அச்சமூட்டும் நீலத் திமிங்கலம்!

ரஷியாவில் அறிமுகமாகி பல நாடுகளில் பரவி, இந்தியாவுக்குள் நுழைந்த 'புளூ வேல்' எனப்படும் நீலத் திமிங்கல இணையதள வீடியோ விளையாட்டு,
அச்சமூட்டும் நீலத் திமிங்கலம்!

ரஷியாவில் அறிமுகமாகி பல நாடுகளில் பரவி, இந்தியாவுக்குள் நுழைந்த 'புளூ வேல்' எனப்படும் நீலத் திமிங்கல இணையதள வீடியோ விளையாட்டு, தமிழகத்தையும் பிடித்து ஆட்டுகிறது. இந்தக் கொடூர விளையாட்டின் விபரீதம், மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லுôரி மாணவனை மரணக்குழியில் தள்ளியது. 
அந்தச் சுவடு மறைவதற்குள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்த சசிகாந்த் போரா என்பவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வுகள் பெற்றோர்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
புளூ வேல் மோகத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் விக்னேஷின் கருத்தான, 'நீலத் திமிங்கலம் - இது விளையாட்டல்ல; விபரீதம். ஒரு முறை உள்ளே போனால் வெளியில் வர முடியாது' என்பது நுôற்றுக்கு நுôறு உண்மை. இந்த ஆன்லைன் விளையாட்டை, விளையாட்டு என்று சொல்வதைவிட மெல்லக்கொல்லும் நஞ்சு என்று சொல்லலாம். 
நம்மைப் பற்றிய விவரங்களை முதலில் பதிவு செய்து கொண்டபின் தொடங்கப்படும் இந்த விளையாட்டில், செய்து முடிக்க வேண்டிய 50 சவால்கள் (டாஸ்க்) வழங்கப்படுகின்றன.
முழுக்க முழுக்க மனோதத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்த விளையாட்டில், முதலில் திகில் படம் பார்த்தல், உயரமான இடங்கள் மீது நின்று செல்ஃபி எடுத்தல், சுடுகாட்டுக்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று தொடங்கும் இந்தப் பட்டியலில், உடலில் ரத்தக்காயங்களை உண்டாக்கிக் கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தை உடலில் வரைதல் என சவால்கள் அனைத்தும் விபரீதமானவை. 
இப்படிப் போகும் பட்டியலில் 50-ஆவது அம்சம் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவதாகும். அதாவது, இந்த விளையாட்டுக்குள் வந்தவர்கள், உயிரைவிட வேண்டும் என்பதுதான் இறுதி வடிவமாக இருக்கிறது.
விளையாட்டைத் தொடங்கியபின், அதன் பயங்கரத்தைப் புரிந்துகொண்ட பலரும் அதிலிருந்து விலக நினைத்தாலும் அவர்கள் விலகாதவாறு இணைய வழியாகவே மிரட்டல் விடுக்கப்படுகிறது. அதன் விளைவு இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். 
இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் இந்த விளையாட்டு, ரஷியாவில் 2013-இல் உருவாக்கப்பட்டது. இதை மற்ற கேம்களைப் போன்று பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும். இதை விளையாடுபவர்கள் அதிகாலை எழுந்து ஆன்லைனில் வரும் விடியோக்களைப் பார்க்க வேண்டும். 
இந்த விளையாட்டால், ரஷியாவில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் 130 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
சீனா, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் நுழைந்த இந்த விளையாட்டு, மும்பை, கேரளம், தமிழகம், புதுச்சேரி எனப் படிப்படியாக முன்னேறி பதின்ம வயதுக் குழந்தைகளை பலிவாங்கி வருகிறது. 
ஆனால், இந்த விளையாட்டைக் கண்டுபிடித்த ரஷிய நாட்டைச் சேர்ந்த ஃபிலிப் புடேக்கினோ, 'சமூகத்தின் அழுக்கைக் களைந்தெடுக்கவே இதை நான் உருவாக்கினேன். இந்த விளையாட்டின் மூலம் தங்கள் உயிரை யாரேனும் மாய்த்துக் கொண்டால், அவர்கள் இந்தச் சமூகத்துக்குத் தேவையற்றவர்கள் என்றுதானே அர்த்தம்' என்று காவல்துறையின் விசாரணையில் சொல்லியிருக்கிறார்.
இன்று புளூவேல். அதை தடை செய்து, அதிலிருந்து நமது குழந்தைகளை காப்பாற்றி விட்டோம் என்றால், அதன் பிறகு இதுபோன்ற இன்னொரு விபரீதம் புதிதாய் முளைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? 
ஒவ்வொன்றுக்கும் விழிப்புணர்வு பேரணி, கண்காணிப்பு, சட்ட நடவடிக்கை என்று போய்க் கொண்டிருப்போமா? நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வாசனையையே காட்டாமல் அடுத்த தலைமுறையை வளர்க்கதான் முடியுமா?
இதுபோன்ற விபரீதங்களை செய்ய வேண்டாம் என்று சொன்னாலோ, நாம் கண்காணிப்பது தெரிந்தாலோ, அதை செய்துதான் பார்ப்போமே என்று விடலைகளுக்கு துணிச்சல் துளிர்விடும். 
அப்படி என்றால் இதற்குத் தீர்வுதான் என்ன? புளூவேல் போன்ற சவால்களால் இளம் தலைமுறை ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு கிடைக்கும் தனிமைதான் என்கின்றனர் உளவியல் 
நிபுணர்கள்.
அண்மையில் இரண்டு அனுபவங்கள் கிடைத்தன. முதலாவது, எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் பிரபல டாக்டர். அவர் மனைவி தனியார் கல்லுôரியில் பேராசிரியர். அவர்களுக்கு 2 மகள்கள். மூத்தவள் 2-ஆம் வகுப்பு படிக்கிறாள். நல்ல வாயாடி. சுட்டியும்கூட. அவளிடம் பேசிக்கொண்டிருந்தபோது உனக்கு பிடித்த விளையாட்டு என்ன என்று கேட்டதற்கு அவள் பட்டென்று சொன்ன பதில் 'வீடியோ கேம்' என்பதுதான்.
உடனே நான் 'அவுட்டோர் கேம் விளையாட மாட்டாயா?' என்று திருப்பிக் கேட்டபோது, பதில் அவளின் அம்மாவிடம் இருந்து வந்தது. 'அவுட்டோர் கேம் விளையாடச் சொன்னால், அவள் லேப்டாப்பை (மடிக்கணினி) வீட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்று அங்கு வைத்து விளையாடுவாள்' என்று பெருமையாக கூறினார்.
'உனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்' என்று நான் அடுத்த கேள்வியை கேட்டேன். அதற்கு அவளுடன் படிக்கும் சிலரது பெயர்களை சொன்னாள். 'பக்கத்து வீட்டில், இந்த தெருவில் உனக்கு நண்பர்கள் யாரும் இல்லையா' என்றால் வெறுமனே உதட்டை மட்டுமே பிதுக்கினாள் அந்தச் சிறுமி.
அடுத்தது இன்னொரு நண்பர் சொந்தமாக நிறுவனம் நடத்துகிறார். அதில் பல நுôறுபேர் வேலை செய்கின்றனர். வசதி வாய்ப்புக்குக் குறைவே இல்லை. அவருக்கும் 2 மகள்கள். கல்லுôரியில் படிக்கின்றனர். ஒரு காலை நேரத்தில் அவர் வீட்டுக்கு சென்றதும், வேலைக்கார பெண்மணி வந்து பூஜையில் இருக்கிறார்கள் உட்காருங்கள் என்றார். 
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர், மனைவி, 2 மகள்களுடன் பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தார். சிறிதுநேரம் நான் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட எத்தனித்தபோது, அவர் சில சோப்புக் கட்டிகளைக் கொடுத்தார். இது எதற்கு என்று நான் திருப்பிக் கேட்டதும், 'இந்த சோப்பு என் மகள்கள் வீட்டிலேயே தயாரித்தது. உபயோகித்து பாருங்கள்' என்றார்.
கல்லுôரி போகும் பெண்களுக்கு சோப்பு தயாரிக்கும் வேலை எதற்கு என்று நான் திருப்பிக் கேட்டேன். வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் சும்மா தனிமையில் இருந்தால், செல்லிடப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க தோன்றும். 
அப்படி இல்லாமல் அவர்களுக்குப் பிடித்த வேலைகளை கொடுத்தால் அவர்களின் தனிமையும் தேவையற்றவற்றில் நேரத்தை செலவழிப்பதும் குறையும். அதனால்தான் தினமும் காலையில் குறைந்தது 40 நிமிடம் குடும்பத்துடன் சேர்ந்து பூஜை செய்வோம். அதன் பிறகு படிப்புக்கான நேரம் தவிர மற்ற நேரங்களில் இதுபோன்ற வேலைகளில் அவர்களைப் பழக்கப்படுத்துவோம் என்றார்.
இந்த இரு அனுபவங்கள்தான் இன்று நம் முன் இருக்கும் வாய்ப்புகள். ஆறு வயதில் மடிக்கணிணியில் கேம் விளையாடுவதை ரசித்து, 'என் பிள்ளை சமத்து, யாருக்கும் தொல்லை கொடுக்காமல் விளையாடும்' என்று பெருமை பேசிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது குழந்தைகளுக்கான நேரத்தை அவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்துதரப் போகிறோமா என்பதுதான்.
நம் குழந்தைகளை இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்வதை காட்டிலும், அதை செய்யும் முனைப்பு வராத சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. 
குடும்பத்துடன் ஒரு வேளையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, கோயிலுக்கு செல்வது, சிறு சிறு வீட்டு வேலைகள் செய்யப் பழக்குவது, சமையல் பற்றிச் சொல்லித் தருவது, நாம் கடைக்கு, அலுவலகங்களுக்கு வெளியில் செல்லும்போது உடன் அழைத்துச் சென்று மனிதர்களையும் சமூகத்தையும், அந்த சமூகம் நம் மீது வைத்திருக்கும் மரியாதையையும் புரிய வைப்பது என குழந்தைகளோடு முடிந்த மட்டும் நேரத்தை செலவிடலாம். 
அதோடு கூடவே நல்ல நண்பர்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் தங்களுக்கான பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை பகிர்ந்துகொள்வோர் பெற்றோராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் பிள்ளைகளுடன் நாம் நெருக்கமாவது காலத்தின் கட்டாயம். அப்போது மட்டுமே பிள்ளைகள் தனிமையில் இருக்கும் வாய்ப்புகள் குறையும்.
அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஏற்பாடு குடும்பமும் உறவுகளும்தான். அதை எந்த அளவுக்கு நாம் கட்டிக் காக்கிறோமோ, அதற்காக நாம் எந்த அளவு நேரத்தை செலவழிக்கிறோமோ அந்த அளவுக்கே நமது எதிர்கால சந்ததியும் ஆரோக்கியமான மனக் கேடில்லாத தலைமுறையாக வளரும். 
அன்பும் அரவணைப்புமே நீலத் திமிங்கலம் போன்ற சாத்தான்கள் நம் பிள்ளைகளைக் காவு வாங்குவதைத் தடுக்கும் சக்தி என்பதை உணருவோம்!

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com