அரசியல் தொழிலாகிப் போவது தகுமா?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெரும்பாலும் அரசியல் என்பது முழு நேர தொழில் இல்லை. வேலை அல்லது தொழில் செய்து  கொண்டே அரசியலிலும் இருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெரும்பாலும் அரசியல் என்பது முழு நேர தொழில் இல்லை. வேலை அல்லது தொழில் செய்து  கொண்டே அரசியலிலும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பணம் ஈட்டுவதற்கான வழிமுறையாக அரசியலைப் பார்ப்பதில்லை. 

டிரம்ப்புக்கு முன்பு இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்த  ஒபாமா, பதவிக்காலம் முடிந்ததும் தமக்குத் தெரிந்த பேச்சு, எழுத்து, சட்ட ஆலோசனை பணிகளை மேற்கொள்கிறார்.  இதுஅங்கே புதிதல்ல. ஏனெனில், அமெரிக்க சட்டப்படி  ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது.

ஏற்கெனவே அதிபராக இருந்த ஜிம்மி கார்டர்,  தம்முடைய பூர்வீகத் தொழிலான வேர்க்கடலை பயிரிடுதலுக்குத் திரும்பி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மக்களுக்கும் சேவை செய்கிறார். பில் கிளிண்டன் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக  வேலை பார்க்கிறார்.

நம் தலைவர்களைப் பற்றி நம்மால் இப்படி கற்பனை செய்து பார்க்க முடியுமா? தலைவர்களை விடுங்கள். முன்னாள் கவுன்சிலர்கள் குறித்தாவது இப்படி நினைக்க இயலுமா? 

எந்தவித வருவாய் ஆதாரமோ,தொழிலோ, வேலையோ இல்லாமல் அரசியலுக்கு வருகிறார்கள். அடுத்த சில மாதங்களில் அல்லது ஆண்டுகளில் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. கார், பங்களா, சொத்து, சுகம், ஊரே மிரளும் அதிகாரம் என்று எங்கோ போய்விடுகிறார்கள். பார்க்கிற இடத்தை எல்லாம் வாங்கிப்போட முடிகிறது. பழைய காலத்து ராஜாக்களைப் போல வாழ்கிறார்கள்.

அவர்களிடம் கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடுகிறவர்கள் ஊருக்கு ஊர் குட்டி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பது ஊருக்கே தெரிந்திருக்கிறது. அவர்களும் இதற்காக வெட்கமோ, கூச்சமோ படுவதில்லை. அவர்களைப் பார்க்கிற மக்களும் "நம்முடைய பணத்தில்தானே இப்படி கொழிக்கிறார்கள்' என்று பதறுவதில்லை. 

அரை நூறாண்டுக்கு முன்புவரை,  சிற்சில தவறுகள் நிகழ்ந்தாலும், அரசியலில்  குறைந்தபட்ச நேர்மை, மக்கள் மீது அக்கறை, தவறு செய்ய பயம் போன்றவை இருந்தன. நம் தவறு வெளியே தெரிந்தால், மக்கள் தவறாக நினைப்பார்களே என்ற பயம் அரசியல்வாதிகளிடம் இருந்தது.

ஏனென்றால் அரசியலில் பணம் குவித்து, பகட்டாக இருப்பவர்களை அன்றைக்கு மக்கள் வெறுத்தார்கள். பெரும்பாலானோர் மனச்சாட்சிக்குப் பயந்து நடந்தார்கள். 

அடுத்தவனைக் கெடுத்தால், அநியாயம் செய்தால் உடனே இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்று அதிகம் பேர் அஞ்சினார்கள். தங்களின் தலைவர்கள், தங்களைவிட மேலானவர்களாக, தங்களுக்கு உதாரண புருஷர்களாக, நாட்டுக்காக தியாகம் செய்யத் தயாரானவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். 

அதனால்தான் தலைவர்களும் மக்களைக்கண்டு பயந்தார்கள். அன்றைய கனவு ஊர்தியான அம்பாசிடர் கார் வாங்குவதற்கும் சொந்த வீடு கட்டுவதற்கும் பயந்த அரசியல்வாதிகள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். ஏராளமான எம்எல்ஏ-க்கள் கடைசிவரை இருசக்கர வாகனத்தில்தான் தொகுதியைச் சுற்றி வந்தார்கள். 

இப்போது தலைவர்கள் நமக்கு சேவை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடமும் இல்லை. "அவங்க சம்பாதிச்சுட்டு போகட்டும்; கூடவே நம்மையும் கொஞ்சம் கவனித்தால் போதும்' என்று மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

"ஏதோ கொஞ்சம் அடிச்சாலும் ரோடு போட்டாங்களே, பாலம் கட்டினாங்களே அதுவே போதும்' என்று மக்கள் நினைக்க ஆரம்பித்ததன் நீட்சிதான் வேலையே செய்யாமல் மொத்தமாக அரசுப் பணத்தை அபகரிக்கும் நிலை வந்திருப்பது. தூர் வாராத ஆற்றைத் தூர்வாரிவிட்டதாகக் கணக்கு எழுதி அத்தனைபணத்தையும் சுருட்டிக்கொள்கிறார்கள். தண்ணீர் வருகிறபோது பார்த்தால் தூர் வாரியதாக சொல்லப்பட்ட ஆற்றில் புதர் மண்டி கிடக்கிறது. 

இன்றைக்குப் பலரும் கெட்டதைச் செய்கிறோமே என அச்சம் கொள்வதில்லை; கெட்டதைச் சரியாக செய்கிறோமா என்றுதான் கவலைப்படுகின்றனர்.

நம்முடைய மனநிலையில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்தின்  விளைவுதான், இந்தியாவிலேயே ஒரு மாநில தலைமைச் செயலகத்திற்குள், அதுவும் தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்திய "பெருமை'யைத் தமிழகம் பெற்றது.

அடுத்து காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திலேயே லஞ்சப் புகாரின் பேரில் ஆய்வு நடத்தினார்கள். தடை செய்யப்பட்ட குட்காவை விற்பதற்கு அனுமதித்து அதன் வழியாக கோடிகளைக் குவித்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு இணையாக அதிகாரிகளும் முறையற்ற வழியில் பணம் சம்பாதிப்பது மிகவும் அவமானகரமானது.

சிறிய பதவிகளில் இருப்பவர்களைச் சிக்க வைத்துவிட்டு, பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இதனைத் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலையில் பொதுமக்களாகிய நாம் இருக்கிறோம். 

லஞ்சப் புகாருக்கு ஆளாகி, சோதனைகளில் சிக்கி அசிங்கப்பட்டாலும் தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செய்தியாளர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். யோக்கிய சிகாமணிகள் போல ஆவேசமாகப் பேசுகிறார்கள்.

முழு நேர அரசியலில் இருப்பவர்களே தோற்றுப் போகிற அளவுக்கு கீழிறங்கி "என் மீதான் புகாருக்குக் காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே' என்று அடித்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் குற்றச்சாட்டுகளின் வீரியத்தைத் திசை திருப்ப, வெட்கமே இல்லாமல் சாதியையும் மதத்தையும்  துணைக்கு இழுக்கிறார்கள்.

இதற்கெல்லாம் இவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது? ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்துதான். அவர்களோடு அதிகாரிகளுக்கு இருக்கிற கூட்டு, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு, பங்கு சரியாக கொடுத்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

திடீரென மதிப்பிழக்கச் செய்யப்பட்ட பணத்தை மாற்ற வங்கிகளின் வாசல்களில்  போய் அப்பாவி மக்கள் நிற்க, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புத்தம் புது ரூபாய் தாள்கள்,  தலைவர்களின்  நிழல் மனிதர்களில் வீடுகளில் குவிந்து கிடந்தன.

அமைச்சர் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் எடுத்தார்கள். இவர்கள் எல்லாம் எப்படி சம்பாதித்தார்கள்? எங்கிருந்து பணம் வந்தது? இப்படி கேள்விகளை அடுக்கும் போது கிடைக்கின்ற பதில் அதிர வைக்கிறது.

"தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்' என்று நம் தலைவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தெருவில் நிற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் எந்த வேலை பார்த்து அல்லது தொழில் நடத்தி சம்பாதித்தார்கள் என்பது ஊருக்குத் தெரியவேண்டுமல்லவா?

நடுத்தர மக்கள் சம்பாதிப்பதை மட்டும் எக்கச்சக்க கண்ணிகளை வைத்துப் பிடித்து வரியாகவும் இன்ன பிற வழிகளிலும் வசூல் செய்யும் போது இதுவும் பகிரங்கம் ஆக வேண்டுமல்லவா?  ஏழை, நடுத்தர வர்க்கத்தைக் கசக்கி பிழியும் சட்டங்களில் இவர்களுக்கு மட்டும் ஏகப்பட்ட ஓட்டைகளை உருவாக்கி வைத்திருப்பதால்தானே இப்படி கொட்டமடிக்கிறார்கள்?

அதனால்தானே அரசியலையும் அரசு நிர்வாகத்தையும் வளம் கொழிக்கும் தொழிலாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள்? தங்களுக்கு வசதியாக எல்லாவற்றையும் ஊழல் மயமாக ஆக்கி விட்டார்கள். இந்த நிலையிலிருந்து நம்மூர் அரசியலை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

காந்திஜியின் காலத்திலிருந்த தலைவர்களைப்போல தங்களின் அனைத்துத் தேவைகளையும் நாட்டுக்காக துறந்துவிட்டு, முழுக்க முழுக்க தேச சேவை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்காத தலைவர்கள் நமக்கு வேண்டும். 

அப்படியென்றால் தொழிலதிபர்களை மட்டும்தான் இனி தலைவராக்க வேண்டுமா என்கிற கேள்வி பிறக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எளியவர்களை, சுய சம்பாத்தியத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, சமூகத்திற்கு ஏதேனும் செய்யத் நினைக்கிறவர்களைத் தலைவர்களாக உருவாக்குவோம். 

ஏனெனில், அரசியல் என்பது சேவையாக இருக்கும் வரைதான் மக்களாட்சியும் இருக்கும்; மக்களுக்கான மரியாதையும் இருக்கும். தொழில் என்றாகிவிட்டால், அவர்கள் மனசாட்சியை விற்ற வியாபாரிகளாகிவிடுவார்கள்; நாம் பணத்திற்கு விலை போகும் பண்டங்களாகி விடுவோம்! 

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com