செந்தமிழும் ஸ்பெயின் நாடும்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழின் தொன்மையை அறிந்த புலவர் அறிவித்தார்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழின் தொன்மையை அறிந்த புலவர் அறிவித்தார். ஸ்பெயின் நாட்டு பாஸ்கு மொழி மக்களும் தம் மொழியின் பழைமையைப் பற்றிக் கூறும்போது, கடவுள் கடவுளாவதற்கு முன்பே, பாறைகள் பாறைகளாவதற்கு முன்பே, யூசுகரா மக்கள் யூசுகராவாக இருந்தனர் என்று கூறினர். 
பாஸ்கு மக்களின் வரலாறு கி.மு. 5000-ஆம் ஆண்டளவில் தொடங்கியதாக அறியப்படுகிறது. இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய இனத்தவர் ஐரோப்பாவில் கி.மு. 2000 -ஆம் ஆண்டில் குடியேறினார்கள். ஆனால், அவர்களுக்கு முன்பே பாஸ்கு மக்கள் ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வந்தனர். இதை ஐரோப்பிய வரலாறு ஒப்புக் கொண்டுள்ளது.
பாஸ்கு மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து சென்றார்களா? சிந்துவெளிப் பகுதியிலிருந்து போனார்களா? தமிழ் வணிகக் குழுவிலிருந்து பிரிந்து சென்று தங்கியவர்களா? இந்த வினாக்களுக்கு விடை தெரியாமல் வரலாறு விழித்துக்கொண்டிருக்கிறது.
ஆதி தமிழர்கள், பூமிப் பந்தின் கிழக்கிலும் மேற்கிலும் நாவாய் செலுத்தி உலா வந்த கடலோடிகள். பாஸ்கு மக்களும் பெருங்கப்பல் கட்டி கடலில் வலம் வந்த கடலோடிகளே. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பாஸ்கு மக்கள் அக்கண்டத்தில் அடி வைத்திருக்கக்கூடும் என்ற செய்தியும் உள்ளது. 
கொலம்பஸின் மாலுமிகள் குழுவில் பாஸ்கு மக்கள் இருந்தனர். இவர்கள் வழிகாட்டியிருக்கக்கூடும். மற்றொரு கடற்பயணியான மெகல்லனின் மாலுமிக் குழுவிலும் பாஸ்கு மக்கள் இருந்தனர். இவை மட்டுமல்ல, பாஸ்கு மக்களில் சிலர் தென் அமெரிக்காவுக்கும் சென்றார்கள். குடியேறினார்கள். அவர்களின் பெயர்கள் அங்கு நிலைபெற்றன. சான்றுக்கு இரண்டு: பொலிவர், குவாரா. 
முன்னைத் தமிழருடைய வாழ்வு சிற்றூரையே மையப்புள்ளியாகக் கொண்டிருந்தது. அது தன்னிறைவு பெற்றிருந்த கிராமமாகச் சிறப்புற்றிருந்தது. மக்களின் வாழ்விலும் சிற்றூரே தலைமை தாங்கியது. வழிபாட்டிடம், கல்வியகம், தொழிற்சாலை முதலியவை ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தன. தமிழரைப் போலவே அவர்கள் உழவராகத் திகழ்ந்தார்கள். ஆடு மாடுகளை வளர்த்தார்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. 
பாஸ்கு நாட்டில் எப்ரோ என்ற ஆறு பாய்ந்தோடுகிறது. இதன் கரைகளில் நகரங்கள் வளர்கின்றன. அங்குள்ள இரும்புத் தொழிற்சாலைகள் சிற்றூர் மக்களைக் காந்தம்போல் இழுத்துத் தழுவிக் கொள்கின்றன. கிராமங்கள், தேனீக்கள் நீங்கிய தேன் கூடுபோல மாறிவிட்டன. 
தமிழ் என்றால் இனிமை, நீர்மை, இறைமை, படை, வீரம், இலக்கியம், அகப்பொருள் என்று பல பொருள்கள் உண்டு. இது தமிழின் சிறப்புகளில் ஒன்று. தமிழகத்தில் மன்னர் பரம்பரையிடம் ஒரு நடைமுறை இருந்தது. நாடாளும் அரசன் இறந்தால் மன்னனின் மூத்த மகனுக்கே அரியணை ஏறும் உரிமை தரப்பட்டது. இந்த நடைமுறை பாஸ்கு மக்களிடம் இருக்கிறது. 
குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவனுடைய சொத்து மூத்த மகனுக்கு மட்டுமே உரியதாக்கப்படும். மக்கள் அனைவருக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டால் நிலபுலங்கள் சிறுத்து, நாளடைவில் மறைந்து விடும் என்பதே இந்தச் செயல்முறைக்கு அடிப்படைக் காரணமாகும். 
தமிழர் தாய்மொழிக்கே தலைமை தந்தனர். ஆகவேதான், தமிழ் என்பதன் அடிப்படையில் தாம் வாழும் மண்ணுக்குத் தமிழகம் - தமிழ்நாடு என்று பெயர் சூட்டினர். இந்தச் சிறப்பியல்பு பாஸ்கு மக்களிடமும் உள்ளது. பாஸ்கு மொழிக்கு முன்பு எசுகெரா என்ற மற்றொரு பெயரும் இருந்தது. இந்த மொழியின் அடிப்படையில் அவர்களின் தாயகம் எசுகாடி என்றும் எசுகால் கூரியா என்றும் கூறப்பட்டது. 
தமிழகம் அயல்மொழியினரின் படையெடுப்புக்குப் பலமுறை ஆட்பட்டது. பாஸ்கு மக்களின் நாடும் பல காலக்கட்டங்களில் பகைவரின் கைகளுள் நசுங்கியது. அதன் வேரைச் சீரழிவு தாக்கியது. அவர்களின் நாட்டை ரோமானியர்கள் விழுங்கினார்கள். விசிகோத்துகள் என்ற இனத்தவர் அவர்களின் நாட்டின் மேல் படையெடுத்தார்கள். அவர்களை அடக்கினார்கள். 
பிரெஞ்சுக்காரர்கள் அவர்களைத் தம் பிடிக்குள் வைத்திருந்தார்கள். நார்மன் வீரர்கள் அவர்களை அழித்தார்கள். மூர் ராணுவத்தினர் அவர்களின் வாழ்வை வீணடித்தார்கள். உடனிருந்த ஸ்பெயின் நாட்டினர் பாஸ்கு மக்கள் மேல் துன்ப மூட்டைகளை ஏற்றினார்கள். இவ்வளவு அழிவு நிலைகளையும் பாஸ்கு மக்கள் தாங்கிக்கொண்டார்கள். 
ஆனால் சிலர் வாழ்வு தேட அயல்நாடு சென்றார்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று கூறுவதுபோல, பாஸ்கு மக்களின் தாயகத்தின் ஒரு பகுதி ஸ்பெயின் நாட்டிலும் மற்றொரு பகுதி பிரான்ஸ் நாட்டிலும் அமைந்துள்ளது. பாஸ்கு நாட்டின் வட எல்லையாகப் பிஸ்கே வளைகுடா உள்ளது. தெற்கெல்லையாக லாரியோஜா அமைந்துள்ளது. கிழக்கில் நாவரா மாநிலம் உள்ளது. மேற்கில் காண்டாபிரியா மாநிலம் உள்ளது. நாட்டின் நடுவில் பைரீனீஸ் மலை உள்ளது. 
ஸ்பெயின் நாட்டில் 1830-இல் டான் கார்லஸ் நடத்திய போராட்டம், 1870-இல் கார்லிஸ் நடத்திய கிளர்ச்சி, 1936-இல் நடைபெற்ற தேசிய எழுச்சி முதலியவற்றில் பாஸ்கு மக்கள் பங்கு பெற்றார்கள். அதன் பலன்களையும் அனுபவித்தார்கள். உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற பிரான்சிஸ்கோ பிரேங்கோவுக்கு எதிராக, பாஸ்கு மக்கள் செயல்பட்டதால், அந்த சர்வாதிகாரி பாஸ்கு மக்களின் சிறப்பு உரிமைகளைப் பறித்தான். அவர்களின் தன்னாட்சி உரிமையையும் நீக்கினான். 
அளவுக்கு மீறிய அடக்குமுறை, எதிர்ப்பு உணர்ச்சியை எழுப்பிவிடும். தாய்மண் ஆட்சி உரிமை பெறுவதற்காக, அமைப்பு ஒன்று உருவானது. அந்த அமைப்பு எசுகாடிடா அஸ்காட்டா என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் சுதந்திரமும் பாஸ்கு தாயகமும் என்பதாகும். இவ்வமைப்பின் வீரர்கள் 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஸ்கு மொழி, பிற மொழிகளின் தாக்குதலால் தன் இயல்பை முழுவதுமாக இழந்தது. புதிய எழுத்து முறையை ஏற்றுக்கொண்டது (இது ஆங்கில எழுத்து முறை போன்றது). அளவற்ற பிறமொழிச் சொற்களையும் உள்வாங்கிக் கொண்டது. பாஸ்கு மொழி அடியோடு சிதைந்தது. அதன் அடிப்படைப் பண்பாடும் முற்றிலும் முறிந்தது.
கூட்டுப் புழு, பூச்சியாக மாறுவதைப் போல, பாஸ்கு மொழி மக்கள் முற்றிலும் மாறிவிட்டனர்.
பாஸ்கு மொழி, எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது பற்றிப் பலரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தையோ இந்தோ - ஜெர்மானிய மொழிக் குடும்பத்தையோ சேர்ந்ததல்ல என்ற முடிவை ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூறினார்கள். ஒற்றைப் பனைமரம் தனித்து நிற்பதைப் போல், ஐரோப்பிய மொழிகளின் இடையில் பாஸ்கு மொழி தனியாக இருக்கிறது.
பிரெஞ்சு நாட்டு மொழியியல் அறிஞர் லூயி லூரியன் போனபார்ட்டே, பாஸ்கு மொழியின் மூலமொழி எது என்ற ஆய்வில் ஈடுபட்டார். ஜெர்மன் நாட்டு ஹகோ ஸ்கூகார்ட் என்பவரும் ஆய்வு மேற்கொண்டார்.
பாஸ்கு மொழி பண்டைய ஐபீரியன் மொழியைச் சேர்ந்தது என்றும், ஆஃப்ரோ - ஆசிய மொழிக் குடும்பத்திற்கு உரியது என்றும், காகசியன் மொழியைச் சார்ந்தது என்றும் பற்பல கருத்துகள் கூறப்பட்டன. 
பிரெஞ்சு மொழி அறிஞர் லோகோவாரியும் போலந்து நாட்டு அறிஞர் பெனான்சி பிக்னியூ சாலெக்கும் பாஸ்கு மொழியின் வேர் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். பாஸ்கு மொழியின் மூல மொழி தமிழ் என்பதை அவர்கள் அறிவித்தார்கள். 
அறிஞர்கள் ப. இராமநாதனும் அரசேந்திரனும் தமிழ் மொழியே பாஸ்கு மொழியின் வேர் என்று தெரிவித்தார்கள். பாஸ்கு மொழியில் 2,500 தமிழ்ச் சொற்கள், திரிபுற்ற நிலையில் இருப்பதை அறிஞர் லோகோவாரி ஆய்ந்துரைத்தார். 
பாஸ்கு மொழி, தமிழைப் போன்ற ஒட்டுநிலை மொழி. தமிழில் இருப்பதைப் போல், அம்மொழியிலும், ர, ற என்றும் ல, ள என்றும் இரண்டிரண்டு எழுத்துகள் இருக்கின்றன. தமிழில் வினைச் சொல்லே, செயல் செய்தவனின் பால், எண், இடம் காலம் முதலியவற்றை அறிவிக்கும். பாஸ்கு மொழியிலும் இதே நிலை உள்ளது. பின்வரும் பாஸ்கு மொழிச் சொற்களின் திரிபு நிலை கவனிக்கத்தக்கது. 
அமா (அம்மா), ஐத்த (அத்தன் - அப்பா), அனா (அண்ணி), அனியா (அண்ணன்), செய்ன் (சேய்-குழந்தை) ஊரியா (ஊர்), உரி (அரிசி) ஏரே (ஏர்) இலுன் (இருள்), ஓட்ஸ் (ஓசை), இரெளன் (இரு), து (துப்பு), சு (சுடு), எரெ (எரி), இகே (ஏகு-போ) சுர் ( சொரி), அர்(ஆள்), பான் பினா (பாப்பா) , இலோபா (இளைஞன்), ஒரென் (ஓரை -நேர அளவு), மோகோ (மூக்கு), சிர்ரி (சில்லி - சிறுமை), அல (அல்லது), எகினெ (என்) - இப்படிப் பல தமிழ்ச் சொற்கள் பாஸ்கு மொழியில் உருமாறிக் கிடக்கின்றன. 
ஸ்பெயின் நாட்டில் செந்தமிழ் மரபினர் வாழ்கின்றனர் என்ற உண்மையும் கால இருட்டில் மறைந்து கிடக்கின்றது. ஸ்பெயின் நாட்டு பாஸ்கு மக்கள் தமிழ் இனத்தவரே என்று எவர் உணர்த்தப் போகிறார்கள்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கட்டுரையாளர்:
முனைவர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com