போற்றுதலுக்கு உரிய நீதிபதிகள்!

கடந்த ஜனவரி 12}இல் தில்லியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் செயல் இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது.

கடந்த ஜனவரி 12}இல் தில்லியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் செயல் இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. முன்னெப்போதும் நடந்திராத இந்த நிகழ்வால் பலரும் கவலை அடைந்துள்ளனர். 
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் ஐவரில் நால்வர், குறிப்பாகச் சொல்வதானால், நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தின் ஐந்து உறுப்பினர்களில் நால்வர், தலைமை நீதிபதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, உச்ச நீதிமன்றத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது. 
நாட்டின் அரசியல் சூழலிலும் அரசு நிர்வாகத்திலும் மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில், மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் உச்ச நீதிமன்றத்தில் நேரிட்டுள்ள இந்த நிகழ்வு சரியானதா என்ற கேள்வி எழுகிறது. நீதித் துறையின் மாண்பை உறுதிப்படுத்தும் நீதிபதிகளின் மதிப்பு குறைவது, மக்களிடம் நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். 
அந்த வெள்ளிக்கிழமை நான்கு நீதிபதிகளும் இந்த அளவுக்கு எல்லை கடந்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. தங்கள் கருத்துகளை பொது வெளியில் வைப்பதற்கு முன், தங்களிடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண அவர்கள் போதிய முயற்சி மேற்கொண்டனரா என்பதும் முக்கியமானது. 
ஏனெனில் ஊடகங்களைச் சந்தித்த நான்கு நீதிபதிகளும் கூறிய புகார்கள் நியாயமானவையாகவும், ஜனநாயகத்தைக் காப்பதில் அடிப்படையானவையாகவும் உள்ளன. எனினும் தீப்பொறி எங்கு எழுந்தாலும் அது ஒட்டுமொத்த இல்லத்தையும் எரித்துவிடும் என்பதை மறக்கக் கூடாது.
நீதித்துறை சார்ந்த வல்லுநர்களும், அறிவுஜீவிகளும் இந்தப் பிரச்னையை நீதித் துறைக்குள்ளேயே பேசித் தீர்த்திருக்க வேண்டும் என்றே கருதுகின்றனர். இந்தப் பிரச்னையை முன்வைத்த நீதிபதிகளின் நேர்மை, கண்ணியத்தைக் குறித்து யாருக்கும் ஐயமில்லை. எனினும் பொது வெளிக்கு வரும் முன்னதாக அவர்கள் தங்களிடையே இதைப் பேசித் தீர்க்க முயன்றார்களா? 
தாங்கள் பலவகைகளிலும் முயன்ற பிறகு, ஏதும் நிறைவேறாத நிலையில்தான் ஊடகங்களைச் சந்திக்க வேண்டி வந்ததாக அவர்கள் கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தலைமை நீதிபதியிடம் நேரில் பலமுறை பேசியுள்ளனர். 
கடிதம் வாயிலாகவும் தங்கள் குறைகளை இரு வாரங்களுக்கு முன்னரே தெரிவித்துள்ளனர். தங்கள் கருத்துகளை தலைமை நீதிபதி செவிமடுப்பார் என்று அவர்கள் காத்திருக்கவும் செய்தனர். 
உண்மையில் இந்த நீதிபதிகளின் போர்க்குரல் என்றாவது ஒரு நாள் வெளிவரத்தான் செய்திருக்கும். இதைப் புரிந்துகொள்ள நாம் கடந்த கால சரித்திரத்துக்குள் பயணிக்க வேண்டும். 1975}இல் நெருக்கடி நிலை அமலானபோது, நீதித்துறை பெரும் சர்ச்சைக்குள்ளானது. "அரசுத் தலைமை வளையச் சொல்வதற்கு முன்னரே தண்டனிடுவதாக' அன்றைய நீதித்துறை இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. அதன் பின்விளைவாகவே, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் என்ற முறை கொண்டுவரப்பட்டது. பின்னாளில் அதிலும் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.
ஏற்கெனவே நீதித் துறைக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் கிடைத்துவிட்டன. சாந்திபூஷண்} பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் வெளியிட்ட பட்டியலின்படி, இதுவரை பதவியிலிருந்த 16 தலைமை நீதிபதிகளில் குறைந்தது 8 பேர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதுகுறித்த நியாயமான விசாரணை நடைபெறாமல், நீதித்துறை அவமதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பி அந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் கூறப்படும் புகாரை உச்ச நீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். புகார் தவறானால் அதைக் கூறியவர் தண்டிக்கப்பட வேண்டும். 
மாறாக, இத்தகைய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதாகவே உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு, பெருநகரங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, தங்கள் எல்லைக்குள் வராத விவகாரங்களிலும் உச்ச நீதிமன்றம் மூக்கை நுழைப்பது வாடிக்கையாகி வருகிறது. 
மக்கள்நலன் சார்ந்த, பிரபலமான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தாமாகவே தலையிடுவதால், நீதிபதிகள் குடிமக்களின் நல்லாதரவைப் பெறுகிறார்கள். இது உச்ச நீதிமன்றம் தொடர்பான அடிப்படைப் பிரச்னைகளை மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடுகிறது. 
நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பெருகுவது குறித்துக் கவலைப்படுவது வெறும் வாய்ஜாலம் மட்டுமே. மேல் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்கள் பல நிரப்பப்படாமலேயே உள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் புரளும் பெருமளவு பணம் மற்றும் நீதிமன்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து மெல்லிய முனகலாக குற்றச்சாட்டுகள் கிளம்பிவிட்டன. அவை சரிவரக் கண்டுகொள்ளப்படுவதில்லை.
இதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட தேசிய நீதித் துறை பொறுப்புணர்வுச் சட்டம் (என்ஜேஏசி), நீதிபதிகள் நியமனத்தில் மக்களின் நம்பிக்கையுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட வாய்ப்பளிப்பதாக இருந்தது. அதன்படி உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவில் குடிமக்கள் சார்பு அமைப்புகளும் இடம்பெற வாய்ப்பிருந்தது. 
ஆனால், அதை உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு 4:1 என்ற பெரும்பான்மையுடன் ரத்து செய்துவிட்டது. அதன் மூலமாக, நீதிபதிகள் நியமனம் நீதித்துறையின் பிடிக்குள்ளேயே இருக்குமாறு செய்யப்பட்டது. அப்போது அரசின் சட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி, தற்போதைய அதிருப்தியாளரான நீதிபதி செலமேஸ்வர் மட்டுமே. 
அப்போது நடந்த நிகழ்வுகளை அரசுத் தலைமை அர்த்தமுள்ள மெüனத்துடன் வேடிக்கை பார்த்தது. அன்று அரசு எதிர்பார்த்தது, நான்கு நீதிபதிகளின் போர்க்குரலால் தற்போது நடந்தேறிவிட்டது.
வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்பது மட்டும் இங்கு சிக்கலல்ல. அது தொடர்பாக தலைமை நீதிபதிக்குள்ள அதிகாரம் குறித்த கேள்வியும் இதில் உள்ளது. 
பிரிட்டனில் தலைமை நீதிபதிக்கு அந்த அதிகாரம் உண்டு. ஆனால், இந்திய சட்டத்தில் இதுதொடர்பாக முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. 
எனினும் தலைமை நீதிபதி என்பதே கொலீஜியத்தால் தீர்மானிக்கப்படும் பணியிடம்தான். உயர் நீதிமன்றங்களில் மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியமும், உச்ச நீதிமன்றத்தில் 5 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியமும் நீதிபதிகளை நியமிக்கின்றன. நியமனத்தில் கொலீஜியத்தின் மதிப்பு ஏற்கப்படும்போது, நீதிபதிகளின் அதிகாரம் தொடர்பான முடிவெடுக்கக் கூடிய தகுதியும் கொலீஜியத்துக்குத்தானே இருக்க முடியும் என்ற கேள்வி தர்க்க ரீதியாக எழுகிறது. தலைமை நீதிபதிக்கு ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுதிய கடிதம் இதைக் குறித்து வினவி இருந்தது. 
ஊடகங்களிடம் குறைகளைக் கொட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரும் உச்ச நீதிமன்றம் வீழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ததாக யாரும் நம்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலவும் நடைமுறைகளைச் சீர்திருத்த வேண்டும் என்பதே அவர்களது வெளிப்பாடு. எனவே இவ்விஷயத்தில் இரு கருத்துகள் பிரதானமாகின்றன. 
அ) உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊடகச் சந்திப்பை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து.ராஜா, அதிருப்தி நீதிபதி செலமேஸ்வரைச் சந்தித்தது குறித்து விவாதித்து பிரச்னையை தடம் புரளச் செய்யக் கூடாது. 
அந்தச் சந்திப்பு பொருட்படுத்தத் தக்கதல்ல. உயர் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த பெயரையே ஒரு மாநில முதல்வரும் பரிந்துரைத்தார் என்ற புகார் இந்த விஷயத்தில் அதிக கவனம் பெறாமல் போனது. 
ஆ) நீதித் துறையில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோரை உச்ச நீதிமன்றம் காக்க வேண்டும்; அவர்களை அச்சுறுத்தக் கூடாது. உடலில் உள்ள சில கிருமிகளை அழிக்க கடும் சூரிய ஒளியில் உடலைக் காட்டியாக வேண்டும் என்றால் அதைச் செய்துதான் ஆக வேண்டும். அதை மூடிய அறைக்குள் மறைப்பதில் பயனில்லை.
எனவே, ஊடகங்களைச் சந்தித்து உள்ளக் குமுறல்களைக் கொட்டிய நீதிபதிகளின் பணி போற்றுதலுக்கு உரியதே. அதிலும் நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகியோர் விரைவில் ஓய்வு பெற உள்ளவர்கள். 
எனினும் வரும் அக்டோபரில் அடுத்த தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் நீதிபதி ரஞ்சன் கோகோயும் அவர்களுடன் இணைந்து போர்க்குரல் எழுப்பியது பாராட்டுக்குரியது. அவருக்கு நமது மரியாதை கலந்த வணக்கங்கள்.

கட்டுரையாளர்: 
ஆசிரியர், 
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com