சீனாவும் டிரம்ப் - கிம் சந்திப்பும்!

இன்று (ஜூன் 12) சிங்கப்பூரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வட கொரிய இளம் தலைவரான கிம்-ஜோயிக்-உன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. 1950-53-இல் நடந்த

இன்று (ஜூன் 12) சிங்கப்பூரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வட கொரிய இளம் தலைவரான கிம்-ஜோயிக்-உன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. 1950-53-இல் நடந்த சிந்தாந்தத்தின் அடிப்படையிலான கொரிய போரில் ராணுவ வலிமை மற்றும் சீனாவின் உதவி மூலம் தென் கொரியாவை கைப்பற்றும் வட கொரியாவின் பகீரத முயற்சியை ஐ.நா. கொடியின் கீழ் செயல்பட்ட அமெரிக்க கூட்டுப்படைகள் தடுத்தன. இதனால் இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. 
இப்போரில் விமானப் படை விமானியான மாவோவின் மூத்த மகன் மாவோ ஏனிங் உட்பட ஒரு லட்சத்து எண்பதாயிரம் சீனப் போர் வீரர்கள் உயிரிழந்தனர். போர் நிறுத்தத்திற்கான முறைப்படியான ஒப்பந்தம் இல்லாமல் போர் நிறுத்தப்பட்டது. எனினும், தென் கொரியாவை எப்படியாவது போரின் மூலம் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 65 ஆண்டுகளாக முயற்சிக்கிறது கிம் குடும்பம். 
ஆனால், தன் நோக்கத்திற்கு தடங்கலான தென் கொரியாவைப் பாதுகாக்க 28,000 அமெரிக்க வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் நிரந்தமாக முகாமிட்டிருப்பது வட கொரியாவுக்கு எரிச்சலூட்டியது. இதனால், அமெரிக்காவைத் தன் முதல் பகைவனாகக் கருதி, அமெரிக்க எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது வட கொரியா.
அடக்குமுறை மற்றும் குடும்ப ஆட்சியும், பிரசார உத்திகளும், கம்யூனிச சிந்தாந்தமும், அதிநவீன ஆயுதங்களும், கட்டுப்பாடான ராணுவமும், அமெரிக்க எதிர்ப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக அண்மைக்காலம் வரை கை கொடுத்த நட்பு நாடான சீனாவும், வட கொரிய ஆட்சியாளர்களைப் பாதுகாத்து வருகின்றன. வட கொரிய குடும்ப அடக்குமுறை ஆட்சியை மாற்ற தென் கொரியாவும் விதவிதமான பிரசார உத்திகள், ராஜதந்திரங்கள், ராணுவக் கூட்டணி, அமைதிப் பேச்சுவார்த்தை, பொருளாதார உதவி என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அவ்வப்போது இருநாட்டு எல்லையில் அமெரிக்க படைகளுடன் நடத்தப்படும் அச்சுறுத்தல் போர் ஒத்திகைகள் மற்றும் தென் கொரியாவிலிருந்து அவ்வப்போது அனுப்பப்படும் பிரசார ராட்ஷச பலூன்கள் ஆகியவை வட கொரிய ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டி வந்தன. 
இரு கொரிய இணைப்பு அமைப்பினர் மற்றும் கிம் ஆட்சிக்கு எதிரானவர்களால் ஆயிரக்கணக்கில் அனுப்பப்படும் பிரசார பலூன்களில் கிம் குடும்ப ஆட்சிக்கு எதிரான துண்டு பிரசுரங்களும், உணவுப் பொருள்களும், காணொளிகளும், வட கொரிய மக்களைப் புரட்சி செய்யத் தூண்டி வந்தன. மேலும், இரு கொரிய எல்லையிலிருந்து முழங்கும் பிரசார ஒலிபெருக்கிகள் பரஸ்பரம் எரிச்சலூட்டி இரு நாட்டு எல்லையை எப்பொழுதும் பதற்றத்துடனும், பரபரப்புடனும் மாற்றின. இதனால், தன் ஆட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கிம் குடும்பம் பெரும்பாலான பணத்தை நாட்டின் பாதுகாப்புக்கு செலவழித்தது. 
ஆனால், அமெரிக்கப் பாதுகாப்பிலும், ஆதரவிலும் மேற்கு ஜெர்மனியைப் போன்று, தென் கொரியா மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆயுதப் பெருக்கத்தையும், பிரசாரத்தையும், தனிமையையும் நம்பிய வட கொரியா தன் மக்களுக்கு கிழக்கு ஜெர்மனியைப் போல, தொடர்ந்து வறுமையையும், அச்சத்தையும் தான் தந்துள்ளது. 
உதாரணமாக, 1993-இல் ஏற்பட்ட கடும் உணவுப் பஞ்சத்தின்போது, ஜப்பானிடம் இருந்து உணவை இறக்குமதி செய்வதற்காக, அந்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மிகக் கொடிய கதிர்வீச்சை ஏற்படுத்தும் அணு உலைக் கழிவுகளை தன் நாட்டில் வைக்க அனுமதித்து, உணவை இறக்குமதி செய்தது வட கொரியா. 1948 - முதல் கொரிய ஆட்சியாளர்கள் அச்சமடைந்தும், அச்சப்படுத்தியும் தங்களையும் தங்கள் நாட்டையும் தனிமைபடுத்தியே ஆட்சியில் தொடர்கின்றனர். 
அணு ஆயுதப் பெருக்கமோ, தொடர் பிரசார உத்திகளோ, அடக்குமுறை சிந்தாந்தமோ, இரும்புத் திரையோ ஒரு நாட்டை பாதுகாக்காது என்பதற்கு முன்னாள் சோவியத் யூனியன் ஒரு சிறந்த உதாரணம். அதுபோல், பல்வேறு அத்துமீறல்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்திவிட்டு, திடீர் சமாதான முயற்சிகளும், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தங்களும் செய்தால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என்பதும் வரலாறு காட்டும் உண்மை.
உதாரணமாக, 2003 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சதாம் உசேன் பிடிபட்டவுடன், லிபியா அதிபர் கடாபி, தன்னையும், தன் ஆட்சியையும் பாதுகாக்க, தன் நாட்டின் அணு உலைகளை மூடும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடன் அவசரஅவசரமாக செய்து கொண்டார். ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், கடாபி எதிர்ப்பாளர்களின் உதவியுடன் கடாபியை அக்டோபர் 11, 2011-இல் கொன்று, நாட்டையும் சீர்குலைத்தன. 
கடாபியின் படுகொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு, டிசம்பர் 17, 2011-இல் வட கொரிய அதிபராக பதவியேற்றார் கிம். எனவே அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள்தான் தனக்கும், தன் நாட்டுக்கும் பாதுகாப்பு என்பதாக நினைத்தார் அதிபர் கிம். இதன் அடிப்படையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஏராளமான ஏவுகணைகளையும், நான்கு முறை அணு ஆயுத சோதனைகளையும், அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் அடுத்தடுத்து சோதித்து தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு பயத்தையும், அமெரிக்காவிற்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தினார் அதிபர் கிம். 
இத்துடன், அனைத்து ஆயுதங்களையும் அமெரிக்காவிற்கு எதிராக தான் பயன்படுத்தப் போவதாகவும் மிரட்டத் தொடங்கினார். ஆத்திரமடைந்த டிரம்ப் வட கொரியாவைத் தீக்கிரையாக்கப்போவதாக எச்சரித்ததோடு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறியதற்காக ஐ.நா. மூலம் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். 
இறுதியாக, வட கொரியாவின் ஒரே நட்பு நாடான சீனாவிற்கும் பல்வேறு நிர்பந்தங்களை கொடுத்தது அமெரிக்கா. அணு ஆயுதங்களை வட கொரியா ஒழிக்காவிட்டால் சதாம் உசேன், கடாபி போன்றவர்களின் நிலைமைதான் கிம்முக்கும் ஏற்படும் என்று அமெரிக்கா நேரடியாக எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் தொடர் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்த சீன அதிபர் ஷீ ஜின்பிங்க்-இன் நிர்ப்பந்தத்தால் அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தையும், அமைதிக்கான பேச்சுவார்த்தையும் தவிர்க்க இயலாதது என்பதை வட கொரிய தலைமை உணரத் தொடங்கியுள்ளது. 
கடந்த 65 ஆண்டுகளாக இரண்டாம் மட்ட தலைவர்களின் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது உலகத்தையும், தென் கொரியாவையும் ஏமாற்றுவதுதான் வட கொரியாவின் வாடிக்கை. 
ஆனால், தற்போது அதிரடியாக அதிபர் கிம் அணு ஆயுதங்களை படிப்படியாக அழிக்கவும், அணு ஆயுத சோதனைக் கூடங்களைத் தகர்க்கவும் உத்தரவாதம் அளித்ததோடு, ஏப்ரல் 24-ஆம் தேதி இரு நாட்டு எல்லையில் தென் கொரிய அதிபரான மூன் ஜே-வை சந்தித்து நட்போடு உறவாடியதோடு, புதிய சமாதான வரலாற்றை உருவாக்கவும், போர் நிறுத்தத்தை முறைப்படி அறிவிக்கும் பல்முனை பேச்சுவார்த்தைகளைத் தொடக்குவதாகவும் உறுதியோடு அறிவித்தது மிகப்பெரிய மாற்றம்.
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு கிழக்கு-மேற்கு ஜெர்மனி மற்றும் வட-தென் வியத்நாம் நாடுகளைப் போன்று, வட-தென் கொரிய நாடுகளும் இணைந்தால் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கு அப்பிராந்தியத்தில் வலுபடும். இதனால் சீனாவின் பிராந்திய மேலாண்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
சீனாவின் விரிவாக்கக் கொள்கையினால் ஏற்கெனவே படிப்படியாக சீனாவை சுற்றி வளைக்கவும், பல்வேறு பொருளாதார நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தவும், பாதுகாப்பு ரீதியாக தனிமைப்படுத்தவும் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக, அமெரிக்காவின் தலைமையில் 26 பசிபிக் பிராந்திய நாடுகள் மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் வீரர்களுடன் நடத்தவிருக்கிற பிரம்மாண்டமான இரு வார கடற்படை ஒத்திகையில் கலந்து கொள்ளுமாறு சீனாவிற்கு கொடுத்த அழைப்பை அமெரிக்கா திரும்ப பெற்றுக்கொண்டது, சீனாவிற்கு எரிச்சலூட்டியது. 
ஆனால், சீன அதிபர் ஷீ ஜின்பிங் அமைதியாக, ஆனால் உறுதியாக தன் விரிவாக்க கொள்கையில் தீவிரமாக உள்ளார். இதனால், புதிய பனிப்போர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உருவாகலாம்.
மிகவும் சிக்கலான, 65 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கொரிய பிரச்னைக்கு நிச்சயமாக இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஒரே நாளில் முடிவு கட்ட முடியாது. எனினும், பகைவர்களாக இருந்த டிரம்ப்-கிம் இடையே நட்பை உருவாக்கி, எதிர்காலத்தில் சீனா, ஜப்பான் உட்பட பன்னாட்டு- பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இன்றைய சிங்கப்பூர் சந்திப்பு அடித்தளமிட்டால் அதுவே மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும். இம்முயற்சியில், இரு தலைவர்களும் வெற்றி பெற்றால் இருவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற நிச்சயமாக தகுதியுள்ளவர்களாவார்கள்.

கட்டுரையாளர்: 
பேராசிரியர்,
புதுவை மத்திய பல்கலைக்கழகம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com