தேவை தேசிய காவல் அமைப்பு

ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்கு முன்பாக நமது சமூகத்தை கருப்பு - வெள்ளை காட்சிகளாக மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அந்த நாள்களின் அதிகபட்ச குற்றங்களே திருட்டு, கொள்ளை, வழிப்பறி என்ற வரையறையோடு சுருங்கிவிட்டன.

ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்கு முன்பாக நமது சமூகத்தை கருப்பு - வெள்ளை காட்சிகளாக மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அந்த நாள்களின் அதிகபட்ச குற்றங்களே திருட்டு, கொள்ளை, வழிப்பறி என்ற வரையறையோடு சுருங்கிவிட்டன. ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு பணம் பறிப்பதுதான் மிகக் கொடூரமானக் குற்றமாக அன்று கருதப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல்கள் என்ற வார்த்தைக்குக்கூட அப்போது எவருக்கும் அர்த்தம் தெரியாது. பொருளாதார ரீதியாக நடைபெற்ற குற்றங்களின் உச்சமாகக் கருதப்பட்டது, காசோலை மோசடி மட்டும்தான்.
"சைபர் கிரைம்' எனப்படும் இணையவழி குற்றங்கள் பற்றி அன்று யாராவது பேசியிருந்தால் நம் முன்னோர்கள் சிரித்திருப்பார்கள்.
குற்றங்களின் வீரியம் உள்ளூர் எல்லையைத் தாண்டி பரவாத காலம் அது. காவல் நிலைய வரம்புக்குள் கயவர்கள் இருந்தார்கள். இதனால் குற்றங்களைத் தடுக்க முடிந்தது. குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
"அல்ட்ரா மாடர்ன்' யுகமான இன்று மக்களை ஏமாற்ற ஒற்றைக் கணினி போதும். காஷ்மீரில் அமர்ந்து கொண்டு கன்னியாகுமரியின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் கந்தசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருட முடியும்.
குறிப்பிட்ட இடத்தில் இருந்துகொண்டு தேசம் முழுவதும் போதைப் பொருள்களைக் கடத்த முடியும். ஒரு மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி வேறு மாநில மக்களிடம் மோசடி செய்ய முடியும்.
ஆக, குற்றச் சம்பவங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் இப்போது எல்லைகளோ, வரம்புகளோ இல்லை. ஆனால், அதைத் தடுக்க வேண்டிய போலீஸாருக்குத்தான் அத்தனை வரம்புகளும் உள்ளன.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே வேலிகளுக்கு நடுவேதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணமாக சென்னையிலே ஒரு குற்றத்தைச் செய்த குற்றவாளியை தமிழக போலீஸார் தேடி வரும் நிலையில், அந்த நபர் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டால் மகாராஷ்டிர போலீஸாரின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் எழுகிறது.
அந்த மாநில போலீஸாரின் ஒத்துழைப்பு இன்றி அந்தக் குற்றவாளியை கைது செய்ய முடியாது. தன்னிச்சையாக தமிழக போலீஸாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இயலாது.
இதனால், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு காலதாமதமாகிறது. ஒரு இடத்தில் குற்றம் செய்துவிட்டு வேறொரு இடத்துக்குத் தப்பிச் செல்வது குற்றவாளிகளுக்கு எளிதாகிறது.
எல்லை கடந்து அரங்கேற்றப்படும் ஒரு சில குற்றங்களை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. ஓபியம் எனப்படும் போதைப் பொருள் மத்தியப் பிரதேசத்தில் பரவலாகக் கிடைக்கிறது.
அதேபோன்று கஞ்சா மணிப்பூரில் கிடைக்கிறது. அந்த இரு போதைப் பொருள்களும் கடத்தப்பட்டு தேசம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதுஒருபுறமிருக்க, மேற்குவங்கம், ஒடிஸா, நேபாளத்தில் இருந்து இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பல ஆயிரம் மைல்கள் கடந்து பெருநகரங்களில் பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்தப்படு
கிறார்கள்.
பொருளாதார மோசடியை எடுத்துக் கொண்டால், கொல்கத்தாவில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்று, ஒடிஸா, குஜராத், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி வலை விரிக்கிறது. அதில் விழுந்த அப்பாவி மக்களின் பணத்தை சுருட்டி ஏப்பம் விடுகிறது.
இப்படியாக மாநிலங்களைக் கடந்து குற்றவாளிகளின் செயல்பாடுகள் உள்ளன. அதேநேரத்தில், போலீஸாரின் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில எல்லையோடு முடிந்து விடுகிறது.
அதேவேளையில், பிற நாடுகளில் குற்றங்களை விசாரிக்கும் நடைமுறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், பயங்கரவாதம், பெரிய அளவிலான மோசடிகள், ஆள்கடத்தல், இணையவழி குற்றங்கள், சதித் திட்டங்கள் போன்ற குற்றங்களை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான "எஃப்.பி.ஐ.' விசாரிக்கிறது.
உள்ளூர் குற்றங்களை சம்பந்தப்பட்ட பகுதி போலீஸார் விசாரிக்கின்றனர். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை நிலைமை வேறு. நமது சி.பி.ஐ. அமைப்புக்கு எந்த மாநிலத்தில் நடக்கும் குற்றங்களையும் விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், அந்த அமைப்பு தன்னிச்சையாக எந்த வழக்கையும் விசாரிக்க
இயலாது.
ஏதாவது ஒரு மாநில அரசு பரிந்துரைத்தாலோ அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டாலோ மட்டுமே ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது. தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் குறிப்பிட்ட பயங்கரவாத நிகழ்வுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
அந்த அமைப்புகள் விசாரணை சார்ந்தவை. குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு மட்டுமே உள்ளது. தற்கால சூழலில், சர்வதேச அளவில் தொடர்புடைய குற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.
அவற்றைத் தடுத்து நிறுத்த தேசிய அளவிலான காவல் அமைப்பு அவசியமாகிறது. அத்தகைய தேசிய அமைப்பின் வாயிலாக மட்டுமே எல்லை தாண்டிய குற்றங்களை முறியடிக்க முடியும்.
கூட்டாட்சிக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த அதிகார நடைமுறைகள் அனைத்துமே இந்தியாவில் இன்று வரை சிக்கலான விவகாரங்களாகவே நீடிக்கின்றன.
ஆட்சி நிர்வாகம் மற்றும் நிதிசார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன. அப்படி இருக்கும்போது காவல் துறை அதிகாரத்தை மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் சம்மதிக்குமா?
இருப்பினும் மக்களின் நலன் கருதியும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் அரசியல் சாசனத்தில் காவல்துறையின் அதிகாரம் ஒருங்கிணைந்ததாக மாற்றப்பட வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்:
ஐ.பி.எஸ். அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com