பெருந்திரள் போராட்டம்!

இது போராட்டங்களின் காலமாக இருக்கிறது. குடிக்கத் தண்ணீர் கேட்பதில் தொடங்கி, ஆலைகளுக்கு, அரசுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வரை பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

இது போராட்டங்களின் காலமாக இருக்கிறது. குடிக்கத் தண்ணீர் கேட்பதில் தொடங்கி, ஆலைகளுக்கு, அரசுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வரை பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. முன்பெல்லாம் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்போடுதான் போராட்டங்கள் நடக்கும். இப்போதோ தனி மனிதர்களும், சின்னஞ்சிறு அமைப்புகளுமே போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள். நேரடி அரசியலில் இல்லாமல், வாழ்க்கையே போராட்டமாகக் கொண்டிருக்கிற அடித்தட்டு மக்கள்தான் இவற்றின் முக்கியப் பங்கேற்பாளர்கள்.
 சில இடங்களில் மதமோ, பிரிவினைவாதமோ, அரசியலோ அல்லது இன்ன பிற சக்திகளோ பின்புலத்தில் இருந்து இயக்கலாம். ஆனால், எல்லாப் போராட்டங்களையும் அந்த வட்டத்திற்குள் நிறுத்தி பார்த்து, மொத்தமாகக் குற்றம் சொல்ல முடியாது. உண்மையிலேயே பாதிப்பு இருக்கும்போது, கண்ணெதிரே உரிமை பறிபோகும்போது மக்களுக்கு இயல்பாகவே உணர்வு உந்தப்படுகிறது. ஏதோ ஒரு முனையில் அது தன்னெழுச்சியாக மாறுகிறது. எத்தனையோ நாள்கள், எத்தனையோ விதமாக மக்கள் போராடினாலும் அதனை அதிகார வர்க்கம் கண்டுகொள்ளாதபோது, அமைச்சரோ, அதிகாரிகளோ வந்து பெயருக்குக்கூட பேசாதபோது மக்களின் உணர்வும் எழுச்சியும், கோபமாகவும் தீவிரமாகவும் உருவெடுக்கின்றன. எப்போதுமே போரும், புரட்சியும் திடீரென வெடித்தது போலத்தான் தோன்றும். ஆனால் ஒரே நாளில் அவை நடந்திருக்காது. தொடர்ச்சியான நிகழ்வுகளின் அழுத்தம் ஒரு கட்டத்தில் பீறிட்டுக் கிளம்பிவிடும்.
 அதிலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு அறவழிப் போராட்டங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. "ஆளுங்கட்சியை மட்டுமல்ல; அத்தனை அரசியல் கட்சிகளையும் புறக்கணிப்போம்' என்று அப்போது தொடங்கிய ஒரு போராட்ட உத்தி, அதற்குப் பிறகு நன்கு பிரபலமாகி இருக்கிறது. தமிழகத்தில் அதுவரை நடந்த எந்தவொரு வரலாற்றுப் போராட்டத்திற்குப் பின்னாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அரசியல் கட்சி இருந்திருக்கும்.
 ஒருவேளை போராட்டம் தொடங்கும்போது இல்லாவிட்டாலும், தொடங்கியபின் அதனை ஏதாவது ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிடும் (ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களில் சில அமைப்புகள் கூட்டத்தின் பலனை அறுவடை செய்ய முயன்று, வன்முறையில் முடித்து வைத்ததைப் புறந்தள்ளிவிடுவோம்). அப்படியில்லாமல், ஆதரவு தெரிவிக்க வந்த தலைவர்களைக்கூட அருகில் சேர்க்காமல் வெளியேற்றியது, தற்போதைய அரசியல் மீதான இளைய சமுதாயத்தின் அவநம்பிக்கையை அப்பட்டமாக காட்டிய தருணம். அதன் பிறகான பல போராட்டங்களில் இந்த பாணியை பொதுமக்கள் கையிலெடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் தனியாகப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. ஒப்புக்கு ஏதோ ஓர் அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. இப்படி கட்சிகளின் போராட்டங்கள் மதிப்பிழந்து போவதும், போராட்டக் களத்தில் கட்சிகள் இப்படி விலக்கி வைக்கப்படுவதும் நிறைய செய்திகளைச் சொல்கின்றன.
 அரசியலில் போலிகள் முளைத்ததைப் போலவே கட்சிகளின் போராட்டங்களிலும் போலித்தனம் புகுந்து விட்டது. உண்மையான ஈடுபாடில்லாமல், பெயருக்கு அவர்கள் நடத்தும் ரயில் மறியல், பேருந்து மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போன்றவற்றைப் பார்த்துப் பொதுமக்கள் சிரிக்கவும், அக்கட்சிகளை வெறுக்கவும் தொடங்கிவிட்டனர். இவை எல்லாமே வெளிவேடம் என்ற எண்ணமும் நம்பகத்தன்மையில்லா நிலையும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
 யாருக்காக போராட்டம் நடப்பதாக சொல்லப்படுகிறதோ அவர்களே அதனை நம்பாதபோது பிறகு யாருக்காக அதை நடத்துகிறார்கள்? வேறு யாருக்காக? தங்களுக்காகத்தான். தொலைக்காட்சி செய்திகளில் இடம்பிடிப்பதையும், அடுத்த நாள் பத்திரிகையின் இண்டு இடுக்கிலாவது செய்தி வரவழைப்பதையும் மட்டுமே போராட்டத்தின் முதன்மை நோக்கமாக கட்சிகளும் முன்னணி அமைப்புகளும் மாற்றி வைத்திருக்கின்றன. பொதுநலனுக்காக என்பது மாறி கட்சிகளின் இருப்பைக் காட்டுவதற்காகவே போராட்டங்கள் என்றான பிறகு மக்களுக்கு அவற்றின்மீது நம்பிக்கை எப்படி வரும்?
 அந்தக் காலத்தில் முகநூல், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்ற தொழில்நுட்பம் எதுவும் இல்லை. ஆனால் தேச விடுதலை என்னும் ஒரு புள்ளியில் மக்களின் இதயங்கள் இணைந்தன; அவர்களின் கரங்கள் உயர்ந்தன. மூலை முடுக்கெல்லாம் காந்தி என்ற மந்திரச் சொல் போய்ச் சேர்ந்திருந்தது. அதுவே அத்தனை மனிதர்களையும் ஒன்று சேர்த்தது. சாலை வசதிகூட இல்லாத குக்கிராமங்களைக் கூட காந்தி சென்றடைந்திருந்தார். இது எப்படி சாத்தியமாகி இருக்கும்? இதற்கு ஒரே காரணம்தான். போராட்டங்களின் நோக்கம் உண்மையாக இருந்தது. போராடும் தலைவர்கள் உண்மையாக இருந்தார்கள். எனவே, மக்களும் உண்மையாக அவர்கள் பக்கம் நின்றார்கள்.
 அப்போதெல்லாம் உண்ணாவிரதங்கள் உண்மையிலேயே உண்ணாத விரதங்களாக இருந்தன. என்ன கோரிக்கைக்காக போராடத் தொடங்கினார்களோ, அதை வென்றெடுத்தால் மட்டுமே போராட்டம் முடியும். இல்லாவிட்டால் உயிர் மடியும். அதனால்தான் அவர்கள் உண்மைப் போராளிகளாக வரலாற்றில் பதிந்து இருக்கிறார்கள். இதைப் பெருமையோடு சொல்கிறபோது, இப்போதைய உண்ணாவிரதப் பந்தல் ஒன்றுக்குப் பக்கத்திலே பஜ்ஜி, போண்டா விற்பனை சூடு பறந்து, அது படமாக பத்திரிகையில் வந்ததை வேதனையோடு ஒப்பிட்டுப்பார்க்கத்தானே வேண்டியிருக்கிறது?
 பாத யாத்திரை எனப்படும் நடை பயணங்களுக்கு ஒரு காலத்தில் நல்ல மவுசு இருந்தது. போராட்ட வடிவமாக, ஒரு கோரிக்கையை முன்வைத்து இத்தகைய பயணங்கள் நிகழ்ந்தாலும், நடந்தே போய் தொண்டர்களையும் மக்களையும் இயல்பாக பார்ப்பதற்கான வாய்ப்பாக, நெருக்கத்தில் இருந்து அவர்களது குறைகளைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக தலைவர்கள் அதனைப் பயன்படுத்தினார்கள். இப்போது அத்தகைய பயணங்களிலும் நிறைய செயற்கைத்தனங்கள் புகுந்துவிட்டன. சர்க்கரை நோய் இருப்பதால்தான் சில தலைவர்கள் நடக்கிறார்கள் என்று சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே கிண்டல் செய்கிறார்கள்.
 முன்பெல்லாம் தலைவர்களைக் காண்பதற்காக, கைப்பணத்தைச் செலவழித்து வந்து, கால் கடுக்க நின்ற கூட்டம் இருந்தது. அவர்களின் பேச்சைக் கேட்பதை, அதனை வேதவாக்காக கருதி செயல்படுவதைப் பெருமையாக கருதினார்கள். மெüனவிரதம் இருக்கும் மகாத்மா காந்தி வெறுமனே கையசைத்துப் போவதைப் பார்ப்பதற்கும் பலமுறை மக்கள் திரண்டிருக்கிறார்கள். இரவில் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர் பயணிக்கும் ரயிலையாவது பார்த்துவிட்டு வரலாம் என்று மணிக்கணக்காகக் காத்து கிடந்திருக்கிறார்கள்.
 இன்றைக்கு கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஆட்களைக் கொண்டு வருவதே பெரும் தொழிலாகி இருக்கிறது. இதற்காக எல்லா ஊர்களிலும் முகவர்கள் முளைத்துவிட்டார்கள். அவர்களின் மூலமாக பிரியாணி, மது ஆகியவற்றோடு சம்பளமும் நிர்ணயித்து ஆள் பிடித்து வருகிறார்கள். இதனால் கூலி வேலைக்குப் போவதைப்போன்று எல்லாக் கட்சிப் போராட்டங்களுக்கும் செல்வதற்கு ஊருக்கு ஊர் ஒரு தனி கூட்டம் உருவாகி விட்டது. "பாஸ்ட் புட்' என்கிற உடனடி உணவுப் பொருள்களைப் போல, உடனடிப் போராட்டக்காரர்களும் எல்லா ஊரிலும் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாக் கட்சியும் நம் கட்சியே. அவற்றின் கொள்கை, கோட்பாடு பற்றியெல்லாம் கவலை இல்லை. கட்சிகளின் தலைவர்களே அவற்றைப் பற்றி கண்டுகொள்ளாத போது நாம் எதற்காக சிந்திக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதனால் இடத்திற்கு ஏற்றபடியான விதவிதமான கோஷங்கள் ஒரே வாயிலிருந்து வருகின்றன. அதே கைகள் எதிரும் புதிருமான வாசகங்களை ஏந்தி நிற்கின்றன.
 காலந்தோறும் களங்களும் போராட்டங்களின் வடிவங்களும் மாறியே வந்திருக்கின்றன. ஜனநாயகத்தின் பெரிய பலம் போராட்டங்களே. அவைதான் எப்போதும் வரலாற்றைத் தீர்மானித்து வந்திருக்கின்றன. நல்லரசியலுக்கான அறிவைத் தந்திருக்கின்றன. அதனால்தான் "போராடு, போராடு போராட்டத்தில்தான் ஞானம் பிறக்கும்' என்றார் சுவாமி விவேகானந்தர். ஆனால், போராட்டத்தில் உண்மை இருக்க வேண்டும். பேருக்கு செய்யப்படும் போராட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.
 வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, போராட்டத்திலும் போராடுபவர்களிடமும் ஒழுங்கான நோக்கமும் தீர்வை நோக்கி நகர்கிற உறுதியும் மன ஆழத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
 அரசியல் செய்வதற்கு இதுவும் அடிப்படை என்பதையும் அதிலும் அறம் சார்ந்து, அமைதி வழியில் நிற்பது அதனினும் முக்கியமென்பதையும் காலம் உணர்த்தியபடி இருக்கிறது. உயர்வான இலக்கிற்கான போராட்டமே உண்மையான அரசியல் நடவடிக்கை என்பதை நம்மூர்க் கட்சிகள் உணர வேண்டும். காலையில் கைது - மாலையில் விடுதலை, இடைப்பட்ட உணவு வேளையில் காவல்துறை வாங்கிக்கொடுக்கும் பிரியாணி என வடிவமைக்கப்பட்டால், போராட்டங்களுக்கு மரியாதை இருக்காது; அவற்றை நடத்துபவர்களுக்கும் பெருமை கிட்டாது.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com