழ்க்கையை வாழ்வதைத்தான் குறிக்கும் என்று நமது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளும் கெளரவமுடன் வாழ நீதிமன்றங்களும், அரசாங்கமும், சமுதாயமும் சந்தர்பம் ஏற்படுத்தி தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com