பத்மாவதி விவகாரம்: குற்றவாளிகள் யார்?

கும்பல் மனோபாவத்துக்கு எந்தத் தர்க்க நியாயமும் கிடையாது என்பதைத்தான் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி திரைப்படம் குறித்த சர்ச்சை வெளிப்படுத்துகிறது.

கும்பல் மனோபாவத்துக்கு எந்தத் தர்க்க நியாயமும் கிடையாது என்பதைத்தான் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி திரைப்படம் குறித்த சர்ச்சை வெளிப்படுத்துகிறது. வடமாநிலங்களில் இத்திரைப்படத்தைத் தடை செய்யக்கோரிப் போராடும் லட்சக்கணக்கான ராஜபுத்திர சமுதாயத்தினர் உள்ளிட்ட யாருமே படத்தை இதுவரை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் படக்குழுவினருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பத்மாவதி படத்தை எதிர்ப்பவர்களுடைய அச்சம் என்னவென்றால், ஆக்கிரமிப்பாளனான அலாவுதீன் கில்ஜியுடன் சித்தூர் ராணி பத்மினியை இணை சேர்த்துக் காதல் காட்சிகள் படத்தில் இருக்குமோ என்பதுதான். அதை ராஜபுத்திரர்கள் மட்டுமல்ல, சாமானிய இந்தியக் குடிமகன் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ முடியாது.
ஆயினும் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர், மக்கள் அஞ்சுவதுபோல பத்மாவதி படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி, நிலைமையை சுமுகமாக்க முயன்றனர். படத்தின் இரு கதாபாத்திரங்களான கில்ஜியும் பத்மினியும் ஒரு காட்சியில்கூட சேர்ந்து வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். இருந்தபோதும் திரைப்படத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சர்ச்சையை இமாசலப் பிரதேசம், குஜராத் மாநிலத் தேர்தல்களில் பயன்படுத்தவும் சிலர் விழைகின்றனர்.
இதற்குத் தீர்வு விரைவில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மாறாக, பிற்போக்காளர்களின் மிரட்டல்களே அதிகரிக்கின்றன. இதற்குப் பெரும்பான்மை ஹிந்து மக்களிடையே அவநம்பிக்கையை விதைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இடைக்கால இந்தியாவின் வரலாறு காரணமாக இருக்கக் கூடும். குறிப்பாக, நேருவிய, மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களாலும் போலி மதச்சார்பின்மைவாதிகளாலும் எழுதப்பட்ட இந்திய வரலாறு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் விளைவித்திருக்கிறது.
பல்லாண்டுகளாக, இத்தகைய போலி வரலாற்றை எதிர்த்துக் கேட்க ஆளில்லாமல் இருந்தது. ஹிந்து ஆலயங்களை இடித்தவரும், பெரும்பான்மை ஹிந்து மக்களுக்குக் கொடுமை இழைத்தவருமான ஒளரங்கசீப்பை மதச்சார்பின்மை நாயகராகக் காட்ட எத்தனிக்கும் போலி வரலாறு இதுவரை எதிர்க்கப்படவில்லை. வாய்மொழியாகப் பரவிய உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மக்கள் அறிந்திருந்தபோதும், அறிவுஜீவிகளின் நேர்மையற்ற வரலாற்று உருவாக்கத்தை, சுதந்திரம் பெற்ற பிறகான பல பத்தாண்டுகளில் யாரும் கேள்வி கேட்கவில்லை. திருத்தி எழுத முயலவும் இல்லை. மக்களின் அலட்சிய மனோபாவம், அந்தப் போலி வரலாற்றை ஒப்புக்கொண்டதாக ஒரு கருத்தை உருவாக்கியிருக்கிறது. 
2014-ஆம் ஆண்டு வரை தில்லியில் நேருவிய, மார்க்சிய அறிஞர் பெருமக்கள் உருவாக்கி வைத்திருந்த உறுதியான கட்டமைப்பு, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட பலவற்றிலும் தாக்கம் செலுத்தி வந்தது. அதனால் கிடைத்த துணிச்சலால், ஹிந்து நம்பிக்கைகளைக் கேவலப்படுத்தும் வகையில் திரைப்படம் எடுப்பதும், ஓவியம் வரைவதும் (எம்.எஃப். உசேன்) கருத்துச் சுதந்திரமாக முன்வைக்கப்பட்டன.
ஆனால், தற்போது மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதற்கு இரு காரணங்கள். முதலாவதாக, செல்வாக்கான காட்சி ஊடகமான திரைப்படங்கள் மக்களிடம் உருவாக்கும் தாக்கத்தை உணர்ந்த மக்கள், அவற்றில் இடம்பெறும் தவறான கற்பிதங்களைக் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டனர். இரண்டாவதாக, தீய நோக்கத்துடன் இந்திய வரலாற்றைத் திரித்து எழுதிய இடதுசாரி ஆய்வாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையான வரலாற்றை வெளிப்படுத்த விரும்பும் வரலாற்று ஆய்வாளர்களும் உருவாகிவிட்டனர். அவர்கள் உண்மைக்கு நெருக்கமான வரலாற்றை மக்களிடம் சேர்க்கத் துவங்கிவிட்டனர்.
வரலாற்று ஆய்வாளர் ஆர்.சி.மஜூம்தார், பேராசிரியர் கே.எஸ்.லால், டாக்டர் எஸ்.பி.குப்தா, பேராசிரியர் மக்கன்லால், பேராசிரியர் பி.பி.லால் ஆகியோர், இதுவரை எழுதப்பட்ட இந்தியாவின் பழங்கால வரலாற்றிலும், இடைக்கால வரலாற்றிலும் உள்ள புனைவுகளுக்கு சவால் விடுத்து வருகின்றனர். வரலாற்றைத் திருத்தும் அவர்களது செயல்பாடுகள் தேசிய வாழ்க்கையில் பிரதிபலிக்கத் துவங்கியுள்ளன. பத்மாவதி திரைப்படம் குறித்த அதீத அச்சமும், வரலாற்றுத் திரிபுகளைத் தகர்க்கும் அந்தப் போராட்டத்தின் ஓர் அடையாளம்தான்.
இப்போது அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றுக்கு வருவோம். தில்லியிலிருந்து அவர் 1303, ஜனவரி 8-இல் சித்தூர் நோக்கிப் படைகளுடன் கிளம்பினார். சித்தூர்கர் கோட்டையை அவர் முற்றுகையிட்டார். ராஜபுத்திரர்களின் வரலாற்றை நன்கு ஆய்வு செய்தவரான சரித்திர நிபுணர் தசரத சர்மாவின் கருத்துப்படி, பேராச், காம்பிரி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கில்ஜியின் படை முகாமிட்டிருந்தது. 
முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், சரணடைய ராஜபுத்திர மன்னர் ராஜா ரத்னசிங் ஆகஸ்ட் 26-இல் முடிவெடுக்கிறார். ஆனால், மன்னருடன் இருந்தவர்கள் மேலும் சில நாள்கள் போராடலாம் என்று கூறுகின்றனர். அதன் விளைவாக, கில்ஜி படையின் கொடூரத் தாண்டவத்தின் முன்பு 30,000 ஹிந்து வீரர்கள் உயிர்நீத்த பிறகு கோட்டை வீழ்கிறது. அப்போது, எதிரிகளின் கரங்களில் சிக்காமல் இருப்பதற்காக, ராணி பத்மாவதியும் அவருடன் இருந்த அந்தப்புரப் பெண்கள் நூற்றுக் கணக்கானோரும் சிதையேற்றி நெருப்பில் விழுந்து உயிர் துறக்கின்றனர். அவர்கள் ராஜபுத்திர வம்சத்தின் குல வழக்கத்தின்படி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்கின்றனர்.
இந்த இடத்தில் 1540-இல் மாலிக் முகமது ஜயாஸி என்ற இஸ்லாமியக் கவிஞர் எழுதிய உருவகக் கவிதை வரிகளை தசரத சர்மா சுட்டிக்காட்டுகிறார். 'தான் அடைய விரும்பிய பத்மாவதியின் கைப்பிடிச் சாம்பல்தான் கில்ஜிக்கு இறுதியில் கிடைத்தது' என்று அக்கவிதையில் எழுதியுள்ளார் மாலிக் முகமது ஜயாஸி. 
பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கண்ட கவிதையை அடிப்படையாகக் கொண்டே வரலாற்றைத் தீர்மானித்தனர். ராஜஸ்தானிலுள்ள வேறெந்த வீரப் பெண்ணும் ராணி பத்மினிக்கு நிகராக உயர்நிலையில் வைத்துப் போற்றப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார் தசரத சர்மா. ராஜஸ்தானில் ராணி பத்மாவதி என்கிற சித்தூர் ராணி பத்மினி பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள் பல வடிவங்களில் பரவியுள்ளன. ஆயினும், அவை அனைத்தின் மையமாக இருப்பது, பத்மினி அக்கினிக் குண்டம் புகுந்ததுதான். 
'துணிவுள்ள, அழகிய, வெல்ல முடியாத பத்மாவதி, தன்னை அடைய நினைத்த ஆக்கிரமிப்பாளனை முட்டாளாக்கும் வகையில், அச்சமின்றியும், தயக்கமின்றியும், மகிழ்ச்சியாகவும் ஜோஹர் எனப்படும் அக்கினிக் குண்டத்துக்குள் பிரவேசித்தாள்; அதன்மூலம் தன்மானம் காத்தாள்' என்பதே ராஜஸ்தானில் புழங்கும் செவிவழிக் கதைகளின் மையச் செய்தி.
அந்நியன் கில்ஜியிடம் சிக்கி, தன்மானமும், கற்பும் இழப்பதைவிடத் தீக்குள் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வதே மாவீரம் என்று பத்மினி நிரூபித்திருப்பதாக, ராஜபுத்திரர்களும், இதர ஹிந்துக்களும் கருதுகின்றனர். இதையே இந்தியப் பெண்களின் உயர்சிறப்பாகவும், மரியாதைக்குரிய செயற்கரிய செயலாகவும், அவர்கள் முன்வைக்கின்றனர். அதனால்தான் பத்மாவதி, தெய்வாம்சம் பொருந்திய வீராங்கனையாக மக்களின் மனங்களில் உறைந்தாள்.
தற்போது பத்மாவதி திரைப்படத்தை எதிர்ப்போரின் கவலை, துணிவும் அழகும் மிகுந்த பத்மாவதியின் கற்பையும், தியாக உருவத்தையும் வர்த்தக நோக்கில் படக்குழுவினர் திரித்திருக்கக் கூடும் என்பதே. சித்தூர் ராணி பத்மினி இன்றும் ஆவியாக வாழ்வதாக நம்பும் ராஜபுத்திரர்களும் உண்டு. அவளை பாரதப் பெண்மையின் இலக்கணமாக அவர்கள் போற்றுகின்றனர். 
ஆனால், இந்தத் திரைப்படத்துக்கு வக்காலத்து வாங்கும் இடதுசாரி முற்போக்காளர்கள், பத்மாவதி என்ற பாத்திரமே கற்பனையானது என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அவர்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை மட்டும் காயப்படுத்தவில்லை; மக்களின் நம்பிக்கையையும் சிதைக்கின்றனர்.
பிரச்னைக்குரிய இத்தகையவர்களிடமிருந்து பாலிவுட் தள்ளி நிற்க வேண்டும். ஹிந்து நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதையே தொழிலாகக் கொண்டவர்களிடமிருந்து திரைப்படத் துறையினர் விலகியிருக்க வேண்டும். தற்போதைய பிரச்னையின் ஆணிவேரை சஞ்சய் லீலா பன்சாலி குழுவினர் புரிந்துகொண்டால், சிக்கலிலிருந்து எளிதாக விடுபட்டுவிட முடியும். 
ஆனால் இதுவரை, தனது படத்தில் மக்களின் நம்பிக்கைக்கு மாறான காட்சியமைப்போ, வரலாற்றைத் திரிக்கும் எண்ணமோ இல்லை என்று உறுதிபடத் தெரிவிக்க இயக்குநர் பன்சாலி முன்வராதது ஏன்? பிரச்னையை உருவாக்கும் அறிவுஜீவிகளிடமிருந்து பாலிவுட் சற்று விலகியிருந்தாலே, சமூக மோதலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறாது. 
இறுதியாக ஒரு விஷயம். படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் முதன்மையானது. அதைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, பத்மாவதி படக்குழுவினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களை சட்டத்தின் உறுதியான பிடியின்கீழ் கொண்டுவந்து, கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவது அரசின் உடனடிக் கடமையாகும்.

கட்டுரையாளர்:
முன்னாள் தலைவர், பிரஸார் பாரதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com