விவசாயத்தை அழித்து வளர்ச்சியா?

காவிரிப் படுகையில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.)

காவிரிப் படுகையில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) மேற்கொண்டுவரும் துரப்பணப் பணிகளால் பல இடங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டதனால் குடிக்கக் கூட தண்ணீர் கிட்டாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் குதித்திருப்பதும் அதனால் உண்டான வன்முறைச் சம்பவங்களும், காவல்துறையினரின் அடக்குமுறையும் குடிமக்களின் வாழ்வாதாரம் தொடர்பான அடிப்படைச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.யால் அமைக்கப்பட்டுள்ள துரப்பணக் கிணற்றுப் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்குப் பெரும் குழாய்களை ஓ.என்.ஜி.சி. அமைக்க முற்பட்டபோது அக்கிராம மக்கள் அதை எதிர்த்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனை எதிர்த்து வீட்டிற்கு வீடு கருப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாக கதிராமங்கலம் வந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 30- ஆம் தேதியன்று ஓ.என்.ஜி.சி. குழாய் ஒன்றில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு அங்குள்ள வயல் ஒன்றில் பரவ அந்தப் பகுதி மக்களின் போராட்டம் மேலும் வலுத்துள்ளது.
கதிராமங்கலம் மட்டுமல்ல, காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய், எரிவாயு துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பல கிராமங்களில் நிலத்தடி நீர் கெட்டுள்ளது. முன்பெல்லாம் 40 அல்லது 50 அடியில் நல்ல நீர் கிடைத்த இடங்களிலெல்லாம் இன்று நீர்மட்டம் கீழிறங்கிவிட்டது.
ஆழ்துளையிட்டு குழாய் அமைத்தால் அதில் எண்ணெய் கலப்புடனேயே தண்ணீர் வருகிறது. இதுமட்டுமல்ல, காரியாமங்கலம் எனும் கிராமத்தில் துரப்பணப் பணியின்போது வெளியேறிய வாயு கிராமத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
மயிலாடுதுறை நகருக்கு அருகிலுள்ள நாஞ்சில் நாடு என்கிற இடத்தில் துரப்பணம் நிறுத்தப்பட்ட ஒரு குழாயிலிருந்து வெளியேறிய வாயு காற்றில் பரவ அருகிலிருந்த பள்ளி மாணவிகள் மயக்கமுற்றுள்ளனர்.
எனவே இது ஏதோ கதிராமங்கலத்தில் மட்டும் நடந்துள்ள ஒரு சம்பவம் என்று சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
எண்ணெய், எரிவாயுத் துரப்பணப் பணிகளின்போது குழாய்களில் கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்கள் ஏற்படுவதெல்லாம் நடந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் எனும் ஊரில் 2014- ஆம் ஆண்டு ஜூன் 27- ஆம் தேதியன்று நடந்த தீ விபத்து. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் மாண்டனர்.
விபத்திற்கான காரணம், அப்பகுதி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவு அங்கு ஒரு மேக மூட்டத்தைப் போன்று சூழந்துள்ளது. காலையில் ஒரு தேநீர்க் கடைக்காரர் வெந்நீர் பாய்லரை பற்ற வைத்தபோது அது பெரும் தீயாகி விபத்தானது.
இதுபோலவே துரப்பணத்தின்போது வெளியேறும் காற்றில் எளிதில் கலந்துபோகக் கூடிய வாயுக்களும் உள்ளன. தப்பிவிடும் வாயுக்கள் (Fugitive Emissions)   என்றழைக்கப்படும் பென்சீன், டோலூயின், ஈதைல் பென்சீன், க்ஸைலீன் போன்ற வாசமற்ற வாயுக்களும் எண்ணெய் துரப்பணத்தின்போது வெளியேறுகின்றன. இவை யாவும் உடல் நலத்திற்கும், தாவரங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடானவை.
இவை மட்டுமின்றி, ஹைட்ரஜன் சல்பைட் வெளியேற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். மூச்சுத் திணறல், சுவாச மண்டலம் பாதிப்பு என்று ஹைட்ரஜன் சல்ஃபைட் மிக அதிகமாக காற்று மண்டலத்தில் (10 இலட்சத்தில் 700 துகள்கள் என்கிற அளவிற்கு) கலந்தால் அது மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது.
எண்ணெய் துரப்பணத்தின் போது புவியை வெப்பமடையச் செய்யும் கரியமில வாயு (கார்பன் டையாக்ஸைட்) வெளியேற்றமும் நிகழ்கிறது. இது மழைப் பொழிவை பாதிக்கவல்லது.
எனவே எண்ணெய், எரிவாயுத் துரப்பணம் ஆபத்துகள் நிறைந்தது என்பதிலும், அது மக்கள் வசிக்கும் அல்லது தொழிலாற்றும் பகுதிகளில் இருக்கத் தகாதது என்பதிலும் எந்த ஐயமும் கிடையாது.
ஆகவே இன்றைக்கு காவிரிப் படுகை மக்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பு என்ற பெயரில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன் எடுப்பு போன்றத் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தங்களுக்கும் விவசாயத்திற்கும் இத்திட்டங்களால் ஏற்பட்டுவரும் பாதிப்பே.
உலகில் எந்த நாட்டிலும் மக்கள் வாழும் பகுதிகளிலோ அல்லது அவர்கள் தொழிலாற்றும் இடங்களிலோ இப்படிப்பட்ட திட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் நமது நாட்டில் இத்திட்டங்களைப் பற்றிய உண்மை விவரங்களை மக்களிடம் எடுத்துக் கூறாமல் நிறைவேற்றப்படுகின்றன.
துரப்பணம் தொடர்பான உண்மைகள் இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் சிலரால் தூண்டிவிடப்படுவது என்றும், இவை வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் என்றும் ஓ.என்.ஜி.சி.யின் காவிரிப் படுகைக் குழு பொது மேலாளர் பவன் குமார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.
ஓ.என்.ஜி.சி.யின் துரப்பணப் பணிகளுக்காக தங்கள் விளை நிலங்களை மனமுவந்து கொடுத்தவர்கள் இம்மக்கள். இன்றைக்கு நேற்றல்ல, 1964ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டுக்காலமாக காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றில் எத்தனை இடங்களில் எண்ணெய் இருப்பிற்காக வெடி வைத்துச் சோதனை நடத்தப்பட்டபோது விவசாய நிலங்களில் இயங்கிவந்த எத்தனை ஆழ்துளை நீர்க் குழாய்கள் செயற்றுப் போயின? அப்போதெல்லாம் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடினார்களா? இல்லேயே.
ஆனால் இன்றைக்கு நிலை என்ன? மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மன்னார்குடி வட்டத்தில் 651 சதுர கி.மீ. பரப்பை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியபோதுதான் விவசாயிகள் போர்கொடி உயர்த்தினார்கள்.
தொடர்ந்து பல்வேறு விபத்துகள், நிலத்தடி நீர் கெட்டுப் போனது, குடி நீருக்குக் கூட வழியில்லாத நிலை என்றெல்லாம் நிலைமை மோசமடைந்த காரணத்தினாலேயே அவர்கள் எண்ணெய் துரப்பணப் பணிகளை நிறத்தக் கோரி போராடுகிறார்கள்.
எண்ணெய், எரிவாயுத் துரப்பணப் பணிகள் தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயத்தையே அழித்துவிடுகிறது என்பதை உணர்ந்ததால் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். எனவே இது வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் அல்ல, தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை காத்துக்கொள்வதற்கான போராட்டம். இதனை அரசும், அரசுத் துறைகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எண்ணெய் துரப்பணப் பணிகள் வளர்ச்சிகானது என்று கூறுகின்றனரே, இத்தனையாண்டுக் காலமாக தங்கள் நிலத்தையெல்லாம் அளித்த விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்ட வளர்ச்சி என்ன? அவர்கள் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்தது தவிர. நமது நாட்டின் எரிசக்தித் தேவைக்கு எண்ணெய், எரிவாயு தேவைதான், அவசியம் தேவைதான். ஆனால் அதைவிட அதிகமாக உயிர் வாழ்வதற்கு உணவுத் தேவை இருக்கின்றதே, அதனை தவிர்த்திட முடியுமா?
காவிரிப் படுகையில் வாழும் பல கோடி மக்களின் வாழ்வும், வளர்ச்சியும் விவ
சாயத்தைச் சார்ந்தே இருக்கிறது.
எரிசக்தித் தேவைக்கு மாற்று இருக்கிறது. இதுவரை அனல், புனல், அணு சக்தி ஆகியவற்றில் இருந்து மின்னாற்றலைப் பெற்றுவந்த நமது நாடு கடந்த 3 ஆண்டுகளில் 13,000 மெகா வாட் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது.
உலகமே சூரிய ஒளி, காற்றாலை போன்ற பசுமை ஆற்றல்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்கள் மின்கலத்தால் இயக்கும் நிலையை நோக்கி தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கிறது. அதில் இந்தியா பின்தங்கிடாது என்று மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார்.
எனவே உலகம் செல்லும் பாதையில் இந்தியாவும் செல்கிறது. ஆனால் வளர்ச்சி என்ற பெயரால் விவசாயத்தை அழிந்திட அனுமதிக்கலாமா?
ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும் என்பது உலக நியதிதான். ஆனால் நாம் இழப்பதை விட பெறுவது மேன்மையுடைதாக இருக்க வேண்டும் அல்லவா?

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com