ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி

இப்போதெல்லாம் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் இயந்திரங்களை நாடி இருக்கும் நிலையே உள்ளது. இயந்திரங்கள் இல்லா வாழ்க்கையை

இப்போதெல்லாம் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் இயந்திரங்களை நாடி இருக்கும் நிலையே உள்ளது. இயந்திரங்கள் இல்லா வாழ்க்கையை நினைத்துகூடப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு இயந்திரங்கள் நம்முடன் ஒன்றிப் போய்விட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் கிடையாது. இதனால் தினமும் அம்மியில் அரைத்து குழம்பு வைப்பர். வாரத்தின் இறுதி நாள்கள் அல்லது பண்டிகை நாள்களில் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி, தோசை சமைப்பார்கள்.
மேலும் வீட்டுக்குத் தேவையான தண்ணீரும் கிணறு அல்லது அடிபம்பு மூலம் எடுக்கப்பட்டது. சைக்கிள்களின் பயன்பாடும் அதிகம் இருந்தது. இதனால் ஆண்கள், பெண்கள் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
அன்றாடம் தங்களுடைய வீடுகளில் செய்ய வேண்டிய பணிகளை அவரவர் செய்து வந்ததால் உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.
ஆனால் இப்போது வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன. துணி துவைப்பதற்கு, அரைப்பதற்கு, ஆட்டுவதற்கு இயந்திரங்களும், அலுவலகம், பிற இடங்களுக்கு செல்ல மோட்டார் சைக்கிள்கள், கார்கள் என வந்துவிட்டது.
இதன் விளைவாக உடற்பயிற்சி என்பதே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. இதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல்வேறு வியாதிகள் பெரும்பாலானோருக்கு வரத் தொடங்கியது.
மேலும் ஜிம் என்று அழைக்கப்படும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு பெரும்பாலானோர் செல்லத் தொடங்கினர். இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் நபர் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்படுகிறது.
ஒரு சில உடற்பயிற்சிக் கூடங்களில் முன்பணமாக மூன்று மாதக் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஒரு சிலர் ஒருவாரம் மட்டும், ஒரு சிலர் ஒரு மாதத்துக்கு மட்டும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்கின்றனர். ஒருசிலரோ வாரம் ஒருமுறை மட்டும் செல்வதுண்டு.
சாதாரணமாக ஒரு நபர் உடற்பயிற்சி மையத்திற்கு மாதக்கட்டணம், டீ சர்ட், ஷு என குறைந்தது ரூ.5,000 வரை செலவு செய்வர். இதுபோன்று செலவு செய்யும் பலர் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ தான். இதற்கு காரணம் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று வந்த பின்னர் உடலில் ஏற்படும் வலிதான்.
உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், நம்முடைய பாரம்பரியமான யோகசானங்களைக் கற்றுத் தரும் மையங்களுக்குச் செல்லலாம். யோகாசனம் செய்வதால் உடலில் வலிகள் ஏற்படுவதில்லை.
தொடக்கத்தில் ஒரு சிலருக்கு ஒரு சில ஆசனங்கள் செய்வது கடினமானதாகத்தான் இருக்கும். தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் ஒரு சில நாள்களில் கடினமான ஆசனங்களை எளிமையாக செய்யலாம்.
யோகாசனங்களை புத்தகங்களைப் பார்த்தோ, விடியோவில் பார்த்தோ செய்வது கூடாது. யோகாசன ஆசிரியரின் வழிகாட்டுதல்படிதான் செய்ய வேண்டும்.
யோகா என்ற வார்த்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது. பழைமையான ரிக் வேதத்தில் யோகா என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் யோகா கலை சுமார் 5000 ஆண்டுகள் முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம். யோகாசனத்தில் பல்வேறு பயிற்சி நிலைகள் உள்ளன.
இதனை முறையாக கற்றுக் கொண்ட பின்னர் வீட்டில் நாள்தோறும் ஆசனப் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
சிறு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகாசனம் செய்யலாம். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம். யோகாசனப் பயிற்சிகளையும் செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்களால் அதிகாலை நேரங்களில் எழுந்து நடைப்பயிற்சி செய்ய முடியாது.
எனவே இதுபோன்றவர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து விட்டு வீட்டருகே உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம். கட்டடங்களில் ஏறும்போது லிப்ட் பயன்பாட்டை தவிர்த்து மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும்போது நிலவும் இதமான சூழல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
மலைப்பகுதியில் வசிப்பவர்கள் மாதம் ஒருமுறை மலையேற்றப் பயிற்சி செய்வதும் சிறந்த உடற்பயிற்சியாகும்.
ஒரு சில பள்ளிகளில் யோகாசனத்துக்கென வகுப்பு ஒதுக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் கடமைக்கென்று இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் நடத்தப்பட வேண்டும்.
பள்ளி சிறார்களுக்கு யோகாசனத்தின் அவசியம் புரியாது. அதை அவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பது போல, அனைத்திற்கும் தீர்வு கண்டு வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் நமக்கு தான் நம்முடைய பாராம்பரியத்தின் அருமை, பெருமைகள் தெரியவில்லை.
நம்முடைய பாரம்பரிய யோகா மேலை நாடுகளில் பிரபலமடைந்தது. அதன் பின்னர் தற்போது இந்தியாவிலும் பிரபலம் அடைந்து வருகிறது.
இன்றைய தேவை பிரபலம் இல்லை ஆரோக்கியம். எனவே நாள்தோறும் யோகா பயிற்சி அல்லது ஏதேனும் ஓர் உடற்பயிற்சி செய்வோம். நோய்நொடி ஏதுமின்றி நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com