கொள்ளை போகும் கோயில் சொத்துகள்!

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்றெண்ணி, யானை கட்டிப் போரடித்த, அந்தக் காலத்தில், கிராமங்களில், அறுவடை முடிந்து விளைச்சலை அளக்கும்போது "முதல் படி நெல்' கோயிலுக்கு என்று ஒதுக்கி விடுவார்கள். 

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்றெண்ணி, யானை கட்டிப் போரடித்த, அந்தக் காலத்தில், கிராமங்களில், அறுவடை முடிந்து விளைச்சலை அளக்கும்போது "முதல் படி நெல்' கோயிலுக்கு என்று ஒதுக்கி விடுவார்கள். 
அதன் பிறகுதான் ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கையையே தொடங்குவார்கள். அந்த அளவுக்குத் தங்கள் மண்ணின் கடவுள் மீதும், உள்ளூர் கோயிலின் மீதும் ஒரு நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தனர்.
கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்தவர்களும் கோயில் நிர்வாகத்துக்கு ஒழுங்காக குத்தகையைச் செலுத்தி வந்தார்கள். கோயில் நிலத்தில் ஓர் அடியை ஆக்கிரமிப்பது என்றால் கூட அச்சப்படுவார்கள், தயங்குவார்கள். நியாய தர்மங்களுக்காக யோசிப்பார்கள். கோயில் சொத்துகளைச் சுரண்டினால் தங்கள் சந்ததி தழைக்காது என்று பயந்தார்கள். அதனால்தான் "சிவன் சொத்து குல நாசம்' என்றார்கள்.
பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதிநாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கோயிலை 2012-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதற்குப் பிறகு கோயில் பராமரிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் பூட்டியே கிடக்கிறது. சுற்றிலும் புதர் மண்டிக் கிடப்பதால், சமூக விரோதச் செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. கோயில் உத்திரங்களில் இருந்த செம்மரக்கட்டைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. கோயிலில் இருந்த சிலைகளும் மாயமாகி உள்ளன.
கோயில் நிலங்களை கையகப்படுத்துவது கூடிய மட்டும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தகுந்த மாற்று நிலம் கிடைக்காதபோது, கடைசி கட்டமாகத்தான் கோயில் நிலங்களை பொது நன்மைக்காக எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன. 
கோயில் சொத்துகளை விற்க முடியாது என அறநிலையச் சட்டம் கூறுகிறது. கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுக்கவும், அதிகாரிகளுக்கு சட்டப்படியான அதிகாரங்கள் இருந்தும் அதை யாரும் செயல்படுத்துவது கிடையாது.
கோயில் சொத்துகளில் இருந்து, 90 சதவீதம் வருமானம் வராமல் இருப்பதும், மிகப் பெரிய அளவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. கோயில் நிலங்கள் கொள்ளை போயிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வேதனை மேலிடுகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்குச் சொந்தமாக இருந்ததாக, அரசின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்போதைய நிலவரப்படி கோயில்களுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களின் பரப்பு 4.78 லட்சம் ஏக்கர். 
அதாவது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் சேர்த்தால், ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தொலைத்திருப்பது என்பது மிகப்பெரிய அநியாயம்! கடந்த 50 ஆண்டுகளில் கோயில்கள் இழந்த நிலங்களின் மதிப்பு, இன்றைய நிலவரப்படி குறைந்தது ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும். 
இது தவிர நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட செயலாக்கத்தின்போது கோயில்கள், சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் தவறாகப் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியே போனால் கோயில்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பதை கல்வெட்டில்தான் பார்க்க முடியும்.
கோயில் நிலத்தை விற்பதற்குத் தக்காருக்கோ, செயல் அலுவலருக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆனாலும், அரசே முன் மொழிந்து, அரசே பரிந்துரை செய்து, அரசே விற்பனைக்கு ஒப்புதலும் அளிக்கும் அநியாயத்தை தமிழகத்தை தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. பொதுநலன் சார்ந்த நோக்கங்களுக்கு கோயில் சொத்துகளைப் பயன்படுத்தலாம் என்றாலும், அதற்குரிய இழப்பீட்டை கோயில்களுக்கு வழங்குவது தானே முறை.
அரசின் திட்டங்களுக்கு அதிக நிலம் தேவை என்றால் நேராக கோயில் நிலத்தில் கை வைத்து விடுகிறார்கள். அதில் தவறில்லை என்றாலும், கோயில் நிலம் மட்டுமால்லாமல் மக்கள் நன்மைக்காக மன்னர்களால் கட்டப்பட்ட நீர் நிலைகளையும் அழிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். 
திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட, இப்படித்தான் விஸ்வேஸ்வரர் கோயிலின் சொத்துகள் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்படி கட்டடங்கள் கட்ட எடுத்துக் கொண்ட நிலங்களில், கோயிலுக்குச் சொந்தமான ஏரியும் அடங்கும். நீர் நிலைகளில் எப்படி கட்டடங்கள் கட்ட முடியும் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படியானால், அரசுக்கும் சாதாரண ஆக்கிரமிப்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? 
கோயில் நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் அல்ல. அரசுக்குச் சொந்தமானதும் அல்ல. அவை கோயிலுக்குச் சொந்தமான பட்டா நிலங்கள். கோயில்களின் வளர்ச்சிக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும் அந்தந்தப் பகுதி மக்களின் நலனுக்கு உதவும் வகையில் தர்ம சிந்தனை உள்ள பலர் கோயில்களுக்கு தங்கள் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை வழங்கினர். 
அத்தகைய சொத்துகளைப் பாதுகாத்து, அவை வழங்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமை. அதை விற்கவோ, தானமாக அளிக்கவோ அரசுக்கு உரிமை இல்லை. ஆனால், அந்தக் கடமையை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைப்போல், ஆலய சொத்துகளும் கொள்ளை போகின்றன.
சமூக சிந்தனையோ, ஆன்மிக சிந்தனையோ இல்லாதவர்களின் கைகளில் கோயில் நிர்வாகங்கள் சென்றதுதான் இதற்கு முக்கிய காரணம். கோயில் சொத்து என்றால் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதுபோல ஆகி விட்டது. 
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, வாடகை மற்றும் குத்தகை தர மறுப்பது என்பது மட்டுமல்லாமல் கோயில் உண்டியல் பணம் கொள்ளை, நகைகள் கொள்ளை என அதிகரித்து வரும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
கோயில் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து திருத்தொண்டர்கள் சபை என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 500 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பான விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் ஒரு சில கோயில்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களே இவ்வளவு என்றால், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களின் உண்மை கணக்கை கேட்டால் மயக்கமே வந்து விடும். 
இது மட்டுமல்ல. கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இயற்கை வளங்களும், கனிம வளங்களும் ஏராளமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. காங்கேயத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், வெங்கட்ரமணர் கோயில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு காங்கேயம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான நிலங்கள் உள்ளன. 
காங்கேயம் பகுதி நிலங்களில் இயற்கையாகவே கிடைக்கும் பச்சைக்கல், மரகதக்கல், சந்திரக்கல் போன்ற ஆபரணக் கற்களையும் கொள்ளையடித்திருக்கிறார்கள். 
கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் கொள்ளை போகாமல் இருக்க வேண்டும் என்றால், மிகச் சரியான நிர்வாக முறை வேண்டியது அவசியம். தற்போது இருக்கும் நிர்வாக முறையின் மூலம் அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்
குறியே.
கோயில் கொள்ளையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும், திட்டங்களும் தாற்காலிகமாக இருந்தால் பயன் தராது. அவை நிரந்தரமான2 ஏற்பாடுகளாக இருக்க வேண்டும்.
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சரியான வழி கோயில்களை அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவிப்பதுதான். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தன்னிச்சையான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் கீழ் கொண்டு வரலாம். 
இந்த வாரியத்தில் சமய அறிஞர்கள், தமிழறிஞர்கள், சமூக நல்லார்வலர்கள் , ஓய்வு பெற்ற நேர்மையான காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றவர்களை இடம்பெறச் செய்யலாம்.
புதிதாக ஏற்படுத்தப்படும் அமைப்பு கோயில் சொத்துகளை பாதுகாப்பதில் ஓர் அரணாகத் திகழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் மட்டுமே கோயில்களைப் பற்றிப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com