வழிகாட்டும் கேரளம்

கடந்த சில மாதங்களுக்கு முன் புரட்டிப்போட்ட புயல், மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது கேரளம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் புரட்டிப்போட்ட புயல், மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது கேரளம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான அடிப்படைப் பணிகளை செயல்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது அம்மாநில அரசு. அதன் ஒரு பகுதியாக, நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி அம்மாநிலப் பெண்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது கேரள அரசு.
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு அலுவல் தொடர்பாகவும், நேர்முகத் தேர்வு, அரசுத் தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். திருவனந்தபுரம் சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகின்றனர். 
இவர்களில், தனியாக வரும் பெண்கள் தங்கள் பணியை ஓரிரு நாள்கள் தங்கி முடித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கருதி, ஹோட்டல்களில் தங்குவதற்குத் தயங்குகின்றனர். மேலும், பொருளாதார ரீதியாக ஹோட்டல்களில் தங்குவதற்கு வசதியில்லாதவர்கள் எங்கு சென்று தங்குவது என்று தெரியாமல் தவித்து வந்தனர். 
இவர்களுக்காக கேரள அரசின் சமூகநீதித் துறை சார்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள திட்டம்தான் என்டே கூடு என்ற திட்டம். இனிமேல், தங்கள் வேலை தொடர்பாக தனியாக திருவனந்தபுரம் வரும் பெண்கள், இரவில் தங்குவது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்கிறது அம்மாநில அரசு.
என்டே கூடு திட்டத்தின் கீழ், திருவனந்தபுரம், தம்பானூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடத்தின் எட்டாவது தளத்தில், பெண்கள் பாதுகாப்பாகவும் இலவசமாகவும் தங்கிக்கொள்ளலாம். இத்திட்டத்தை, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அம்மாநில சமூகநீதித் துறை அமைச்சர் ஷைலஜா துவக்கிவைத்தார். 
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை தங்கலாம். பெண்களுக்கு மட்டுமே இங்கு தங்குவதற்கு அனுமதி. தங்களுடன் அழைத்து வரும் 12 வயதுக்கு உள்பட்ட ஆண் குழந்தைகளை உடன் தங்க வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இலவசமாக இரவு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, ஒருவர் மூன்று நாள்களுக்கு தினமும் மாலை 5 மணியில் இருந்து காலை 7 மணி வரை இந்த அறைகளில் தங்கிக் கொள்ளலாம். இந்த அறையில் கழிப்பறை, குளியல் அறை, சமையல் அறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சிப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. 
இங்கு தங்கும் பெண்களின் பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள், 2 பெண் வார்டன்கள், ஒரு மேலாளர், ஒரு துப்புரவாளர் என 6 பேர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரோந்து செல்லும் பெண் போலீஸாரும் இங்கு வந்து அவ்வப்போது பார்வையிட்டுச் செல்கின்றனர்.
உணவகம் நடத்தவும், பைகள் தயாரித்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்யவும் பெண் தொழில்முனைவோருக்கு உதவி வரும் கேரள அரசு, பெண்களுக்காகப் பல்வேறு நலத் திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது என்டே கூடு என்ற இந்த முன்னோடித் திட்டம் கேரளப் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு அரசு எடுத்துள்ள இந்த முயற்சி அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. முதல்கட்டமாக ரூ. 30 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை கேரள மாநிலத்தின் 14 மாவட்டத் தலைநகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 
அடுத்து, கேரளத்தின் வர்த்தகத் தலைநகரம் என்று அழைக்கப்படும் எர்ணாகுளத்தில் ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட மையப்பகுதியில் பெண்களுக்கான இலவசத் தங்குமிடம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகளும் பெண்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டிவருகின்றன. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், பேறுகால நிதியுதவித் திட்டம், பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காக தனி அறை, மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டம், மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்பட எண்ணற்ற மகளிர் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால், கேரள அரசு செயல்படுத்தியுள்ளது போன்ற புதிய திட்டம் இங்கு இல்லை.
கடந்த முறை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றபோது, அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அந்நந்த மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் மையங்களை ஒதுக்காமல், வேறு மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் பலர் மொழி தெரியாத மாநிலத்தில் எங்கு செல்வது, எங்கு தங்குவது என்று தெரியாமல் தவித்தனர். குறிப்பாக வெளி மாநிலங்களுக்குத் தேர்வு எழுதச் சென்ற மாணவியர் தங்குமிடம் இன்றித் திண்டாடியதும், தேர்வைத் தவறவிட்டதும் செய்திகளாயின. 
இதுபோன்ற சூழ்நிலையில், கேரளத்தில் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கிச் செல்ல என்டே கூடு திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தியுள்ளதுபோல, இந்தத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும். மகளிர் நலனில் அக்கறை காட்டுவதாகக் கூறும் மாநில அரசுகள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com