தை பிறந்தது, வழி பிறக்குமா?

புது வருடம் 2018-இல் நுழையும்போது கல்வித் துறையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன- எண்ணிக்கையில் அதிகமாகும் ஐஐடி-க்கள். ஐஐஎம்-க்கள் மற்றும் மத்திய அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள்.

புது வருடம் 2018-இல் நுழையும்போது கல்வித் துறையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன- எண்ணிக்கையில் அதிகமாகும் ஐஐடி-க்கள். ஐஐஎம்-க்கள் மற்றும் மத்திய அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கழுத்து நெரிப்பு. வியாபாரமாக்கப்பட்ட நுழைவுத் தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கை. உயர் கல்வியில் துணை சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி, ஆசிரியர் தொழிலை உதாசீனப்படுத்தல், அரசு-தனியார் கல்வி நிறுவனங்களிடையே பாகுபாடுகள் மற்றும் ஊட்டச்சத்தில்லாத கொள்கை தயாரித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 
குழந்தை பிறப்புக்கு முன்பே பள்ளி சேர்க்கையில் காணப்படும் அவசரம், சேர்க்கைக்குப் பின் மதிப்பெண்களைத் துரத்தும் பள்ளி மாணவர்கள், தொழில் முறை கல்லூரிகளில் சேர்க்கையில் கையாளப்படும் அர்த்தமில்லாத முறைகள், ஆசிரியர்களின் மரியாதை குறைதல், உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கப்படும் முதன்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் சவாலான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் இவை பிரதிபலிக்கின்றன. 
பல்வேறு நிலையில் சுமுகமான நிலையை உறுதி செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் 2018-இல் கல்வித் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற பள்ளிகளில் கற்றலை மீண்டும் அறிமுகப்படுத்துதல்: ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய குழந்தைகள் தன்னுடைய கணவனைவிட அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை சிறந்த பள்ளிகளிலேயே சேர்ப்பர் என்று என்னுடைய நல்ல நண்பர் பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் அடிக்கடி கூறுவார். கல்வி உரிமை சட்டத்தின் மூலம் 14 வயது வரை இலவசமாக அளிக்கப்படும் கட்டாயக் கல்வி மூலம் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கிடைக்கின்றது.
உரிமை மூலம் கிடைக்கும் சேர்க்கை தேவைதான் என்றாலும் உயர்வின் மூலம் கிடைக்கும் அறிவுக்கு அது போதுமானதாக இல்லை, 2016-ம் ஆண்டில் 'அசர்' (ஏ.எஸ்.இ.ஆர்.) ஆய்வறிக்கையில் எட்டாம் வகுப்பு பயிலும் 25 சதவீத கிராமப்புற மாணவர்களால் இரண்டாம் வகுப்பு புத்தகத்தைக் கூட படிக்க முடியவில்லையென்றும், பெரும்பான்மையினரால் ஒரு எண்ணைக் கொண்டு மூன்று எண் வகுத்தல் கணக்கைக்கூட செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வகுப்பால் முன்னேற்றமும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்தலும் கற்றலை உறுதிப்படுத்தாது.
தீர்வு : ஒரு சடங்காக இயற்றப்படும் பட்ஜெட்டிற்குப் பதிலாக, தரத்தின் அடிப்படையிலான மூன்று ஆண்டு கால யதார்த்தமான பட்ஜெட்.
பொறியியல் கல்லூரிகளின் கட்டாய நன்கொடைக்கு மாற்று: தொழில்சாற் கல்லூரிகளான மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல நோய்கள் காணப்படுகின்றன, உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு 90 சதவீத மாணவர்கள் ஏற்கெனவே ஜே.இ.இ. மெயினில் முதன்மையான மாணவர்கள் என்பதை உதாசீனப்படுத்துகிறது. பிறகு எதற்காக தனியாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு என்ற கேள்வி நெடுநாளாகக் கேட்கப்படுகின்றனது.
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு மற்றும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வின் நோக்கம் ரூ. 24.000 கோடி என்று மதிப்பிடப்பட்ட பயிற்சித் தொழிற்சாலையைத் தடை செய்வதேயாகும், ஆனால் பள்ளி இறுதியின் மதிப்பெண்களை உதாசீனப்படுத்தி அதன் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது, சில தனியார் பல்கலைகழகங்களின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும்) தங்களுக்கு வருமானத்தைக் கூடுதலாக்க ஏதுவாகிறது. நீட் தேர்வு கால கட்டத்திற்கு முன்பு வரை உருவான கூடுதல் கட்டணத்தின் மூலம் கிடைத்த கருப்புப் பணத்தின் மதிப்பு ஆண்டுக்கு ரூ. 6.000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையில் இந்த கருப்பு பணத்தை நீட் தேர்வு பெருமளவில் குறைத்திருந்தாலும். பொறியியல் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டண மாற்று மருந்து தேவைப்படுகிறது.
இதனைத் தடுக்க ஒவ்வொரு நிறுவனம் மற்றும் மாநிலங்களுக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்தை, தேசிய சேர்க்கை போர்டல் மூலம் நடத்த தேசிய தேர்வு ஆணையம் (நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி) நடத்த முன் வரவேண்டும், ஒரு முன் வரையறுக்கப்பட்ட தரத்துடன் ஜே.இ.இ. மெயின் மற்றும் உயர்நிலைப் பள்ளியின் மதிப்பெண்களுடன் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க வேண்டும். 
இவ்வாறு ஒரு வெளிப்படையான சேர்க்கைப் போர்டலுடன் கூடிய டிஜிட்டல் கட்டண முறை வந்தால் தகுதி அங்கீகரிக்கப்படுவதுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் வேறு கட்டணம் வாங்குவது தடுக்கப்படும். வருடாந்திர சேர்க்கை வருமானம் சமர்ப்பித்தல் கட்டாயப்படுத்தப்பட்டால், தகுதி மற்றும் கட்டண வசூலித்தலில் ஏற்படும் முறைகேடுகள் அறியப்படுவதுடன் இவ்வாறு தவறு செய்யும் நிறுவனங்கள் தண்டனைக்கும் ஆளாக்கப்படும். 
தீர்வு: கூடுதல் கட்டண முறையை முற்றிலுமாக அகற்ற என்.டி.ஏ. மூலம் ஜே.இ.இ.-ஐ தேசியமயமாக்குதல்.
சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல்: தற்போதைய நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி ஒரு தொலைநோக்குத் திட்டமாக விளங்குகிறது. எனினும் மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேருவதற்கு இத்திட்டத்திற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டியுள்ளது. தற்போது ஆசிரியர் கல்வி பயில வருபவர்கள் பெருமளவு மற்ற துறைக் கல்வியின் சேர வாய்ப்பை இழந்தவர்களே ஆவர்.
நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விக்கு தரமான மாணவர்களைப் பெறுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு நிதி உதவியை அளிக்க வேண்டும், இது ஆசிரியர் கல்விக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் வெற்றி பெறும் முதல் பத்தாயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். 
இந்த நிதி உதவி பெற்றுத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஐந்து ஆண்டு காலமாவது கட்டாய பணியாற்ற வழிவகை செய்யப்படவேண்டும். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளாவது நடைமுறையில் இருக்க வேண்டும். 
மேலும் இதன் மூலம் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இத்திட்டத்திற்காக நிதி உதவி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக வரி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்,
தீர்வு: ஆசிரியர் கல்வியை ஊக்கப்படுத்துதல்.
ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில் வேற்றுமைகளை களைதல்: ஆராய்ச்சிக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஒதுக்குவதற்கு ஒரு சவாலான அணுகுமுறை தேவைப்படுகிறது. தற்போதைய ஆராய்ச்சிக்கான நிதி உதவி ஐஐடி-களுக்கும் மற்ற முக்கிய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு பாரபட்சமாக ஒதுக்கப்படுகிறது. 
ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தகுதியானதாக இருந்தாலும் வேற்றுமையுடன் தனிமைப்படுத்தப்படுகிறது. முக்கிய துறைகளான நீர், சுகாதாரம், எரிபொருள் போன்ற துறைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் மிக பெரிய அளவிலான பூலோக-அரசியல் மற்றும் சமூக பொருளாதார ரீதியான பிரச்னைகள் உள்ளன.
தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி நிதி உதவி வழங்கும் முறை சில வெற்றிகரமான தீர்வுகளை அளித்திருந்தாலும், பெரும்பான்மை துறைகளில் சீரடையவில்லை. ஆராய்ச்சி நிதியை ஒதுக்கும்பொழுது முக்கிய நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்யாமல், அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கருத்தில் கொண்டு அவற்றுள் தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். 
ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையிலும் ஒரு பெரிய சவாலான திட்டத்தை தேர்வு செய்து, அதற்கான வழிவகைகளை கண்டுபிடிக்க சிறு சிறு அளவிலான ஆராய்ச்சிகளை பல கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு பெரிய சவாலையும் ஆராய்ச்சி செய்ய ஒரு தகுதியான தலைமை நிறுவனத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், ஐஐடி-கள் மற்றும் அரசுக் கல்லூரிகள் மட்டுமே ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும் என்ற கருத்தைக் கொள்வது ஆராய்ச்சி வெளியீடுகளை குறைக்கும் போக்காகும்.
தீர்வு: கூட்டாக இணைந்து ஆராய்ச்சியில் வெற்றி பெறுதல்.
புதுக் கொள்கைகளை வழிவகுத்தல்: பிரபல சட்ட நிபுணர் நானி பல்கிவாலா அவர்களின் பொது கொள்கை தொடர்பான கீழ்கண்ட கூற்றை சற்று மாற்றி ஆராயலாம். பொது கொள்கை என்பது ஐந்து ஆண்டுகால அரசாங்கத்தால், நான்கு ஆண்டு கால நடவடிக்கை நேரத்துடன், மூன்று ஆண்டு கால அதிகாரவர்க்கத்துடன், இரண்டு ஆண்டு கால குழு பரிந்துரை மற்றும் ஒரு ஆண்டு கால நீட்டிப்பின் இடையே, மக்களே தங்களது அன்றாடப் பிரச்னைகளைத் தீர்த்து கொள்வார்கள் என்பதே. உயர் கல்வித் துறை இந்தக் கொள்கைக்கு விதிவிலக்கு அல்ல.
கல்வித் துறைக்கு ஏற்ற பரிசாக, இந்தப் புத்தாண்டில் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்தலாம்: 
அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்; நீதியரசர் பி.பி. கஜேந்திர கட்கர் பரிந்துரைப்படி, சிறுபான்மையினருக்கான நிதியை சரியாக நடைமுறைபடுத்துதல்; முற்போக்கான உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை கடுமையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்துதலில் இருந்து விடுவித்தல்; கல்வி நிறுவனங்களைப் பாகுபாட்டிற்கு உட்படுத்தாமல் இருத்தல் மற்றும் ஆசிரியர் பணிக்கு உரிய பெருமையை மீட்டெடுத்தல் போன்றவை.
தை பிறந்துவிட்டது, வழி பிறக்குமா? 

கட்டுரையாளர்:
முதன்மையர், 
திட்டமிடல் மற்றும் மேம்பாடு,
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com