அறத்தாற்றின் இல்வாழ்க்கை

வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று சொல்வார்கள்.

வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று சொல்வார்கள். ஏனென்றால் திருமணம் முடிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதால், இந்த பழமொழி வந்தது. திருமண நிகழ்வானது, ஜாதகப் பொருத்தத்தில் தொடங்கி, பெண் பார்த்தல், படிப்பு, அந்தஸ்து என பல்வேறு நிலைகளை கடந்து கடைசியில் திருமணம் என்ற பந்தத்தில் வந்து நிற்கும்.
இவ்வாறு நடத்தப்படும் திருமணங்கள் ஒரு கூட்டு விழா போன்றது. பல்வேறு ஊர்களில் இருக்கும் சொந்தங்கள் அனைத்தையும் பத்திரிகை வைத்து அழைத்து அனைவரும் ஒருநாளில் ஒரே இடத்தில் கூடுவது என்பது பெண், மாப்பிள்ளை வீட்டாருக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.
ஒரு சிலர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆகாயத்தில் பறந்தவாறு திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. சிலர் வெகு ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர். அது திருமண பத்திரிகையில் தொடங்கி, பந்தி வரை தொடரும்.
தற்போது ஒரு புது வழக்கம் நகரங்களில் பரவ தொடங்கியுள்ளது. அதாவது திருமண அமைப்பாளர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டால் போதும், அவர்கள் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும்
செய்து கொடுத்துவிடுவார்கள்.
பரபரப்பான சூழ்நிலையில் இதுபோன்று பணம் கொடுத்து திருமண ஏற்பாடுகள் செய்தாலும், நாம் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுபோல் இருக்காது.
ஒரு சில இடங்களில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாணத்துக்கு ஒரு சில வாரங்கள் இருக்கும் சமயத்தில் மாப்பிள்ளை வீட்டாரைச் சேர்ந்தோரோ அல்லது பெண் வீட்டாரைச் சார்ந்தவர்களோ எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி கொண்டாலோ அல்லது மரணம் அடைந்தாலோ, அதை சகுனத் தடையாக கருதி திருமணத்தை நிறுத்தும் வழக்கம் உள்ளது.
விபத்தில் சிக்குவது, மரணம் அடைவது என்பது இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதனால் மாப்பிள்ளை வீட்டாரையோ அல்லது பெண்ணையோ ராசியில்லாதவர்கள் எனக் கூறி திருமணத்தை நிறுத்துவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
அவ்வாறு நிறுத்தும்போது திருமணத்திற்காக செய்த அனைத்து செலவுகளும் வீணாகி விடுகிறது. மேலும் இருவீட்டாருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. பெண் அல்லது ஆணுக்கு திருமணத்தின் மீதான பயம் பற்றிக்கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது.
முன்பு மரபு வழி திருமணம், சேவை திருமணம், போர் நிகழ்த்தி திருமணம், ஏறு தழுவி திருமணம், துணங்கையாடி திருமணம், பரிசு கொடுத்து திருமணம், மடலேறி திருமணம் என பலவகை மணங்கள் இருந்தன.
பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் "யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது.
முன்பெல்லாம் திருமணம் முடிக்க, காளையை அடக்குவது, கல்லை தூக்குவது போன்ற வீரவிளையாட்டுகளுடன் தொடர்புடைய நிபந்தனைகள் வைத்திருந்தனர் பெண் வீட்டினர்.
ஏனென்றால் ஆண் என்பவன் வீரமிக்கவனாக இருக்க வேண்டும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனபலம் அவனுக்கு உள்ளதா என்பதை சோதிப்பதற்காக இதுபோன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் ஆண் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் இப்போது இருக்கும் நிலையோ வேறு. உதாரணமாக மாப்பிள்ளை லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும்; சொந்த வீடு வைத்திருக்க வேண்டும்; அந்த வீடு கடனில் வாங்கியதாக இருக்கக் கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிக்கின்றனர்.
இப்படி நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் இன்று பெரும்பாலான இளைஞர்கள் 35 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.
ஒரு சராசரி இளைஞன் தனது பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்றவற்றை முடித்து வேலைக்கு செல்லும்போது அவனுக்கு வயது 26 என வைத்துக் கொண்டால், பெண் வீட்டார் கேட்பதுபோல் வீடு, கார் என வாங்கி செட்டிலாக குறைந்தது 10 வருடங்கள் ஆகும். அப்போது அந்த இளைஞனுக்கு 36 வயதாகி, வழுக்கை, நரை உள்ளிட்ட பிரச்னைகள் ஆரம்பமாகத் தொடங்கும்.
இப்போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வயதானவர் போன்று உள்ளார் என்று தட்டிக்கழிக்க ஒரு வாய்ப்பு உருவாகிவிடுகிறது.
இவ்வாறு தட்டிகழிக்கப்படுவதால் ஒரு சிலர் தற்கொலை முடிவுக்கும், சிலர் திருமணம் முடியாமலேயே வாழும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலால் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு நல்ல நிலை இருந்தும் திருமணம் கூடாத பலர் உள்ளனர்.
திருமண வாழ்விற்கு பொருளாதாரம் தேவை. அதேசமயம் பொருளாதாரம் மட்டும் வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை பெண் வீட்டார்கள் புரிந்துகொண்டு மாப்பிள்ளையின் குணநலன்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
திருமணம் என்ற சடங்கே ஆணும், பெண்ணும் இன்பம், துன்பங்களை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் உள்ளர்த்தத்தை கொண்டதுதான். ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பெண் புகுந்த வீட்டில் எந்தச் சூழ்நிலையில் கஷ்டப்படாமல் மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணத்தில் தவறு எதுவும் இல்லை.
அந்த பெற்றோரே தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களின் எண்ணம் முற்றிலும் மாறாக உள்ளதை என்னவென்று சொல்வது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com