இதற்குப் பெயர்தான் கூட்டாட்சியா?

அண்மையில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் தெரிவித்த ஒரு கருத்து தேசிய அளவில் கவனம் பெற்றது.

அண்மையில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் தெரிவித்த ஒரு கருத்து தேசிய அளவில் கவனம் பெற்றது.
"மத்தியில் இனி பாஜகவும் வேண்டாம்! காங்கிரஸýம் வேண்டாம்!... அவர்கள் ஆட்சி செய்து தேசத்தில் தேனாறும் பாலாறும் ஓடியது போதும்... அந்த இரு கட்சிகளுக்கும் எதிராக வலிமையான மாற்று அணி அமைவதுதான் தற்போது நாட்டுக்குத் தேவை', என்பதுதான் அவர் முன்வைத்த கருத்து.
இந்த நிகழ்வு அரங்கேறி முழுமையாய் ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் அவர் தெரிவித்த கருத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு வெவ்வேறு விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் மாற்றாக ஓர் அணி உருவாகுமா அல்லது அந்த அணி வரும் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், மூன்றாவது அணிக்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதே நாட்டின் கூட்டாட்சித் தத்துவம் சிதைந்து வருகிறது என்பதை உணர்த்துவதற்கான வெளிப்பாடுதான்.
இந்தத் தருணத்தில், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே எத்தகைய உறவு நீடித்து வருகிறது என்பதை சற்று கூர்ந்து நோக்கினாலே, கூட்டாட்சியின் முகத்திரை முழுவதுமாய் விலகிவிடும்.
பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடன் கடுமையாக மோதி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு புறமிருக்க, வடக்கு } தெற்கு பிளவு குறித்த விவாதத்தை கர்நாடக முதல்வர் வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றார்.
பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தென் மாநில அரசுகளுக்கு உரிய பங்கை மத்திய அரசு மறுத்து வருகிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டுகிறார்.
இதனிடையே, வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பதில் கேரளம் வஞ்சிக்கப்படுகிறது என்பது அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் முன்வைக்கும் பிரதானமான குற்றச்சாட்டு. வரி வருவாய் பகிர்வுக்கு இதுவரை பயன்படுத்திவந்த 1971}ஆம் ஆண்டு மக்கள்தொகை புள்ளிவிவரத்துக்கு பதிலாக, 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் வரிப் பகிர்வை அமல்படுத்துவது எப்படி நியாயம் எனக் கேள்வி எழுப்புகிறார் பினராயி விஜயன். மத்திய அரசின் கருவூலத்துக்கு நாங்கள் ஒரு ரூபாய் வரித் தொகையை அளித்தால், அதில் வெறும் 25 பைசா மட்டுமே கேரளத்துக்குத் திருப்பியளிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
அதே வேளையில், உத்தரப் பிரதேசம் பங்களிக்கும் ஒரு ரூபாய்க்கு பதிலாக ஒரு ரூபாய் 79 பைசாவை மத்திய அரசு திருப்பி அளிக்கிறது என்றும் பினராயி விஜயன் சாடுகிறார். இதே வகையில், கர்நாடகம் 47 காசுகளும், தமிழகம் பங்களிக்கும் ஒரு ரூபாய்க்கு 40 காசுகளும் பெறுகின்றன என்கிறார் அவர்.
இந்த விமர்சனங்களுக்கு, பாஜகவின் முன்னாள் நண்பர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். தாங்கள் இழப்பை சந்திக்கிறோம் என்ற எண்ணம் தென் மாநிலங்களிடையே எழுந்துவருவதாக தெலங்கானா முதல்வர் மத்திய அரசை எச்சரிக்கிறார். 
இவற்றையெல்லாம் பகுத்தறிந்து பார்க்கும்போது மாநில முதல்வர்களின் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாக மனதுக்குள் சட்டென ஒரு கேள்வியும் வந்துதிக்கிறது. மாநிலங்களுக்கு இடையே இத்தனை வேறுபாடுகளை மத்திய அரசு காட்டி வருவதற்குப் பெயர்தான் கூட்டாட்சித் தத்துவமா என்பதுதான் அது.
பொதுவாகவே, எந்த ஓர் அரசியல் சாசனமும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டதல்ல. அதேபோன்று ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது மட்டுமல்ல. அவை இரண்டுமே மக்களுக்கும், மாநிலங்களுக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய அதிகாரம் வெறும் ஏட்டளவில் இருந்தால் அவற்றை வைத்துக் கொண்டு என்ன பயன்?
உதாரணமாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் அமல்படுத்தும் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு மாநிலத்தில் பொது அமைதி, சட்டம் } ஒழுங்கு சீர்குலைந்துவிட்டால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்துவதில் நியாயம் இருக்கிறது.
ஆனால், கடந்த கால வரலாற்றில் அப்படியா நிகழ்ந்திருக்கிறது? குடியரசுத் தலைவர் ஆட்சியை எவ்வளவு தூரம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பயன்படுத்தியாகிவிட்டது. 1967 } தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸýக்கு சாதகமாக இல்லாத எத்தனை மாநிலங்களின் ஆட்சியை இந்திரா காந்தி கலைந்தார் என்பதை இந்த நாடு நன்கு அறியும்.
தற்போது அதன் நீட்சியாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. அருணாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் அரசை பாஜக தலைமையிலான மத்திய அரசு கலைக்க மத்திய அரசு கலைத்தது.
இந்த நேரத்தில், இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உத்தரகண்ட் நீதிமன்ற நீதிபதி ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் வேறொன்றும் இல்லை, சம்பந்தப்பட்ட நீதிபதிதான் உத்தரகண்டில் மத்திய அரசு அமல்படுத்திய குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டவர். 
பிரபல வழக்குரைஞர் ராஜீவ் தவன் அண்மையில் எழுதி வெளியிட்ட "தி கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் இந்தியா: மிரக்கிள், சரண்டர், ஹோப்' என்ற புத்தகத்தில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்பது மாகாண அரசுகளை சிதைப்பதற்காக பிரிட்டன் ஆட்சியாளர்கள் கையாண்ட உத்தி என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் சரி, மாநில அரசுகளிலும் சரி, இரண்டு நிர்வாகங்களிலுமே பல்வேறு குறைபாடுகள் இருக்கும். எவ்வளவு பெரிய நெருக்கடி சூழலாக இருந்தாலும், மத்தியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாமல் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றால், அது ஏன் மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தாது என்று அந்தப் புத்தகத்தில் ராஜீவ் தவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தருணத்தில் இன்னுமொரு முக்கியமான விஷயமும் நம் நினைவுக்கு வருகிறது. அது வேறொன்றுமல்ல, மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியல்தான். அந்த விவகாரத்திலும் கூட்டாட்சிக் கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பொதுவாகவே, பாதுகாப்பு, ரயில்வே உள்பட 100 துறைகள் மத்திய அரசின் பட்டியலில் உள்ளன. அதன்படி, அவற்றின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு வசம்தான் இருந்து வருகிறது. அதேவேளையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பொதுவாக இருக்கக் கூடிய பட்டியலில் 50 துறைகள் மட்டுமே உள்ளன. ஆனால், அதிலும் கூட மாநில அரசுகளின் அதிகாரங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எழுந்த எதிர்ப்பை நினைவுகூர வேண்டும்.நீண்ட காலமாக கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அரசியல் சாசனத்தின் 42}ஆவது திருத்தச் சட்டத்தின்படி, பொதுப் பட்டியலின் கீழ் கல்வி கொண்டுவரப்பட்டது. 
கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில், இணைப்பு வழங்குவதில் மத்திய அரசுக்கு அதிகாரப் பங்கு தேவையிருந்தாலொழிய, கல்வித் துறையை பொதுப் பட்டியலில் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?
வினாத்தாள் கசிவு என்னும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், மத்திய அரசு தேர்வு நடத்தினால் என்ன மாநில அரசு தேர்வு நடத்தினால் என்ன?!
சரி, பொதுப் பட்டியல்தான் இப்படி இருக்கிறது என்றால், சட்டம் } ஒழுங்கு அதிகாரமாவது மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக் குறியே. நாடு தழுவிய அளவிலான, பல மாநிலங்கள் சம்பந்தமான வழக்குகள் என்றால் சிபிஐ போன்ற மத்திய அமைப்பை பயன்படுத்த அவசியமுள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், சிபிஐ உள்ளிட்டவை மாநில அரசுகளுக்கும், அரசியல் எதிரிகளுக்கும் எதிரான ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கும் வந்தாலும் இதே நிலைதான். 
இவ்வாறு பல்வேறு வகைகளில் தங்களது அதிகாரங்களும், உரிமைகளும் ஒடுக்கப்படும்போது மாநில அரசுகள், மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுக்கின்றன. 
கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. ஆனால், அவற்றில் இருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு கூறும் காரணம் ஒன்றுதான். தங்கள் மீது மாநில அரசுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல்ரீதியாக தூண்டிவிடப்பட்டவை என்பதே அது. இன்னும் சொல்லப் போனால், தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்கள் இத்தகைய பிரசாரத்தை நடத்துகின்றன என்றும் கூறிக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும், தொலைநோக்குடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், கூட்டாட்சி தேசம் என்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளும் நம் அரசியல் அமைப்புக்கு ஊறு விளைவிக்கச் செய்யும் விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டிய தருணமிது.

கட்டுரையாளர்: ஆசிரியர், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com