குடிநீர் தட்டுப்பாடு-புது கட்டுப்பாடு!

உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தண்ணீரின் அவசியம் குறித்தும் அதைச் சேமிக்க வேண்டியதன் கட்டாயம் குறித்தும் அனுபவப்பட்டவர்கள் தற்போதுதான் மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர்.
தண்ணீருக்குத் தவிக்கும் சில நாடுகளில் மக்கள் படும்பாடு குறித்து வெளியாகும் தகவல்கள், பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும். தென்னாப்பிரிக்க நாட்டின் மிகப் பெரிய நகரமான கேப்டவுனில் நீராதாரங்கள் அனைத்தும் வற்றியதால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு "டே ஜீரோ' எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள அனைத்து குடிநீர்க் குழாய்களிலும் தண்ணீர் வராத தினம் "டே ஜீரோ' என்றும், அதன்பிறகு அரசு சார்பில் பொது குடிநீர் மையங்களில் வழங்கும் குடிநீரை "ரேஷன்' முறையில் பொதுமக்கள் பெற்றுச் செல்லலாம் என்றும் அரசு அறிவித்தது.
இந்த எச்சரிக்கைக்குப் பின் அங்கு வாகனங்களைக் கழுவுவதுகூட சட்ட விரோதமானது. "டே ஜீரோ' நாளை எதிர்கொள்ள கேப்டவுன் நகரமும் கவலையுடன் தயாராக இருந்தது. இந்த நெருக்கடியை எப்படி கையாளப் போகின்றனர் என உலக நாடுகளும் கேப்டவுனை கவனித்து வந்தன. ஆனால், வருணனின் கருணையால் இந்த தினம் 2019-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு தண்ணீரைச் சேமிப்பது குறித்தும், தண்ணீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் தண்ணீர் தட்டுப்பாடு முக்கியப் பிரச்னையாக தலைதூக்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் பல மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்ததால் அங்குள்ள குடிநீர் ஆதாரங்களான அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றும் நிலைக்குச் சென்றுவிட்டன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டதால் மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
இதனால், மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான புணே உள்பட பல முக்கிய நகரங்களில் தற்போது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். தண்ணீருக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்திடம் அந்த மாநில அரசு ரூ. 500 கோடி வட்டியில்லாத கடனைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தண்ணீரைச் சேமிக்கும் வகையில் புணே நகரில் உள்ள ஹோட்டல்களில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிப்பதற்கு பாதிக் குவளை தண்ணீர் மட்டுமே அளிக்க ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்து அதைச் செயல்படுத்தவும் தொடங்கி விட்டது. இங்குள்ள ஹோட்டல்களில் "மெனு' அட்டையுடன் மற்றொரு அட்டையும் தரப்படுகிறது. அதில் நீரைச் சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பாதிக் குவளையில் தண்ணீர் தரப்படுவது குறித்தும், இதனால் நீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நல்ல பலன் தரத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் புணே உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கணேஷ் ஷெட்டி. புணேயில் உணவகம் நடத்தி வரும் அவர் கூறுகையில், ""உணவகங்களுக்குச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் குடிநீரில் பாதி மட்டும் அருந்திவிட்டு, மீதியை பலர் வீணாக்குகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களுக்கு பாதிக் குவளை குடிநீர் வைக்கலாம் என முடிவு செய்து அதைச் செயல்படுத்தி வருகிறோம். எனினும் தேவைப்படும் நிலையில் தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம். குடிநீரை வீணாக்கக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்'' என்றார்.
இதற்கு முன் இவர்கள் ஹோட்டலுக்கு தினமும் 1,600 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. இந்த பாதிக் குவளை தண்ணீர் தரும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியதும் தினசரி தண்ணீர் தேவை 50 சதவீதம் குறைந்து விட்டதாம். சராசரியாக ஒரு வாடிக்கையாளர் இதுவரை 100 மி.லி. குடிநீரை வீணாக்கி வந்துள்ளார். புணேயில் தண்ணீருக்கு தற்போது கடும் கட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வரும் நாள்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம். அடுத்து வரும் கோடையையும் எதிர்நோக்க வேண்டியுள்ளதால், தண்ணீர் சேமிப்பு மற்றும் குடிநீர் வீணாவதைத் தடுப்பதில் ஹோட்டல்களின் பங்கு அதிகம் இருப்பதாக உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இதனால் அவர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 800 உணவகங்களில் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை வாடிக்கையாளர்கள் சாப்பிடும் ஒவ்வொரு மேஜையிலும் வைத்துள்ளனர். மேலும், சங்கத்தில் உறுப்பினராக இல்லாத 3,500 உணவகங்களுக்கும் இந்த விழிப்புணர்வு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர்ப் பற்றாக்குறையின் சிரமத்தைப் புரிந்துகொண்டு வாடிக்கையாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். எனினும், சில வாடிக்கையாளர்கள் நீரை வீணாக்குகின்றனர். அதையும் செடிகளுக்கு ஊற்றுகின்றனர்.
உலகம் முழுவதும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றால் தண்ணீரின் தேவை அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், உலக அளவில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஈரான், கம்போடியா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், லிபியா உள்ளிட்ட 11 நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் தண்ணீரைச் சேமிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் உரைத்தது போன்று, அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com