கரும்பலகையும் விசைப்பலகையும்

அண்மையில் தமிழ்நாட்டில் பரவலான கவனத்தைப் பெற்ற ஒரு துறையாகப் பள்ளிக் கல்வித்துறை திகழ்கிறது. நாடோறும் புதிய புதிய அறிவிப்புகள்,

அண்மையில் தமிழ்நாட்டில் பரவலான கவனத்தைப் பெற்ற ஒரு துறையாகப் பள்ளிக் கல்வித்துறை திகழ்கிறது. நாடோறும் புதிய புதிய அறிவிப்புகள், அரசாணைகள், செயல்முறைகள் என உயிர்ப்புடன் சுறுசுறுப்பாக இயங்கிவரும் ஒன்றாகக் காணப்படுகிறது.
தொன்றுதொட்டுவரும் தேர்வுமுறைகளில் மாற்றம், கலைத்திட்டம் உருவாக்கம், புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான தொடக்க முன்முயற்சிகள் என்று அதன் செயற்பாடுகள் ஊடகங்கள் வாயிலாக விரிவடைந்து சென்றுகொண்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
இதனிடையே, ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக் கல்விமுறை குறித்தும் செயல்விளக்கம் தரப்பட்டு பாடக்காணொளிகள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூலமாக உருவாக்கப்படுகின்றன.
பின்னர், அவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணொளிப் பாடத்தொகுப்புகளுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வழி காட்டப்படுகின்றன.
இதே காலகட்டத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உலக மொழிகளுள் மிழ்மொழியினைமுதன்மையாக நிலைநிறுத்துவதற்கும் பல்வேறு கட்டபயிற்சிகள்அனைத்துவகை ஆசிரியர் பெருமக்களுக்கும் வழங்கப்படும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.
இதுதவிர, கலைத்திட்டம் கருத்துக்கேட்பு மாநாடும் சென்னையில் தற்போது நடந்து முடிந்துள்ளது. மற்றொருபுறம் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் நேரிடையாகக் கிடைக்கப் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கதாகும்.
பள்ளிக் கல்வித்துறையின் தொலைநோக்குச் செயல்திட்டங்களும் வழிமுறைகளும் அனைத்துப் பள்ளிகளிலுமுள்ள ஆசிரியர்களைக் கரும்பலகையிலிருந்து விசைப்பலகைக்குப் பரிணாம வளர்ச்சி அடையச் செய்வதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
சராசரி வகுப்பறைகள் மெய்நிகர் கற்றல் வகுப்பறைகளாக உருமாற்றப்படுவது இருபத்தோறாம் நூற்றாண்டின் இன்றியமையாதத் தேவையாக இருக்கிறது.
தமிழகக் கல்விச்சூழலில் இது குறித்தசிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் தோன்றியிருப்பது சிறந்ததொரு மாற்றாகும். பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடம் தாக்கமும் செல்வாக்கும் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வியில் தகவல் தொழில்நுட்பங்களின் தாக்கம் மற்றும் அவற்றின் உபயோகங்கள் தவிர்க்க முடியாதவை.
இத்தகைய சூழலில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணினிகளும் வேறுபல கருவிகளும் முறையாக உபயோகப்படுத்தப்படாமலேயே பழுதடைந்துக்கிடப்பது வேதனையளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சி மாவட்டத் தலைநகரங்களில் கணினிக் கற்றல் மையங்கள் மூலமாக அளிக்கப்பட்டன.
ஆனாலும், விசைப்பொறியினைப் பிடிக்கவே அச்சப்படும் நிலையில்தான் பெரும்பாலானோர் காணப்படுகின்றனர். கணினி மற்றும் இணையப் பயன்பாடுகள் என்பவை கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்திற்கு அடிப்படைகளாக உள்ளன.
கணினிப் பயன்பாட்டுக் கல்வியறிவு ஒவ்வோர் ஆசிரியரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்பு.
ஆசிரியர்களில் கணினித் தொழில்நுட்ப அறிவு கொண்டோரின் எண்ணிக்கையானது மிகக்குறைவாகவே உள்ளது. இதற்கு அவர்களைக் குற்றம் சுமத்துவது அறாகா. கற்றல் என்பது தொடர்பயிற்சிகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் ஆகியவற்றால் நிலைநிறுத்தப்படும் நிகழ்வாகும். இது ஆசிரியருக்கும் பொருந்தும்.
கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை பதிவேடுகள் மற்றும் தாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பணிபுரிந்து வந்த வங்கிப் பணியாளர்கள் இன்று கணினியை வெகுசாதாரணமாகக் கையாண்டு வருவது கண்கூடு. இது மாற்றத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவாகும். ஆனால், பள்ளியில் இத்தகு சூழல் இன்னும் கனியாமல் உள்ளது.
இப்போதும் வகுப்பறைக்குள் புகும் ஆசிரியர் தமக்கென சொந்த பாடப்புத்தகம் இல்லாமல் அவதியுறும் நிலையுள்ளது. பாடநூலை மாணவரிடம் வேண்டிப் பெற்றுக் கற்பித்தலை நிகழ்த்தும் போக்குகள் களையப்பட வேண்டும்.
பாடப்புத்தகக் கேட்புப் பட்டியலுடன் வகுப்பு ஆசிரியருக்குரியது என்ற ஒன்றையும் சேர்த்து வழங்கினால் இச்சிக்கல் தீரும். ஏனெனில், பள்ளிப் பாடநூல்கள் வெளிச்சந்தையில் நிகழ்காலத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது.
அதுபோல், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முற்படும் அரசு, ஆசிரியர்களைப் பற்றிக் கவனத்தில் கொள்வதில்லை. பள்ளி மேலாண்மையில் நவீனக்காலச் சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள ஆசிரியரை வளமுடையதாக்குதல் தலையாயப் பணியாகும்.
ஏனெனில், வகுப்பறையில் கற்றல், கற்பித்தலை நிகழ்த்துபவராக ஆசிரியரே உள்ளார். அவரை விடுத்து, கல்வியில் மாற்றங்களைக் கொணர நினைப்பது நல்ல விளைவைத் தராது.
ஆகவே, மெய்நிகர் வகுப்புகள் திறமுடையதாக அமைய தகவல் தொழில்நுட்பக் கருவிகளை எளிதில் கையாளும் திறன் மற்றும் பயன்படுத்தும் திறன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் இயல்பாக அமைந்திடுதல் அவசியமாகும்.
அதற்கு ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தத்தம் பாடப் பொருளுக்கேற்ற மெய்நிகர் வகுப்பறைப் பாடத்திட்டங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளைத் தாமே சொந்தமாக உருவாக்க, தக்க வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் முக்கியம்.
ஆசிரியருக்குரிய தகவல் தொழில்நுட்ப வளங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல் அரசின் கடமையாகும். வளமிக்க ஆசிரியரால்தான் வளமான மாணவரை உருவாக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com