ஜனநாயகத்தைத் தொலைத்துவிட்டால்...

எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளில் இருக்கும் தனி நபர்கள் அதிகாரம் மிக்கவர்களாக நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். ஆனால், நடைமுறையில்

எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளில் இருக்கும் தனி நபர்கள் அதிகாரம் மிக்கவர்களாக நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். ஆனால், நடைமுறையில் அதிகாரம் அவர்களிடம் இல்லை என்பதே உண்மை.
ஊராட்சி மன்றத்தில் தொடங்கி நாடாளுமன்றம் வரையிலான குடியாட்சியின் கட்டமைப்புகளே அதிகாரம் கொண்டவை. நாட்டில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி படைத்தவை இந்த மக்கள் மன்றங்கள்தான்! இவைதான் நம் ஜனநாயகத்தின் கோயில்கள் இவற்றின் ஒப்புதல் இன்றி எதுவும் சாத்தியமாகாது.
நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து நீதி பரிபாலனத்துக்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல் வரை எல்லாமும் மக்கள் மன்றங்களில்தான் நடக்கின்றன. இவை ஆக்கப்பூர்வமாகப் பேசினால், செயல்பட்டால் மட்டுமே தேசமும் அந்தப் பாதையில் பயணிக்கும். இங்கே கோளாறு என்றால், அது நாட்டின் நிகழ்காலத்தை, எதிர்காலத்தைப் பாதிக்கும்.
நாடாளுமன்றத்தைப் பொருத்தமட்டில் உச்சபட்ச ஜனநாயகத்தோடு திகழ்ந்தது நேருவின் காலம். சுதந்திர இந்தியாவில் முதல் ஊழல் புகாருக்கு ஆளான ராமகிருஷ்ண டால்மியா, காங்கிரஸ் கட்சிக்கு மிக நெருக்கமான தொழிலதிபர். இந்தியாவின் முதல் நிதியமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர். அத்தகைய செல்வாக்கு வாய்ந்தவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதாரத்துடன் புகார் சொன்னவர் ஃபெரோஸ் காந்தி.
சிறைக்குப் போன பிறகும் டால்மியாவை அவர் விடவில்லை. முறைகேடு செய்யப்பட்ட பணத்துக்காக டால்மியாவுக்கு அவரது மருமகன் சாந்தி பிரசாத் ஜெயின் பிணை கொடுத்திருந்தார். டால்மியாவின் மகள் ரமாவுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கச் சென்று பின்னர் அவரை மணந்து கொண்ட ஜெயின் பற்றி அவ்வளவாக வெளியில் தெரியாது. நாடாளுமன்றத்தில் இது பற்றிய விவாதத்தின் போது, நேருவைப் பார்த்து ஃபெரோஸ் காந்தி கேட்டார்.
குற்றவாளிக்கும் (டால்மியா) அவருக்கு பிணை கொடுத்திருப்பவருக்கும் என்ன உறவு என்பதை பிரதமர் சொல்வாரா? என்றார். கோபமடைந்த நேரு, இந்தக் கேள்வியைக் கேட்பவருக்கும் பதில் சொல்பவருக்கும் என்ன உறவோ அதுதான் அவர்களுக்கு இடையே உள்ள உறவு என்று பதில் சொன்னார். நாடாளுமன்றமே சிரித்தது. ஆமாம். நேருவின் ஒரே செல்ல மகள் இந்திரா பிரியதர்சினியின் காதல் கணவர் ஃபெரோஸ் காந்திதான், மாமனாரின் அரசோடு அந்தளவுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஃபெரோசும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி. ஆனவர்தான். 
இத்தகைய மக்கள் மன்றம் இப்போது எந்த இடத்தில் நிற்கிறது? அவையைக் கூட்டி மாதக்கணக்கில் நடத்தும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. அப்படியே கூடினாலும் ஆரோக்கியமான விவாதங்களோ, மக்கள் பிரச்னைகளை அக்கறையோடு பேசும் அலசல்களோ கிடையாது. கடனே என்று சில நாள்கள் நடத்தி ஜனநாயக சடங்கை முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மசோதாக்களைப் பற்றி ஆக்கப்பூர்வமாக பேசாமல், கூட்டத்தின் கடைசி நாளில் ஒரே மூச்சில் ஒட்டுமொத்தமாக சட்டமாக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானம், வெட்டுத் தீர்மானம், உரிமைப் பிரச்னை, ஒத்திவைப்புத் தீர்மானம் உள்ளிட்ட பலவற்றுக்கு அனுமதியில்லை. அவற்றைப் பற்றி எதிர்க்கட்சிகளும் கவலைப்படுவதில்லை.
வெளிநடப்பு அல்லது அவையை முடக்குதல் இரண்டோடு கடமை முடிந்தது என்று எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர். இதனால், மக்கள் நலனைப் பற்றிய விவாதங்களும், ஆக்கப்பூர்வ கருத்துகளும் இடம்பெறுவதில்லை.
நாமெல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானது.
ஆனால், விவாதங்கள் நடைபெறும் இடம் நாடாளுமன்றம். நீங்கள் எழுப்பும் பிரச்னைகளை அரசு விவாதிக்கத் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். அதனால், இந்த வழிமுறை சரியானது அல்ல. இது சரியான செய்தியைத் தராது. நான் வெளிப்படையாகவே கூறுகிறேன்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்கிறார்கள். நாம் ஏராளமான மக்களின் வாக்குகளைப் பெற்று அவைக்கு வந்து இருக்கிறோம். கொஞ்சம் பொறுப்பை உணர வேண்டும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் - இப்படி வித,விதமான வடிவங்களில் உறுப்பினர்களிடம் கெஞ்சிக் கேட்கிறார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். மாநிலங்களவையிலும் இதே நிலைமைதான். 
நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரிலும் இப்படிதான் நிகழ்ந்தது. ஒருநாள்கூட ஒழுங்காக விவாதங்கள் நடக்கவில்லை.
இப்போது குளிர்கால கூட்டத்தொடரும் அமளி, துமளியாகவே கழிகிறது. ரஃபேல் போர் விமான பேரம் குறித்து காங்கிரசும், மேக்கேதாட்டு அணையைக் கட்டக் கூடாது என அ.தி.மு.க. எம்.பி.க்களும் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். 
இவை இரண்டுமே கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவை. எனினும், ஆள்கின்றவர்களும் அதற்கு முழு மனதோடு தயாராக இல்லை. கோரிக்கைகளை வலியுறுத்துகிறவர்களும் இறங்கி வரத் தயாரில்லை. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க. என்ன செய்ததோ, அதையே இவர்கள் ஆட்சியில் அவர்கள் செய்கிறார்கள். 
என்ன வித்தியாசம் என்றால், இப்போது மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க.-வும் சேர்ந்து செய்கிறது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டிவிட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்ற அ.தி.மு.கவின் தற்போதைய போராட்டத்தில் நியாயம் இருந்தாலும், ஆளும் பா.ஜ.கவின் தூண்டுதலில்தான் இப்படி அக்கட்சி செயல்படுவதாக மற்ற கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. 
தன் பலவீனங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தடுக்கவே பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.கவை ஏவி விட்டிருப்பதாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி இருக்கிறார். 
வழக்கமாக கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அத்தனை கட்சிகளும் தலைவர்களும் உட்கார்ந்து பேசி, நாடாளுமன்றம் இயங்க வேண்டிய குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பார்கள். அதற்காகவே இந்த மரபு உருவாக்கப்பட்டது.
இன்றைக்கு அது வெறும் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. சும்மா பெயரளவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துவது, பிரதமர் வேண்டுகோள் விடுப்பது, எதிர்க்கட்சிகள் தலையாட்டிவிட்டுப் போவது என்று எல்லாமே சம்பிரதாயமாக முடிந்துவிடுகிறது.
இதன் மூலம் யாருக்குமே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், வாதங்களிலும் எதிர் கருத்துகளிலும் பிரதமர் உள்ளிட்டோருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. எப்போதோ ஒரு முறை நினைப்பதை மேடைப் பேச்சு போல வெளிப்படுத்திவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இதனைத் தட்டிக் கேட்டு சரிப்படுத்த வேண்டிய நேருவின் காங்கிரசோ, மக்களவையில் எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிற அளவுக்குக்கூட இல்லாமல் சுருங்கிக் கிடக்கிறது. 
மொத்தத்தில் நிமிஷத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் நடத்தப்படும் நாடாளுமன்றக் கூட்டங்கள் நாள்கணக்கில் முடக்கப்படுவதால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் விரயமாவதுதான் மிச்சம். கடந்த ஆண்டில் மட்டும் மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர்களில் ரூ.156 கோடி ரூபாய் இவ்வாறு வீணாகி இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
நேருவைப் போல நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவத்தும் கொடுத்த அண்ணா, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சொன்ன வார்த்தைகள் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.
பந்தல்கால் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்த யானை, ஒரு குழியில் பூனை படுத்திருந்ததைப் பார்த்து அதில் மரக்கம்பத்தை இறக்காமல் திரும்பிய கதையைச் சுட்டிக்காட்டிய அண்ணா, எதிர்க்கட்சிகள் குழிக்குள் பூனைக்குட்டி போல இருக்கின்றோம். ஆளுங்கட்சி என்ற மரத்தை பூனை மீது நடாத யானையைப் போல் அவைத் தலைவர் இருந்து எதிர்க்கட்சி மீது பரிவு காட்ட வேண்டும் என அவைத் தலைவருக்கான இலக்கணத்தைக் கூறினார். 
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் சரியாக இருந்து மற்றொரு பக்கம் சேதமடைந்தாலும் நாணயம் செல்லாக் காசாகிவிடும் என்றொரு சொல்லாரத்தையும் அண்ணாவே படைத்திருக்கிறார். மக்களாட்சி நடக்கிற நாட்டில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் செயல்படுகிற விதமே ஜனநாயகம் நிலைப்பதற்கான ஆதாரம். ஏனெனில் ஜனநாயகம்தான் நம்முடைய பெரும் பலம். அதைத் தொலைத்துவிட்டால் நாம் தொலைந்தோம்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com