மக்களைக் கைவிட்ட மக்கள் பிரதிநிதிகள்

இந்திய நாடாளுமன்றம் முறையாகச் செயல்படவில்லை என்று கடந்த பல ஆண்டுகளாகவே கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அலுவல்கள் பாதி நேரம் கூச்சலிலும்,

இந்திய நாடாளுமன்றம் முறையாகச் செயல்படவில்லை என்று கடந்த பல ஆண்டுகளாகவே கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அலுவல்கள் பாதி நேரம் கூச்சலிலும், அமளியிலும் கரைந்து விடுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. 
ஆனால் அண்மையில் மத்திய நிதி அறிக்கை தாக்கலின்போது நமது நாடாளுமன்றம் அடைந்த வரலாறு காணாத வீழ்ச்சியை எந்தக் கடுமையான அரசியல் விமர்சகரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.
பொதுவாக, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி மே மாத பிற்பகுதியில் நிறைவடைவது வழக்கம். ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கலுடன் கூட்டம் தொடங்கும்; அதன் பின்னர் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் மீதான விவாதம் நடைபெறும்.
அதற்கு அடுத்ததாக பொது நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பொது நிதி நிலை அறிக்கை மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றும் நடைமுறை நான்கு கட்டங்களில் நிறைவடையும். மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான பொதுவான விவாதங்களுக்குப் பல நாட்கள் ஒதுக்கப்படும். அதையடுத்து, பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள், ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் இவை பல வாரங்களுக்கு நடைபெறுவதுண்டு. பல்வேறு துறை ரீதியான செலவினங்களை அரசு எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது, வரி வருவாயை எவ்வாறு அதிக அளவில் திரட்டப் போகிறது என்பது குறித்த அம்சங்கள் அதில் பிரதானமாக இருக்கும்.
அதன் பேரில் அமைச்சர்களும், எம்.பி.க்களும் விரிவாக விவாதம் நடத்துவார்கள். அப்போது குறைந்தது 4 முறையாவது ஒரு எம்.பி.க்கு தனது கருத்தை எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு இறுதியாக, நிதி மசோதாவும், பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டு மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபு.
கடந்த பல பதிற்றாண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு, ஒரு பாரம்பரியம் உருவாக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் செயல்படுகிறது என்று காட்டுவதற்காக அல்ல; இந்த நடவடிக்கைகள் வழியாக ஒரு முக்கிய அரசியலமைப்பு கடமை நிறைவேற்றப்படுகிறது.
வருடாந்தர நிதி ஒதுக்கீடு, மானியக் கோரிக்கை ஒதுக்கீடு, செலவுகளை மேற்கொள்வது தொடர்பான நிதி அறிக்கைக்கு மத்திய அரசு எவ்வாறு ஒப்புதல் பெற வேண்டும் என்பது தொடர்பாக, இந்திய அரசியல் சாசனத்தின் 112, 119 பிரிவுகள் தெரிவிக்கின்றன. இந்த வகையில்தான் அரசின் செலவு மற்றும் வரி திட்டங்களை உள்ளடக்கிய நிதி மசோதா தாக்கல் முதல் நிறைவேற்றுதல் வரை, அவை குறித்து ஆழமாக விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கடந்த 1986-87 ஆண்டில் நடைபெற்ற ரயில்வே நிதி அறிக்கை, பொது நிதி அறிக்கை குறித்து நடைபெற்ற விவாதங்கள், எம்.என். கெளல்- எஸ்.எஸ். ஷக்தேர் எழுதிய 'நாடாளுமன்ற நடைமுறைகள்' குறித்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவை, மக்களவை அலுவல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சான்றுரைத்த கூட்டம் அது.
அந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது மட்டும் மக்களவையில் 19 மணி நேரத்துக்கு எம்.பி.க்கள் பேசினர். அதேபோன்று பொது பட்ஜெட் மீதான விவாதம் 20 மணி நேரம் நடைபெற்றதாக அவைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள், துணைக் கோரிக்கைகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 92 மணி நேரம் விவாதித்தனர். ஆக மொத்தம் அந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 130 மணி நேரம் அலசி ஆராயப்பட்டிருக்கிறது. 1952-இல் நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது முதல் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக 1986-87 பட்ஜெட் கூட்டத் தொடர் அமைந்தது.
அந்த நடவடிக்கைகளுடன் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரை ஒப்பிட்டுப் பார்த்தோமானால், மனதுக்குள் மறையாத வேதனை வந்துதிக்கிறது. 
நிகழாண்டில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய தேதி பிப்ரவரி 1. அன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிதி அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 7 மற்றும் 8 தேதி ஆகிய இரு நாட்களில் வழக்கமான பொது விவாதம், மொத்தம் 12 மணி நேரம் நடைபெற்றது. பின்னர், மானியக் கோரிக்கைகளை துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பரிசீலிக்க ஏதுவாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மார்ச் 5-ஆம் தேதி மீண்டும் இரு அவைக் கூட்டங்களும் தொடங்கின. குறித்த தேதியில் அவை கூடியது. ஆம். கூடியது... அவ்வளவுதான். அதன் பிறகு கூச்சல், குழப்பம், அமளி, முழக்கங்கள், அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் என என்னென்னமோ அரங்கேறியது.
காவிரி மேலாண்மை வாரியக் கோரிக்கைக்காக தமிழக எம்.பி.க்கள் ஒருபுறம்; சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்கள் மறுபுறம்... மாறி, மாறி முழக்கமிட்டதில் எந்தக் கோரிக்கை எவருடையது என்ற வித்தியாசப்படுத்தப்படுத்த முடியாமல் குழம்பிப் போனது நாடாளுமன்றம்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாள்கள் இதே காட்சிகள் அரங்கேறின. இந்த நிலையில், எந்த விவாதமும் நடைபெற முடியாமலேயே நிதி மசோதாவையும், பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டு மசோதாவையும் நிறைவேற்ற மார்ச் 14-ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது.
அன்று பிற்பகல் 12.03 மணிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார். அனைத்து வெட்டுத் தீர்மானங்களும் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆளும் தரப்பு ஒட்டுமொத்தமாக அவற்றை நிராகரித்தது. அடுத்து, 12.04-க்கு மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாக அவைத் தலைவர் அறிவித்தார். உடனடியாக அந்த தீர்மானத்தை அவை நிறைவேற்றியதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நிமிஷம்.. பிற்பகல் 12.05 மணி... நிதி ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்கிறார். அது ஏற்கப்படுகிறது. அடுத்து நிதி மசோதாவை அறிமுகம் செய்கிறார் நிதி அமைச்சர். ரூ.24.42 லட்சம் கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிதி மசோதாவாவது விவாதத்துக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டதா? 
பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக, சரியாக 12.06-க்கு அதனை ஜேட்லி முன்வைக்கிறார். அரசு சார்பில் 21 திருத்தங்களும், புதிதாக 3 பிரிவுகளும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் நிதி மசோதா நிறைவேற கூடுதலாக சில நிமிடங்களானது. நிதி மசோதா தொடர்பான மற்றொரு நடவடிக்கைக்குப் பிறகு, பிற்பகல் 12.38 மணிக்கு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அவ்வளவுதான். 
கடந்த காலங்களில் 80 மணி நேரம் முதல் 100 மணி நேரம் வரை விவாதித்து, ஆட்சேபங்களும், ஆமோதிப்புகளும் எதிரொலிக்க நிறைவேற்றப்பட்டு வந்த மானியக் கோரிக்கை தீர்மானமும், நிதி மசோதாவும் இப்போது ஓரிரு நிமிடங்களிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு நிதி அறிக்கை சார்ந்த அம்சங்களை மொத்தமாகவே 12 மணி நேரம் 35 நிமிஷங்கள் மட்டுமே மக்களவை விவாதித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.
நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள பொறுப்பு தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் பொருள்.
முன்காலத்தில் மானியக் கோரிக்கைகளில் 40 சதவீத அளவாவது அவையில் தீவிரமாக விவாதிக்கப்படும். பத்தாண்டுகளுக்கு முன்னர் இது 25 சதவீதமாக இருந்தது. தற்போது ஒரு மானியக் கோரிக்கை கூட விவாதிக்கப்படவில்லை.
முன்னதாக, அமளியில் ஈடுபட்ட அனைத்து எம்.பி.க்களிடமும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் அவை அலுவல்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு பல முறை மன்றாடினர். ஆனால், அதை எவரும் பொருட்படுத்தவில்லை.
ஒருகட்டத்தில் விரக்தியின் விளிம்புக்குச் சென்ற வெங்கய்ய நாயுடு, 'அவை அலுவல்கள் தொடர்ந்து முடக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்' என்று உருக்கமாக கூறினார். ஆனால், அந்த உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் உதாசீனப்படுத்தப்பட்டது. வெகுஜனங்களுக்காக முன்வைத்த கோரிக்கை வெறும் பாறைக்கு இறைத்த நீரானது. ஆக மொத்தத்தில் மக்களின் நலன், மக்கள் பிரதிநிதிகளாலேயே காற்றில் பறக்கவிடப்பட்டது.
இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது ஒரே ஒரு கேள்விதான் எழுகிறது. ஆண்டுக்கொரு முறை தாக்கல் செய்யப்படும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி நிலை அறிக்கையைக்கூட ஆய்வு செய்வதற்கும், அதன் பேரில் விவாதம் நடத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு நேரமோ உத்தேசமோ இல்லையென்றால், ஜனநாயகத்தின் உன்னத பீடம் என்று அதனை அழைப்பதையும், அதைச் செயல்பட வைப்பதற்காக பெரும் தொகை ஒதுக்குவதையும் எப்படி நியாயப்படுத்தப் போகிறோம்? 
கட்டுரையாளர்
தலைவர், பிரசார் பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com