சரியான பாதையை வகுக்கும்!

ஆகஸ்டு 14, 1947 அன்று நள்ளிரவு நேரு, சுதந்திர இந்தியா மலர்ந்ததை தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சின் மூலம் உலகுக்கு அறிவித்தார்.
சரியான பாதையை வகுக்கும்!

ஆகஸ்டு 14, 1947 அன்று நள்ளிரவு நேரு, சுதந்திர இந்தியா மலர்ந்ததை தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சின் மூலம் உலகுக்கு அறிவித்தார். நாடே உறங்கிக் கொண்டிருந்த பொழுது நரசிம்மராவ் அரசு தனது 1992 பொருளாதார சீர்திருத்தத்தின் மூலம் உலகையே ஆச்சரியத்திற்கு உட்படுத்தியது. உலக சந்தை ஒருங்கிணைக்கப்படும் வேலையில் நரேந்திர மோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் இந்திய சந்தையை ஒருங்கிணைத்து வருகிறார்.
இதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவை 'ஒரு நாடு, ஒரு வரி' என்ற புதிய வரி சீர்திருத்தத்திற்குஅழைத்து செல்கிறார். ஜி.எஸ்.டி. மசோதா பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. எந்த புது முயற்சியும் ஒரு புதிய நம்பிக்கையுடன் எடுக்கப்படுகிறது. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை இந்தியாவின் வளர்ச்சி ஜி.எஸ்.டி. மசோதா மூலம் வலுப்படும். ஜி.எஸ்.டி. நீண்ட மாற்றத்திற்கு உட்பட்டு சரியான பாதையை வகுக்கும்.
ஜி.எஸ்.டி. மசோதா தொடங்கப்படுவதை அறிவிக்கும் விளம்பரம் ஆறு முக்கிய நன்மைகளை உணர்த்துகின்றது. எளிதான வரி இணைப்பு, குடும்ப அமைப்புக்கான செலவு சீரமைப்பு, ஒரே பாரதத்திற்கான உருவ அமைப்பு, எளிதான வரி அமைப்பு, பொருளாதார நலம், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நன்மை.
ஒவ்வொரு நன்மையும் விவாதத்திற்கு உட்படுத்தபடலாம். ஆனால் இவை அனைத்துமே நாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. நன்மைகளை பெறலாம் என்ற அரசின் நம்பிக்கைக்கு அனைத்து அரசு, தனியார் மற்றும் நுகர்வோர்கள் சேர்ந்து வளம் தர வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற சமூக வளர்ச்சி துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பொதுக் கருத்தாகும். கல்விக்குத் தேவையான நன்மைகள் மேலே குறிப்பிட்ட அம்சங்களில் உள்ளடங்கி இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி.
கல்வி நிறுவனங்களின் 'கட்டணம்' என்பது ஒரு எதிர்மறை பட்டியலிலே உள்ளது. ஆல்கஹால், பெட்ரோலிய பொருள்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றிற்கு வெளிப்படையான தீர்மானத்தை பார்க்கும்பொழுது, கல்வியின் நிலை என்ன என்பது ஆராய்ச்சிக்கான அம்சமாகும். ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு பிறகு கல்வியின் நிலை சந்தோஷமும் துயரமும் நிறைந்த ஒரு கலவையாகவே இருக்கும்.
மூத்த வழக்குரைஞரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான கே. பராசரன் மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவைவரி மசோதா பற்றி பேசியது, சட்டம், தர்மம் ஆகியவற்றின் ஆழ்ந்த வெளிப்பாடாக அமைந்தது. வரி என்ற வார்த்தையின் மூலத்தை எடுத்துரைத்து, வால்மீகி மற்றும் காளிதாசர் வரி விதிப்பு 16.66 சதவீதம் மட்டுமே இருக்கலாம் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
வரி மக்களை மென்மையாக தொடுவதற்காகவே தவிர நெருக்குவதற்காக அல்ல என்று அவர் கூறினார். 16.66 சதவீதம் என்பது கணித மாயமாகவே உள்ளது. ஏனெனில் ஜி.எஸ்.டி. வரி ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு சேவைக்கும் வெவ்வேறு விதமாக விதிக்கப்படுகிறது. இந்த மசோதா, 'சேவை' என்ற வார்த்தையை தெளிவில்லாமலே பயன்படுத்தி வருகிறது.
ஜி.எஸ்.டி.என். போர்டலில் பல்வேறு சேவைகளின் பட்டியல், பொருட்களின் தன்மை மற்றும் ஜி.எஸ்.டி.யின் பல்வேறு வரி விகிதம் ஆகியவை சட்ட வல்லுநர்கள், கணக்கியல், நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோருக்கு ஒரு சவாலாகவே உள்ளன. இந்த சவாலை ஜெயிப்பதற்கான முயற்சிகளை எடுத்தாலும் ஜி.எஸ்.டி. மசோதா உயர்கல்வித் துறைக்கு ஒரு கவலையாகவே உள்ளது.
2013-14 வரை கல்வி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து முழுவதுமாக பிரிவு 66டி-ன் படி விலக்கு அளிக்கப்பட்டது. சேவை வரி கல்விநிறுவனங்களின் அனைத்து சேவைகளுக்கும் அறிமுகப்படுத்தியபோது, எதிர்ப்பு கிளம்பியது. அதனடிப்படையில் துணை கல்வி சேவைகளுக்கு(Auxiliry Education Services) மட்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
'துணை கல்வி சேவைகள்' என்பது சரியாக விளக்கப்படாமலே இருந்து, 2014 மத்திய பட்ஜெட்டுக்கு இணங்க (No.6/ 2 0 14 - சேவை வரி 11.07.2014) மத்திய நிதி அமைச்சகம் சில விளக்கங்களை அளித்தது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்த சில சேவைகளுக்கு மட்டும் வரிவிலக்கு அளித்தது.
துணை கல்வி சேவை என்பது பின்வரும் நான்கு வகையறாக்களுக்கு மட்டுமே உண்டு என்று பின்னர் அறிவிக்கப்பட்டது: 1. போக்குவரத்து 2. கேட்டரிங் 3. பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு 4. சேர்க்கை மற்றும் தேர்வு சம்பந்தமான சேவைகள்.
ஜி.எஸ்.டி. வரி அட்டவணை பள்ளி அளவில் உள்ள கல்வி நிறுவனங்களின் நான்கு துணை சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளித்திருக்கிறது. உத்வேகத்திற்கு காத்திருந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு இந்தப் பாகுபாடு ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி அமைச்சம் முழு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்காதது பிரதமரின் தொலைநோக்கு கொள்கைக்கு ஏற்புடையதாக இல்லை. வரி விலக்கைப் பெறுவதற்காக அலகு விலை மதிப்பை குறைக்க முயற்சி செய்யும் உயர்கல்வி நிறுவனங்கள், தங்களுடைய போக்குவரத்து, கேட்டரிங் (உணவக சேவை) சுய செலவுகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளை தாங்களே செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்.
இதனால் அவர்கள் உலகத்தரமுள்ள பேருந்து ஆபரேட்டர்களாகவும், கேட்டரர்களாகவும் மட்டுமே ஆவார்கள். முக்கிய கவனம் செலுத்த வேண்டிய ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வியில் கவனம் செலுத்துவதற்கான அடிப்படை ஊக்கத்தை இக்கல்வி நிறுவனங்கள் இழந்து விடுகின்றன.
கல்வி நோக்குடன் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் இந்த சேவைகளை மூன்றாம் தரப்பின் பொறுப்பில் விட்டால் அது கல்விக்கான செலவை மேலும் உயர்த்துவதுடன் நடுத்தர மற்றும் கீழ்மட்டத்தில் இருக்கும் சமூகம் உயர்கல்வியை பெற முடியாமலும் செய்துவிடும்.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக பெருநிறுவனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வரிவிலக்குளை அளித்து வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களில் ஒன்றான இழப்பு வருவாய் அறிக்கையை (Statement of Foregone Revenue)   யாரும் படிப்பது கூட இல்லை. கடந்த 10-12 வருடங்களாக பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நேரடி - மறைமுக வரி ஊக்கங்கள் சுமார் ஐந்து லட்சம் கோடிக்கு மேல்.
விலக்குகளால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க செல்வம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த விலக்குகளை அமல்படுத்துவது குறித்த சிந்தனை ஆரம்பமாகியிருப்பதால் சமூக வளர்ச்சிக்காக உயர்கல்விக்கு இந்த சேமிப்புகள் மாற்றப்பட வேண்டும். இதனால் அரசுக்கு கூடுதலான செலவு எதுவும் ஏற்படாது.
சமுதாயத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்கு தனிமனித கல்வி அளவு முக்கியமாகும். ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மூலம் கிடைக்கும் பொருளாதார முன்னேற்றம், சமூக - பொருளாதார இடைவெளியைக் குறைக்க வேண்டும். இது உலகமெங்கும் ஏற்கப்படும் விஷயமாகும்.
ஒரு நாட்டின் கல்வி முன்னேற்றத்தின் அளவுகோலாக ஐ.நா. கூறியுள்ள மொத்த சேர்க்கை விகிதம்(Gross Enrolment Ratio - GER),, கல்வியின் இலக்குகளில் முக்கியமாக ஒன்றாகும். 2020-இல் இந்தியாவின் உயர் கல்வியில் ஜி.இ.ஆர். 30 சதவீதம் அடைய வேண்டும் என்ற ஒரு இலக்கை மத்திய மனித வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை  (MHRI) அமைத்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன் 10 சதவீதமாக இருந்த இந்த இலக்கு, தற்பொழுது உயர்ந்திருப்பது நல்ல அறிகுறியாகும். வளர்ந்து வரும் ஜி.இ.ஆர்.-இன் வேகம் தடையில்லாமல் இருக்க வேண்டும். ஏதாவது தடை ஏற்பட்டால், வளர்ந்து வரும் ஜி.இ.ஆர்.-க்கு பின்னடைவு ஏற்படும். இந்த நான்கு சேவைகளுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. விலக்காவிட்டால், ஜி.இ.ஆர். தடைபடுவதுடன் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிறுவனங்களின் ஊக்கமும் குறையும்.
ஒரு மூத்த கல்வியாளர் 'இத்தகைய சேவைகளை பல்கலைக்கழகங்களே செய்தால், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒரு மாநகராட்சியின் தலைமை போல் செயல்படுவார். காய்கறி விநியோகம், சமையல் எரிவாயு, பாதுகாப்பு சேவகர்கள், பேருந்து போக்குவரத்து மற்றும் காலந்தவறாமை போன்றவை அப்பல்கலைக்கழகங்களின் தினசரி வேலையாக வந்து விழும்' என்றார்.
இப்பொறுப்புகளைப் புறக்கணிக்க வேண்டாம். அவற்றை மூன்றாம் தரப்பின் பொறுப்பில் விட்டுவிடலாம். இந்த விலக்கை இந்தப் புதிய ஜி.எஸ்.டி. ஊக்குவிக்காததால் இப்பணிகளை உயர்கல்வி நிறுவனங்களே செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இது உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முன் இருக்கும் ஒரே நம்பிக்கை உயர்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய வரிவிலக்காகும். உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய துணைக்கல்வி சேவைகளை தாங்களாகவோ வெளிநிறுவனங்கள் மூலமாகவோ அளித்தால் அதற்கு முழு சேவை வரி விலக்கை அளிக்கலாம் என்று கவுன்சில் அறிவித்தால் அது உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மென்மையான கைக்குலுக்கலாக இருக்கும். இல்லையெனில் இது ஒரு குத்து சண்டையின் இறுதி அடியாகவே விழும்!

கட்டுரையாளர்:
முதன்மையர்,
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com