இலக்கியம் என் சீருடை

காவல்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்து, தற்போது இறைவனது திருவடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி, சமுதாயத்தில் காவல்துறையின் பங்களிப்பை

காவல்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்து, தற்போது இறைவனது திருவடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி, சமுதாயத்தில் காவல்துறையின் பங்களிப்பை விளக்க "அடங்கு, அடக்கு' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுவார். ஒரு மோசமான குற்றவாளியின் அன்றாட வாழ்க்கையின் பெரும் பகுதிகூட விதிமுறைகளுக்கு உட்பட்டே கழிகிறது. அதாவது, அவர் "அடங்கு' என்ற கொள்கையையே பெரும்பாலும் பின்பற்றுகிறார். விதிமுறைகளை ஒருவர் மீறும்போதுதான் "அடக்கு' என்ற கொள்கையை காவல்துறையினர் அமல்படுத்தி அவரது செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டி வருகிறது.
ஒரு போக்குவரத்துச் சந்திப்பில் சற்று நேரம் நின்று கவனியுங்கள். ஆயிரக்கணக்கான மக்கள், "அடங்கு' என்ற முறையில் விதிமுறைகளைப் பின்பற்றி, காவிரியில் சலசலப்பு இல்லாமல் நீர் ஓடுவதைப்போல் தத்தம் வேலையாகப் போவதைப் பார்ப்பீர்கள். காவல்துறையினரும் தலையிடாமல் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருவர் சட்டத்தை மீறுவார், காவல்துறையின் "அடக்கு' முறை அமலுக்கு வரும்.
மனிதன் அடங்கி வாழ்வதும் மிருகம் இஷ்டப்படி செய்வதும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசத்தின் அறிகுறி. பசி, காமசக்தி ஆகியவற்றால் உந்தப்பட்ட மிருகம், தன் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆங்காங்கே திரிகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றைப் பூர்த்தி செய்து கொள்கிறது. தம் இச்சைகளை நிறைவேற்ற அவை எந்த விதிமுறையையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அதே நிலையில் உள்ள மனிதன் உடல் பசியாலோ, காமப் பசியாலோ வாடும்போது கைக்கு எட்டுவதைப் பிடுங்கிக் கொண்டு தன் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில்லை. மிக அரிதாக, அவ்வாறு செய்யும் மனிதர்களை "மிருகங்கள்' என்றே சமுதாயம் தூற்றுகிறது.
குழந்தைப்ப பருவத்திலிருந்தே சரி, தவறு என்று நம் மனதில் பதிவான நெறிமுறைகள் நம்மை ஆள்கின்றன. "திருடாதே' என்று மனதில் ஆழமாகப் பதிவு பெற்றிருக்கும் மனிதன், பட்டினியாக செத்துவிட்டாலும்கூட திருடிச் சாப்பிட மாட்டான். 1943-ஆம் ஆண்டு வங்க மாநிலத்தில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தங்கள் பட்டினியைப் போக்க அவர்கள் ஏன் ஆடுமாடுகளைத் தின்னக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். ஆனால், பட்டினியால் இறந்து கொண்டிருந்தவர்களுக்கு மத நம்பிக்கை என்பது சாவைவிட முக்கியமானதாகத் தோன்றியது.
உடலின் தேவைகளை நிறைவேற்ற, மனம்தான் நம்மை ஆள்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் பிரபல மனவியல் நிபுணர் ஏப்ரஹாம் மாஸ்லோ. உடலின் வலியைத் தாங்கிக் கொள்பவர் மன வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடைந்து போகிறார். அனைத்து வசதிகளும் பெற்றிருப்பவர் மனம் நொந்து தற்கொலை செய்து கொள்வதைக் கண்டு, அவருக்கு என்னதான் குறை இருந்தது, ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று வியக்கிறோம்.
நாம் சிசுவாக இருக்கும்போது "செய்யாதே, கூடாது, வேண்டாம்' என்பது போல் வார்த்தைகளின் மூலம் நம் பெற்றோர், வீட்டிலுள்ள பெரியோர் எது செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி, நமக்குள் ஒரு காவலரை உட்கார வைத்திருக்கிறார்கள். அந்தக் காவலரின் அறிவுரைக்கு நாம் அடங்குகிறோம்.
விலை மிகுந்த ஒரு பொருளைப் பார்க்கும்போது, நாம் எடுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வராது என்று தெரிந்தும் நாம் அந்தப் பொருளை எடுத்துக் கொள்வதில்லை. நமக்குள் அமர்ந்திருக்கும் காவலர் நம்மைத் தடுக்கிறார். அந்தப் பொருளை நோக்கி நாம் கைகளை நீட்டினாலே, நம் கைகளை நடுங்க வைக்கிறார் அந்தக் காவலர். அந்தக் காவலரைத்தான் மனசாட்சி என்கிறோம்.
தவறான காரியங்களைச் செய்யவிடாமல் நம்மைத் தடுக்கும் அந்தக் காவலர் நம் மனதிற்குள் சிறிது சிறிதாக வளர்வதை சமுதாயமயமாக்குதல் பயிற்சி (socialisation training) என்பார்கள். சிலரின் குடும்பச் சூழல் காரணமாக அவர்களுக்கு சரியான சமுதாயமயமாக்குதல் பயிற்சி கிடைப்பதில்லை. விதிமுறைகளின் முக்கியத்துவத்தை அறியாதவர்களாக அவர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
சிறைத்துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றியபோது இப்படிப்பட்ட பலரை நெருக்கமாகப் பார்க்கும் சந்தர்ப்பமும் அவர்களை மாற்றும் முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எனக்குத் தெரிந்த மனவியல் விஷயங்களை வைத்துக் கொண்டும் தியான முறைகளைப் பயன்படுத்தியும் அவர்களின் மனதை மாற்ற ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் அது மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. பல்லாண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்திருந்தும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் நெருக்கமாகக் கவனித்து வந்தும் சிறைத்துறையில் நான் பார்த்து, அறிந்து, கற்றுக் கொண்ட விஷயங்களுக்கு எதுவும் ஈடு கொடுக்க முடியாது.
தியான முறைகள் மூலம் சிறைவாசிகளுக்கு சற்றே மன அமைதி ஏற்பட்ட பிறகு, அவர்கள் அந்த மன நிலையே தொடர வேண்டும் என்று விரும்பினார்கள். ஆரம்பத்தில் என்னை சந்தேகத்துடன் பார்த்தவர்கள், எப்படியாவது நான் அவர்களை மீட்க வேண்டும் என்று ஏங்கினார்கள்.
"அடங்கு' முறை நிலவும்போது "அடக்கு' முறை தேவைப்படாது. கூடுதல் காவலர்கள், கூடுதல் நீதிமன்றங்கள், கூடுதல் சிறைச்சாலைகள் - இவற்றின் தேவை தவிர்க்கப்படும்.
சமூக ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியத்தைப் போன்றதே. நமக்குள் இருக்கின்ற ஆரோக்கிய சக்தி பலமாக இருந்தால் மருத்துவர்களின் உதவி தேவைப்படாது. ஆனால், நமக்குள் இருக்கிற ஆரோக்கிய சக்தி குன்றிவிட்ட நிலையில் நாம் மருத்துவர்களையே நம்பியிருக்க வேண்டும். உள் ஆரோக்கியம் இருக்கின்ற சமூகத்தில் அதிகமான மருத்துவமனைகள் தேவையில்லை. அதே போல, தாமே விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படும் சமூகத்தில் எண்ணிக்கையில் குறைவான காவல்துறையினரை வைத்தே பாதுகாப்பு அளிக்க இயலும்.
குடும்பம்தான் சமூகத்தின் அடிப்படை என்ற முறையில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் வேர் குடும்பத்தில்தான் இருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் சமூகம் மிக வேகமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் தன்னடக்கம் வளர்ச்சிக்கான மந்திரம்; தற்பொழுது எல்லையில்லா சுதந்திரம்தான் வளர்ச்சி மந்திரமாக மாறிவிட்டது. பெண்களைப் போலவே ஆண்களும் ஏன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குத் திரும்பிவிடக்கூடாது என்பதற்குப் பதிலாக, ஆண்களைப் போலவே பெண்களும் ஏன் இஷ்டப்பட்ட நேரத்திற்கு வீட்டுக்கு வந்து போகக் கூடாது என்னும் கேள்வி ஒலிக்கிறது.
இணையம், தொலைக்காட்சி, மற்ற ஊடகங்கள் மூலமாக, நம் மரபுகளுக்கு முரணான நவீன கலாசாரம் என்பது ஊடுருவியுள்ளது. கலாசார மாற்றங்கள் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து இயற்கையாக உருவாகும்போது, அது படிப்படியாக ஒவ்வொரு தருணத்திலும் தன்னை அந்த மாற்றங்களுக்காகத் தயார் செய்துகொள்கிறது. ஆனால் வெளிநாடுகளில் வளர்ந்த கலாசாரம் திடீரென்று நம்மைத் தாக்கும்போது பல்லாண்டுகளாக நிலவி வந்த திடநிலையை கலக்கி ஒரு சமூகக் கலக்கத்தினை ஏற்படுத்துகிறது. அந்த நிலையில்தான் இன்று நம் சமூகம் இருக்கிறது. அரைகுறையாகப் படித்து, சுயமுடிவுகள் எடுக்கும் பக்குவம் பெறாத இளைஞர்களுக்கு திடீரென்று வளர்ச்சியடைந்த நாடுகளின் கலாசாரத்துடன் தொடர்பு கிடைத்துவிட்டது. அமைதியாக உட்கார்ந்திருந்த ஒரு குழந்தைக்கு திடீரென்று ஒரு எனர்ஜி ட்ரிங்க் கொடுப்பதுபோல் ஒரு நிலை. 
புதிய கலாசாரத்தில் வளர்ந்த குழந்தைகள், மரபுகளை துச்சமாகவும் வளர்ச்சிக்குத் தடையாகவும் கருதுகிறார்கள். அத்துடன் இவ்விளைஞர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் இடையில் பலவிதமான இடைவெளிகள் ஏற்பட்டுள்ளன. முன்காலத்தில் பாட்டிகள் இராமாயணக் கதைகளின் மூலமாக வளரும் குழந்தைகளுக்கு நெறிமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் பணியை, இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் முழுகவனமாக இருக்கும் அம்மாக்கள் எங்கோ தொலைத்துவிட்டார்கள். பெற்றோரால் அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் பேஸ்புக் மூலமாக ஆஸ்திரேலியாவில், ஆமதாபாதில், டோக்கியோவில் வசிக்கும் நண்பர்களின் ஆலோசனைகளையே நாடுகிறார்கள்.
புதிய கலாசாரத்திற்கு ஏற்ப ஒரு புதுவிதமான தன்னடக்க முறை சமூகத்தில் பரவ வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமூகம் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று விரும்புவது நடைமுறைக்குப் புறம்பானது. காலம் மாறிவிட்டது, கலாசாரம் மாறி வருகிறது என்ற உண்மையை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சென்ற காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் பாலமாகச் செயல்பட இரண்டையும் இணைத்து அந்தக் காலத்தின் சிறப்புகளையும் இந்தக் காலத்தின் சிறப்பம்சங்களையும் பரப்பும் சிந்தனையாளர்களே இன்று நமக்குத் தேவை.
காவல்துறையிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம்... இத்துடன் காவல் பணி முடிந்து விட்டதா என்று மனம் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலும் அளிக்கிறது. இல்லை, சீருடை அணிந்தவர் என்றைக்கும் காவலர்தான் என்கிறது மனதடியிலிருந்து எழுந்த குரல்.
காவல்துறை அதிகாரியாக சமூகத்தில் குற்றங்கள் மற்றும் மோதல்களைக் குறைக்கும் பணியை செய்பவன் அதே பணியை ஓய்வு பெற்றபின் இலக்கியம் மூலமாக செய்யலாமே. அதற்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை.
தன் வார்த்தைகளின் வலிமையினாலும் தன் எண்ணங்களின் சக்தியினாலும் மற்றவர்களை கட்டுப்படுத்துபவர்களை பற்றி ரஷிய நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் ஸோல்ஸெனிட்ஸின் கூறியது: "ஒரு எழுத்தாளர் நாட்டில் இன்னொரு அரசாங்கம் இருப்பது போல்' என்றார்.
எண்ணங்களின் சக்தி அபரிமிதமானது. வாளால் ஜெயிக்க முடியாததை பேனாவால் ஜெயிக்க முடியும். மனதை மனதால் மட்டுமே வெல்ல முடியும். இலக்கியமும் ஒரு சீருடை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com