தக்க தருணம் இதுவே!

ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. 2004-05 முதல் 2014-15 வரையிலான பத்தாண்டுகளில் இந்திய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த அந்த ஆதாரங்கள், அதிர்ச்சி அளிக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை கட்டாயம் தேவை என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் பரிசீலிக்கத்தக்க விதமாக அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்கள் அமைய வேண்டுமானால், அவற்றில் வெளிப்படை அம்சம் அவசியமானதாகும்.
இந்தப் பத்தாண்டு காலத்தில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் செயல்படும் கட்சிகள் சுமார் ரூ.11,367 கோடி நன்கொடையை "பெயரில்லாதவர்களிடமிருந்து' பெற்றுள்ளதாக, அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது அந்த நன்கொடைகளை அளித்தவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி முதலிடம் வகிக்கிறது. 2004 முதல் பத்தாண்டுகளாக அக்கட்சி மத்தியில் ஆண்ட காரணத்தால், அக்கட்சிக்கு "பெயரில்லாதவர்களிடமிருந்து' ரூ.3,323 கோடி நன்கொடை வந்துள்ளது. இது அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையில் 83 சத
வீதமாகும்.
பாரதிய ஜனதா கட்சி ரூ.2,126 கோடியுடன் அடுத்த இடத்தை வகிக்கிறது. இது அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையில் 65 சதவீதமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கூட இந்தப் பத்தாண்டுகளில் பெற்ற மொத்த நன்கொடையில் 50 சதவீதம் வரை பெயரில்லாதவர்களிடமிருந்து பெற்றுள்ளன.
மாநிலக் கட்சிகளைப் பொருத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் செயல்படும் சமாஜவாதி கட்சி ரூ.766 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதில் 94 சதவீத நன்கொடையாளர் யாரென்பது தெரியாது.
இந்த ஆய்வறிக்கை கவனத்துக்குரிய பல விஷயங்களை அம்பலப்படுத்தியுள்ளது. முக்கியமாக, பெயரற்ற நன்கொடைகள் வாயிலாக இந்தப் பத்தாண்டுகளில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த வருவாய், 2004-05-இல் ரூ.274 கோடியாக இருந்தது, 2014-15இல் ரூ.1,131 கோடியாக அதிகரித்துள்ளது. இது 313 சதவீத வளர்ச்சியாகும்.
இதே காலகட்டத்தில் மாநிலக் கட்சிகள் பெயரற்ற நன்கொடைகளால் பெற்ற வருவாய், ரூ.37 கோடியிலிருந்து ரூ.281 கோடியாக, அதாவது 652 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் மிகவும் கவலையளிப்பது பகுஜன் சமாஜ் கட்சி பெற்றுள்ள நன்கொடை குறித்த விவரமாகும். இக்கட்சிதான் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த கட்சி. தவிர, ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடையாளர்களை அறிவித்து வருவதாக பெருமை பேசிய கட்சியும் அதுதான். அதன் விளைவாக, அக்கட்சி பெற்றுள்ள மொத்த நன்கொடையுமே பெயரற்றவர்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளன. 2004-இல் ரூ.4 கோடியாக இருந்த அக்கட்சியின் வருவாய், 2014-இல் ரூ.112 கோடியானது. உயர்வு 2,240 சதவீதமாகும்.
இந்தத் தகவல்கள் அனைத்துமே, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் பெயரற்ற நந்கொடைகளே ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், கருப்புப் பணத்தின் தோற்றுவாயாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. இந்தப் பிரச்னையில் கட்டுப்பாடற்ற நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போரை நடத்திவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்நிலை நிச்சயமாக ஒரு சவாலாகும். அரசியல் கட்சிகளிடையே நிலவும் இந்த கருப்புப்பண கலாசாரத்தைக் களையெடுக்காமல், பிரதமரின் ஊழலுக்கு எதிரான போர் வெற்றி பெற இயலாது.
"அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்' என்று மோடி பகிரங்கமாகக் கூறியிருப்பது, கட்சிகள் வசூலிக்கும் பெயரற்றோர் தரும் நன்கொடை
என்னும் முரட்டுக்காளையை அடக்கும் குறிக்கோளுடன் அவர் இருப்பதை உணர்த்துகிறது.
தேர்தல் ஆணையமும் இதே திசையில் யோசனைகளைத் தெரிவித்துள்ளது. கட்சிகள் பெறும் நன்கொடைகளை வரைமுறைப்படுத்துவதும், சட்டரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதும் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. பெயரற்றோர் தரும் நன்கொடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜெய்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சட்டப்படி, அரசியல் கட்சிகள் ரூ.20,000-க்குக் குறைந்த நன்கொடைகளைப் பெறும்போது, அவற்றை அளித்தவர்களை வெளிப்படுத்தத் தேவையில்லை. சட்டத்திலுள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகள், தங்களுக்கு வரும் நன்கொடைகள் பெரும்பாலானவற்றை குறைந்தபட்சத் தொகையாகக் காட்டுகின்றன. சிறிய அளவிலான நன்கொடைகளின் ஒட்டுமொத்தத் தொகையே பல கோடியாக மாறுவதாக அவை கூறுகின்றன!
இதன் ஒட்டுமொத்த விளைவையே, ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பு வெளிட்ட ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது, நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற வருவாயில் 71 சதவீதம் முகவரியற்ற ஆதாரங்களிலிருந்து கிடைத்தவையாக உள்ளன!
இதில் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம், ஆளும் கட்சிக்கு அதிக அளவில் நன்கொடை கிடைப்பதாகும். உதாரணமாக, மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறிகள் தோன்றிய காலகட்டமான 2013-14இல் அக்கட்சி ரூ.674 கோடியை வசூலித்துள்ளது. இத்தொகை அனைத்துக் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் 44 சதவீதமாகும். 2014-15இல் அக்கட்சி பெற்ற நன்கொடை மேலும் அதிகரித்து ரூ.970 கோடியை எட்டியது. கட்சிகளின் மொத்த நன்கொடையில் அது 52 சதவீதமாயிற்று.
இதற்கு மாறான காட்சியை காங்கிரஸ் கட்சியிடம் காணலாம். 2013-14இல் ரூ.598 கோடியை வசூலித்த அக்கட்சி (39 சதவீதம்), 2014-15இல் ரூ.593 கோடியை (32 சதவீதம்) பெற்றது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 2013-14இல் இருந்ததுபோல் இல்லாமல் 44-ஆகச் சரிந்ததே அதன் நன்கொடை சரிவுக்குக் காரணம்.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் சுமார் 71 சதவீத தொகை அநாமதேய வரவாக இருப்பதால், அத்தொகையின் பெரும்பகுதி கருப்புப் பணமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. இது முறையற்ற வகையில் ஈட்டிய பணத்திலிருந்து தானமாக அளிக்கப்பட்டதாகவே இருக்கும்.
அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற ஒப்பந்த தாரர்கள் ஆளும் கட்சிகளுக்கு நன்றிக்கடனாக அளிக்கும் தொகைகளும், ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் அரசு ஒப்பந்தங்கள் நமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிற கட்சிகளுக்கு அளிக்கப்படும் தொகைகளும், இந்த பெயரற்ற நன்கொடைகளாகக் காட்டப்படுகின்றன. வர்த்தகர்களும் தொழில்துறையினரும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் இந்த முறையற்ற நன்கொடையே அரசியலில் ஊழலுக்கு வித்திடுகிறது. இந்த நடைமுறையை சுத்திகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் யோசனைகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருக்கிறார். பிற அரசியல் கட்சிகளும் இந்த யோசனையை தயங்காமல் ஆதரிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த இந்த நடவடிக்கையை ஆதரிக்கத் தயார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைச் செயல்படுத்த தற்போதைய சூழ்நிலை மிகவும் பொருத்தமானது. அரசியலில் நுழையும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த, பிரதமர் மோடி பல்வேறு சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறார். பெரும்பாலான கட்சிகள் அதை ஆதரிக்கின்றன. தேர்தல் ஆணையம் இதற்கான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. சட்ட ஆணையமும் நீதித்துறையும் இதை ஆதரிக்கின்றன.
மொத்தத்தில் தற்போதைய சூழல், அரசியலில் ஊடுருவும் கருப்புப் பணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மிகவும் அனுகூலமானதாக உள்ளது. பிறகு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும்?

கட்டுரையாளர்: தலைவர், பிரஸார் பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com