மேக்கேதாட்டு அணையைத் தடுப்போம்!

கஜா புயலினால் உருக்குலைந்து கிடக்கும் காவிரி டெல்டா மக்களின் தலையில் மத்திய அரசு இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது. மேக்கேதாட்டுவில் இரு அணைகளை

கஜா புயலினால் உருக்குலைந்து கிடக்கும் காவிரி டெல்டா மக்களின் தலையில் மத்திய அரசு இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது. மேக்கேதாட்டுவில் இரு அணைகளை கட்டுவதற்கான கர்நாடகாத்தின் திட்ட வரைவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் 5,912 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான இந்த அணைகள் எழுந்து நின்றுவிட்டால், தமிழ்நாடு சுத்தமாக காவிரியை மறந்துவிட வேண்டியதுதான். 
மேக்கேதாட்டு அணை என்பது காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் மீது கர்நாடகம் தொடுக்கும் இறுதி யுத்தம். காவிரி பெரும் அருவியாக வந்து கொட்டும் ஒகேனக்கல்லுக்கு முன்பாக 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேக்கேதாட்டு. அதற்கு மேலே அடர்ந்த காட்டுப்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் இயற்கையாகவே அமைந்துள்ள பிரம்மாண்ட மலைகள் இருக்கின்றன. 
ஒவ்வொரு மலையும் ஏறத்தாழ ஆயிரம் அடி உயரம் இருக்கும். ஒண்டிகுண்டா (தமிழில் ஒற்றைக்கல்) என்ற அந்த இடத்தில்தான் புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது கர்நாடகம். அதற்கு முன்பே முக்கிய துணை ஆறான அர்க்காவதி, காவிரியுடன் சங்கமா என்ற இடத்தில் சங்கமமாகி ஒகேனக்கல்லை நோக்கி ஓடி வருகிறது. 
1980-களில் அப்போதைய கர்நாடக முதல்வர் குண்டு ராவ் தீட்டிய மேக்கேதாட்டு அணை திட்டத்தை, 2012-இல் அம்மாநிலம் தூசு தட்டி எடுத்தது. வெளியிலேயே தெரியாமல் இதற்காக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழு வேலை செய்து திட்ட அறிக்கை அளித்தது. தமிழகம் சுதாரித்து எழுவதற்குள் பூர்வாங்க வேலைகளை முடித்து விட்டார்கள். 
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது; மீறி கட்ட முயன்றால், தமிழக அரசு அதனை எந்தச் சூழலிலும் அனுமதிக்காது என்று கடுமையாக எதிர்த்தார். 
2013-இல் பெருமழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பியது. இதைப் பார்த்ததும் கர்நாடக அரசு இன்னும் விசனப்பட்டது. அணை நிரம்பும் அளவுக்கு தமிழகத்திற்குத் தண்ணீர் போகிறதா..? எப்படி அனுமதிப்பது இதை? புதிய முதல்வராக பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா மேக்கேதாட்டு அணைக்கான வேலைகளை விரைவுப்படுத்தினார். இதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற பேதமெல்லாம் இல்லை. 
உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தமிழ்நாடு. வழக்கு நடந்து கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 2015-இல் மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் அணைகளைக் கட்டுவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்க ரூ.25 கோடியை ஒதுக்கி, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குப் போனது. 2015 மார்ச் 26 அன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மதிப்பதில்லை. காவிரியில் உரிய தண்ணீரைத் தமிழகத்திற்குத் தருவதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகுள்ள உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறது. அந்த உபரி நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு, ராசிமணல் என இரு இடங்களில் அணைகளைக் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறது. இது, தமிழக விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய உள்ளது. புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 
உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த கர்நாடகம், எங்கள் எல்லைக்குட்பட்ட மேக்கேதாட்டு, சிவசமுத்திரம் பகுதிகளில் நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழக விவசாயப் பாசனம் பாதிக்கப்படும் என்ற தமிழகத்தின் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று முன்பு சொல்லியிருந்தது. இதற்கு முற்றிலும் நேர் எதிராக, தண்ணீரைத் தேக்கி வைத்து தமிழ்நாட்டுக்குக் கொடுப்பதற்கே மேக்கேதாட்டில் அணை கட்டவிருப்பதாக ஆகஸ்ட் 2017-இல் அதே நீதிமன்றத்தில் கர்நாடகம் கூறியது. 
ஆனால், கர்நாடகத்தின் வாடிக்கை என்ன என்பதை கடந்த கால அணை வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் புரிந்துவிடும். ஆரம்பிக்கும்போது மின்சாரத்திற்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள். போகப்போகதான் வேலையைக்காட்டுவார்கள். கிருஷ்ணராஜ சாகரில் இருந்து நீதிமன்றத்தை ஏமாற்ற அவர்கள் செய்து வரும் தந்திரம் இது. 
இந்தச்சூழலில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகியும் அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்தது. இப்போது மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்து துரோகம் செய்திருக்கிறது. அதோடு, தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கர்நாடம் கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் மீறியிருக்கிறது. 
மேக்கேதாட்டு அணை மிகப்பெரியது. 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்டது. 49 டி.எம்.சி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மட்டும் இருக்கும்போதே தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும்போது அதைவிட அதிகமான அளவு தண்ணீரைத் தேக்கிவைக்கும் புதிய அணை தமிழ்நாட்டிற்குச் சில கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டால் என்ன ஆகும்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை, கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக இழந்து, கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழியும் மிச்ச நீரை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம். அதிலும் இப்போது சிக்கல். காவிரியின் கடைசி சொட்டு நீரையும் தமிழ்நாட்டிற்கு விடாமல் தடுத்திட வேண்டும் என்கிற திட்டத்தோடு இறுதி யுத்தத்தில் இறங்கிவிட்டது கர்நாடகம். மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டுவிட்டால், அவ்வளவுதான் முடிந்தது கதை. மூன்று பருவம் சாகுபடி செய்து, அதனை இப்போது ஒரேயொரு பருவமாக சுருக்கிக் கொண்டிருக்கும் தமிழக காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் மொத்தமாக அழிந்து போகும்.
உணவு உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாடு, ஏற்கெனவே பெரும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும் அரிசியைதான் தமிழகம் நம்பியிருக்கிறது. சராசரியாக மாதத்திற்கு ஒரு லட்சம் டன் அரிசியை தமிழ்நாடு வாங்குகிறது. 
இந்த நிலையில், காவிரிப் பாசனப் பகுதியில் சுத்தமாக நெல் விளையவில்லை என்றால் தமிழ்நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) குறையும். மாநிலத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்படும். அதனால் அரிசி விலை தாறுமாறாக உயரும். காவிரி தண்ணீரால் நெல் உற்பத்தியைப் பெருக்கி மிகை அரிசி மாநிலமாக திகழும் கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கும் சூழல் உருவாகும். 
பெரும்பாலான தமிழர்கள் நினைப்பதைப் போல காவிரி என்பது தஞ்சாவூர் விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், திருப்பூரிலிருந்து வேலூர் வரையும், ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையும் தமிழகத்தின் 15 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரியைத்தான் நம்பியிருக்கின்றன. 
இப்போதும் 11 மாவட்டங்களில் குடிநீராக மட்டுமல்ல, விவசாயப் பாசன ஆதாரமாகவும் இருப்பது காவிரிதான். தமிழகத்தின் 25 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு காவிரி தண்ணீரை விட்டால் பானத்திற்கு வேறு வழியில்லை. தமிழ்நாட்டிற்கான உணவுத்தேவையில் 60 சதவீதத்திற்கு மேல் நெல் உற்பத்தி செய்யப்படுவதற்கு காவிரியே மூல காரணம். 
தமிழக மக்களில் 85% பேருக்கு, அதாவது ஏறத்தாழ 5 கோடி மக்களுக்கு காவிரி தண்ணீரே குடிநீர். மொத்தத்தில் மாநிலத்திலுள்ள 32 -இல் 26 மாவட்டங்களுக்கு உயிர்நாடியாக இருப்பது காவிரி தண்ணீர். இவற்றுக்கும் மேலே, தமிழகத்தில் நீண்ட தூரம் ஓடும் ஒரே நதி காவிரி. அதில் தண்ணீர் ஓடாவிட்டால் ஏற்கெனவே கீழே போய்க் கொண்டிருக்கும் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குப் போகும். வெறும் தண்ணீர் பிரச்னை என்பதைத்தாண்டி சமூக, பொருளாதார பிரச்னையாக மாறும். பெரும்பான்மையான தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் இது எதிரொலிக்கும். 
இதையெல்லாம் உணர்ந்து, எதிர்வினை ஆற்றி எப்பாடுபட்டாவது மேக்கேதாட்டு அணை வராமல் தமிழக அரசு தடுக்க வேண்டும். அனுமதி கிடைத்தவுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி அடுத்த கட்ட வேலைகளில் தீவிர காட்டத் தொடங்கிவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதே நம் முன் இருக்கும் முதல் வழி. அதையும் தாண்டி நம்முடைய கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும். அரசியல் மாச்சரியங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்தால் மட்டுமே அப்படியோர் ஒற்றுமை சாத்தியப்படும். 
பத்தோடு பதினொன்றாக இப்பிரச்னையைக் கடந்து சென்றுவிடாமல், மேக்கேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com