வடகிழக்கில் வலுவிழந்த காங்கிரஸ்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ், மாநில கட்சியான மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) யிடம் தோல்வி கண்டது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ், மாநில கட்சியான மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) யிடம் தோல்வி கண்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களைக் கைப்பற்றிய மிஸோ தேசிய முன்னணி, பெரும்பான்மை பலத்துடன் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
கிறிஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ள மிஸோரம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், இம்முறை மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. வெறும் ஐந்து தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, மூன்றாவது இடத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 
எட்டுத் தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தை மிஸோரம் மக்கள் இயக்கம் பிடித்தது. இந்தத் தோல்வியின் மூலம் மிஸோரமில் ஆட்சியை இழந்தது மட்டுமன்றி, மற்றுமொரு பெரிய பின்னடைவையும் காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது.
வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே. தற்போது அங்கும் அக்கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில், வடகிழக்கில் எந்தவொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 1972-ஆம் ஆண்டு, அஸ்ஸாமிலிருந்து பிரிந்த மிஸோரம், பின்னர் யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு, 1987-ஆம் ஆண்டில் மிஸோரம் முழு அந்தஸ்து பெற்ற மாநிலமாக உருவானது. 
கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 11 லட்சம் பேர். இதில் 95 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர். கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் உள்ள (91.33%) மாநிலமாக மிஸோரம் திகழ்கிறது.
இம்மாநிலத்தில், கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. அதற்கு முன்பு 1998 முதல் 2008-ஆம் ஆண்டுவரை, மிஸோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. 
இக்கட்சி, ஆரம்பத்தில் பிரிவினைவாத இயக்கமாக செயல்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 1986-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிஸோ உடன்படிக்கைக்கு பிறகு, வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் கைவிட்டு, அரசியல் கட்சியாக இது செயல்படத் தொடங்கியது.
வடகிழக்கில் காங்கிரஸூக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டில் பாஜக உருவாக்கிய வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில், மிஸோ தேசிய முன்னணி அங்கம் வகிக்கிறது. எனினும், தற்போதைய பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. 
மிஸோ தேசிய முன்னணி மூலமாக மாநிலத்தில் கால் பதிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது பலமுறை குற்றம் சாட்டினார். எனினும், அவரது குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மிஸோரம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, வங்கதேச எல்லையை ஒட்டிய ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் தனது கணக்கை பாஜக தொடங்கியுள்ளது எனலாம்.
இத்தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், அரசு மீதான மக்களின் அதிருப்தியே என்று கூறப்படுகிறது. மிஸோரமில் முழு மதுவிலக்கு அமலில் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் அரசு மதுவிலக்கு கொள்கையை திரும்ப பெற்றது. மாநிலம் முழுவதிலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தை முன்வைத்தே மிஸோ தேசிய முன்னணி கட்சி, தனது பிரசாரத்தை முன்னெடுத்தது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணம் உள்கட்சி பூசல் என்று கூறப்படுகிறது. 
மிஸோரம் மாநில முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான லால் தன்ஹாவ்லா, தான் போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வியை தழுவினார். இவர், அந்த மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். 
மிஸோரமில் காங்கிரஸூம், மிஸோ தேசிய முன்னணியுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. 
வடகிழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு தோல்விமுகம்தான். அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக-விடம் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ். திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. 
மேகாலயத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆயினும், தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்தது. 
இதேபோல் நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மிஸோரம் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் இல்லாத வடகிழக்கு உருவாகும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்கெனவே சூளுரைத்திருந்தார். அந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com