இது ஓர் எச்சரிக்கை மணி!

நரேந்திர மோடி அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்தது என்பதை அளவிடும் தருணம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் வந்துவிடும்.

நரேந்திர மோடி அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்தது என்பதை அளவிடும் தருணம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் வந்துவிடும். அந்த நாட்களில் இன்றைய ஆட்சி தொடர, மற்றுமொரு வாய்ப்பு கொடுப்பதா அல்லது வேறு கட்சிக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பதா என்ற கேள்வி இந்திய மக்களிடையே எழும்.
ஒருவிதத்தில் அந்த அளவிடும் பணி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காலம் ஆக ஆக, அந்தச் சத்தம் மேன்மேலும் பலமாகும். அப்போது இந்தக் கேள்வி குறித்து மக்களின் அபிப்ராயம் என்னஎன்பது இன்னும் தெளிவாகத் தென்படும்.
கடந்த முன்று ஆண்டுகளில் மோடி நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய அர்ப்பணிப்பு, நேர்மை, நாட்டைப் பற்றிய கனவு, முடிவுகளை எடுக்கும்போது அவர் காட்டும் தைரியம், இவை அனைத்தும் பிரதமர் மோடிக்கு ஒரு தனி இடத்தை அளித்திருக்கின்றன.
ரூபாய் நோட்டுகள் மாற்றம் என்ற ஓர் அதிமுக்கியமான நடவடிக்கையை வேறுஎந்த ஒரு தலைவராலும் இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு போயிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மக்கள் அவதிப்பட்டார்கள் என்பது உண்மைதான், ஆனாலும், பிரதமர் மோடியின் இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களே ஆதரவு கொடுத்தார்கள். காரணம், இந்தத் திட்டம் நாட்டு நலனுக்காகக் கொண்டுவரப்பட்டது என்று மக்கள் நம்பினார்கள்.
சில எதிர்க்கட்சிகள் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் மோடியின் இமேஜ்.
இதைப்போலவே ஜி.எஸ்.டி. பற்றியும் சொல்லலாம். சில கஷ்டங்கள்,சில இடைஞ்சல்கள் வந்தாலும் இந்தத் திட்டம் ஏற்கெனவே தடம் பதித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பைப் பொருத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அப்படிப்பட்ட குறைபாடுகளில் பெரும் பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் சீர்செய்யப்பட்டு விட்டன. அத்துடன், பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இதுவரையில் மேற்கொள்ளப்படாத துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரயில்வே துறையைப் பொருத்தவரையில் பல புரட்சிகரமான திட்டங்களைத் தந்த வண்ணம் இருக்கின்றார் அமைச்சர் பிரபு. பிரதமர் மோடியின் எண்ணத்திற்கு ஏற்ப, ரயில்வே அமைச்சர் அல்லும்பகலும் உழைக்கிறார்.
இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் முன்னேறி வருகிறது. விண்வெளி ஆய்வுத் துறையில் சீனாவையும் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.
விண்வெளி ஆய்வில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாதவை. அத்துடன் இஸ்ரோவில் சமீபகாலத்தில் பலவிதமான துறை செயல்பாடுகளையும், குறிப்பாக ஆலைகளையும், கல்வி நிலையங்களையும் கொண்டு வந்திருப்பது பாராட்டிற்குரியது ஆகும்.
அவர்களுடைய இந்த முயற்சி, விண்வெளி ஆய்வு என்ற முக்கியமான ஒரு துறையை பரவலாக்கும் நடவடிக்கை ஆகும். இச்செயல்பாட்டின் மூலம் இந்திய நாடு மிகுந்த பலனை அடையும். இதன்அடிப்படையில் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல வந்துசேரும்.
நாடு இன்னொரு துறையிலும் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. அதுதான் பிரதமரின் மேக்இன் இந்தியா. சமீபத்தில் வெளிநாட்டுப் பொருட்களை வாங்கும்பொழுது, விற்கிறவர்கள் மீது ஒரு நிபந்தனை போடுவது வழக்கமாகி இருக்கிறது.
அதாவது, அவர்கள் இந்தியாவிற்கு விற்கப் போகிற பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது. இவை அனைத்தும் மோடி அரசாங்கத்தின் சாதனைகள்.
ஆனாலும், மோடி அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பவர்களும் வருத்தப்படுவதுபோல சில சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் நடந்து வருகின்றன. அத்துறை உள்துறை ஆகும். உள்துறையின் செயல்பாடுகள் சாதாரண மனிதனை மிகவும் பாதிக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மோடியைத் தாக்க விரும்புவர்களுக்கு தீனி கொடுப்பதுபோலவே சில சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களின் விளைவாக அரசாங்கத்தின் மற்ற சாதனைகளுக்கு கரிபூசுவது போலவும், அவற்றின் பொலிவு குறைந்துபோகும் அளவிற்கும் இந்தச் சம்பவங்கள் அமைந்துவிடுகின்றன. தற்போதைய அரசாங்கம் நாட்டில் மிகப் பெரிய அளவில் ஒரு மதக்கலவரமோ, சாதிக்கலவரமோ நடவாமல் தடுத்துவிட்டது என்பது உண்மை.
ஆனால் ஒரு சாதாரண மனிதன் என்ன கேள்விகள் கேட்பான்? இந்த அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கும் கும்பலை கட்டுப்படுத்த முடியாதா? அப்படிப்பட்ட சம்பவங்கள் ஏன் தொடர்ந்து நடக்கின்றன? அவற்றுக்கு ஏன் அரசாங்கத்தால் முற்றுப்புள்ளிவைக்க முடியவில்லை?
வடகிழக்கு மாநிலங்களில் திரும்பத்திரும்ப பிரச்னைகள் எழுகின்றனவே, அந்தப் பிரச்னைகளுக்கு போதுமான நடவடிக்கையை ஏன் அரசாங்கத்தால் எடுக்க முடியவில்லை? காஷ்மீர் பிரச்னை அரசாங்கத்தின் கையை மீறிவிட்டது போல ஏன் உணர ஆரம்பித்துவிட்டார்கள்? பாதுகாப்பு அதிகாரிகள் மீது நக்சல்கள் திரும்பத்திரும்பத் தாக்குதல் நடத்துவதும் அவற்றை அரசாங்கத்தால் தடுக்க முடியாததும் எதனால்?
இப்படிப்பட்ட கேள்விகள் பொதுத்தளத்தில் கேட்கப்படுவது இயல்புதான்.
மற்ற அமைச்சகங்கள் சாதனைகளைச் செய்கின்றபோது, உள்துறை அமைச்சகம் மட்டும் சில குறைபாடுகளோடு நடந்து கொள்வது எதனால்? இந்த அமைச்சகத்தை லேசாக சரி செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதா? மோடியால் தேவையான மேம்பாடுகள் ஏன் செய்ய முடியவில்லை?
இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் பெரும்பாலும் மோடி அரசாங்கதையும் பா.ஜ.க.வின் செல்பாடுகளைப் பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மனதில் இருக்கிற சந்தேகம் இந்தப் பிரச்னைகளால் மோடி அரசாங்கம் 2019}இல் மீண்டும் ஆட்சிக்கு வராமல் போய்விடுமோ என்பதுதான். மோடி அரசாங்கத்தால் செய்யப்படும் மற்ற நல்ல காரியங்களின் பலன் இந்தப் பிரச்னைகளால் கெட்டுவிடுமோ என்ற பயம் அவர்கள் மனதில் இருக்கிறது.
சில உண்மைகளை நம் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவற்றை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். ஒரு கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும்போது அமைதியாக ஒதுங்கியே உட்கார்ந்து கொண்டிருக்கும் சில மத மற்றும் சாதி அமைப்புகள் தேர்தல் வரும்போது சுறுசுறுப்பாக ஆகிவிடுகின்றன.
2019 நெருங்க நெருங்க, இப்பொழுது அமைதியாக சத்தமில்லாமல் இருக்கிற சிலர் தலைதூக்க வாய்ப்பிருக்கிறது. சமுதாயத்திற்காக இவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி, மக்களின் நலன்களை முக்கியமாகக் கருதி, தொலைநோக்குத் திட்டத்தோடு, திட்டங்களைத் தீட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஒரு கட்சி, இப்படிப்பட்ட உள்நாட்டுப் பிரச்னைகளினால் ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்ற அச்சம்தான் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் மக்கள் மனதில் ஓங்கி நிற்கிறது.
இது அரசாங்கத்துக்கு எதிரான எண்ணம் அல்ல அரசாங்கத்திற்கு ஆதரவான எண்ணம். உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்னைகள், சாதாரண மனிதனை, பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பின் விளைவாக வெளிநாட்டு விஷயங்களில், வெளியுறவு விஷயங்களில் பொருளாதார விஷயங்களில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனைகளைகூட சில சமயங்களில் தங்களுடைய பொலிவை இழந்து விடுகின்றன.
காஷ்மீர்தான் இப்போது மிகப்பெரிய சவாலாக எழுந்து கொண்டிருக்கிறது. உலக அளவில் நம் நாட்டின் மரியாதை உயர்ந்தாலும்கூட, ஓர் அரசாங்கத்தால், கோயிலுக்குச் செல்லுகின்ற பக்தர்களுக்கு, யாத்திரிகர்களுக்குக்கூட பாதுகாப்பு கொடுக்க முடியாதா என்ற கேள்வி நம் நாட்டினர் மனதில் எழத்தான் செய்யும்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிகைகளின் பலன்கள் அடிமட்ட மக்களுக்குப் போய்ச்சேர ஆண்டுகள் ஆகும். இந்த நடவடிக்கைகள் நாட்டுக்கு மிக மிக தேவை என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் தன்னம்பிகை உள்ள சுயலாபம் விரும்பாத ஓர் அரசாங்கம்தான் இதுமாதிரியான நடிவடிகைகளை எடுக்க முடியும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த பொருளாதார பலன்கள் கிடைப்பதற்குள் தேர்தல் வந்து, உள்நாட்டுப் பிரச்னைகளின் விளைவாக அரசாங்கத்திற்கு, பா.ஜ.க. கட்சிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வின் ஆதரவாளர்களுடைய ஆதங்கம்.
அமர்நாத் புனித யாத்திரை சென்று வந்த இந்து பக்தர்கள் மீது காஷ்மீரில் நடைபெற்றத் தாக்குதல் பா.ஜ.க. கட்சிக்கு ஓர் எச்சரிக்கை மணி. உடனடியாக உள்துறை அமைச்சகத்தில் மாற்றங்கள்
செய்து அதன் செயல்பாடுகளை மேம்
படுத்த வேண்டியது அவசியம்!

கட்டுரையாளர்:
காவல்துறை தலைவர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com