தமிழக - கொரிய வரலாற்று உறவு

சில வகைப் பறவைகள் வலசை போவதை நாமறிவோம். அதாவது, அவை தமது வாழிடத்தை விட்டுக் குறிப்பிட்ட

சில வகைப் பறவைகள் வலசை போவதை நாமறிவோம். அதாவது, அவை தமது வாழிடத்தை விட்டுக் குறிப்பிட்ட காலத்தில் நெடுந்தூரம் செல்லும். அங்கு வழக்கமாக தங்கும் ஓரிடத்தில் சில நாள்கள் தங்கும். பிறகு, தம் வாழிடத்திற்கே திரும்பிவரும். ஆதி தமிழரிடம் இதுபோன்ற குணம் இருந்தது. அதனைப் புலம்பெயர்தல் என்று கூறுவர். அவர்கள் கடல் கடந்து புதிய புதிய இடங்களுக்குச் சென்றனர். ஆனால், நம் நாட்டுக்குத் திரும்பி வரவில்லை. அங்கேயே வேர் ஊன்றி நிலைத்து வாழ்ந்தனர். 
சங்கப்பாடல்கள் புலம்பெயர்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
நலம்புரி கொள்கை புலம்பெயர்ந்து 
உறையும் (முருகு 62)
வேறு புலம் முன்னிய விரகறிபொருந (பொருந)
நாறு கொடிப்புறவின்
வேறுபுலம் படர்ந்து (மலைபடு 407)
பழந்தமிழர் கப்பல் கட்டும் தொழிலில் கை தேர்ந்து விளங்கினார்கள். பெரிய பெரிய கப்பல்களைக் கட்டினார்கள். நெடுங்கடலைக் கடந்து சென்றார்கள். இதனை 
அலை கடல் நடுவில் பலகலம் செலுத்தி 
நளியிருமுந்நீர் நாவாய் ஓட்டி 
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன (நாவாய் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் நேவி என்று மருவியுள்ளது இங்கு நினைக்கத்தக்கது).
தமிழர்கள் நானோதேசிகர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார் ஆகிய பெயர்களில் அயல்நாடு சென்றார்கள். அங்கே நலமாக, வளமாக வாழ்ந்தார்கள். 
வணிகக் குழுக்கள் கடல் கடந்து வியாபாரம் செய்து வந்த நாடுகளில் தமிழர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தன என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிட்டுள்ளார். (நூல்: சோழர்கள்) பழந்தமிழர் 3000 ஆண்டு
களுக்கு முன்பே நிலவழி, நீர்வழிப் பாதைகளில் பயணம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொல் தமிழர்கள் உலக உருண்டையின் மேற்குத் திக்கிலும் போனார்கள். கிழக்குத் திசையிலும் சென்றார்கள். நெடுங்காலத்திற்கு முன்பே, அவர்கள் கொரிய நாட்டிற்குச் சென்றார்கள். இந்த வரலாற்று உறவு பற்றி எச்.பி. ஹெல்பர்ட், ஹோமர் ஹியுபர்ட், சாத்தூர் சேகரன், ஜங் நாம் கிம், ஒரிசா பாலு, பவளசங்கரி முதலிய அறிஞர்கள் ஆய்வு செய்தார்கள். 
கொரியராகிய கிம் என்பவர், கொரிய - தமிழ் சங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரிய மொழியில் ஏறத்தாழ 1000 தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று, அவர் குறிப்பிடுகிறார். ஆசியவியல் நிறுவனம் நடத்திய பன்னாட்டுத் தமிழ்ச் செவ்வியல் மொழி மாநாட்டிற்கு வந்த அவர், கொரியாவில் தமிகத்தின் தாக்கம் குறித்து குறிப்பிடும்போது, தமிழகத்தின் நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் கூறுகள் கொரியாவில் அதிகம் காணப்படுகின்றன என்று சொன்னார்.
கொரிய தீபகற்பத்தின் பக்கத்தில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், பெரிய தமிழ்க்குடியிருப்பு இருந்ததாகவும் இத்தமிழ்க் குழுக்களின் மூலம் தமிழ்ப்பண்பாடு கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பரவியதாகவும் சுதாமி கெம்பே என்ற ஜப்பானிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இல்யோன் என்ற புத்த துறவி 13-ஆம் நூற்றாண்டில் சாம்குக்யுசா என்ற நூலை எழுதினார். இது கொரிய நாட்டு வரலாற்றை வெளியுலகுக்கு அறிவித்தது. அந்த நூலில், கி.பி. முதல் நூற்றாண்டில் கொரியாவில் கிம்ஸ்சுரோ என்ற மன்னன் வாழ்ந்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து இளவரசி செம்பவளம், கப்பல் மூலம் கொரியாவுக்கு வந்தாள். அவளை கிம்ஸ்சுரோ மணந்துகொண்டான். கொரிய மக்கள் அவளை ஹியோ ஹவாங் ஓக் என்று அழைத்தனர். அவள் கொரிய நாட்டை ஆட்சிபுரிந்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் - கொரிய வரலாற்று உறவு பற்றி மற்றொரு செய்தியும் உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு, கொரிய நாட்டை கயா என்னும் அரசனின் மரபினர் ஆட்சி செய்தனர். அந்த மன்னரின் வம்ச வழியில் வந்த ஒரு பெண்ணைத் தென்னாட்டு அரசன் (தமிழன்) மணந்து கொண்டான் என்று லன் க்யு ஹோ என்ற கொரிய அறிஞர் தெரிவித்துள்ளார். இந்த இரு வரலாற்றுச் செய்திகளும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
ஆய்வறிஞர் ஒரிசா பாலு அறிவித்துள்ள கருத்துகளும் எண்ணத்தக்கவை. தமிழர்களின் கடல் பயணத்துக்கு ஆமைகளின் செல்வழி உதவியது. தமிழர்கள் கொரியாவுக்குச் சென்று வணிகம் புரிந்தனர். கொரிய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. இதை ஹோமர் உறுதி செய்துள்ளார். கொரியாவில் தமிழ்ப் பெயர் கொண்ட அரசர்கள் ஆட்சி செய்தனர் என்று ஆய்வாளர் சே-த்ரி அறிவித்திருக்கிறார். 
கொரிய மொழியில் 6000 தமிழ்ச் சொற்கள் (அவற்றுள் பெரும்பாலாவை திரிந்த நிலையில்) இருக்கின்றன. குமரி, கரை, சோளா, குடுமி முதலிய பெயர்கொண்ட இடங்கள் இருந்தன. கொரிய நாட்டுப் பெளத்த மதத்தில் வைணவத்தின் தாக்கம் உள்ளது. தமிழகத்தில் தற்போது 5000 கொரிய நாட்டினர் வாழ்கின்றனர் (சென்னையிலுள்ள கொரிய தூதரகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணி, தமிழகம், தன் தாய் நாட்டைப் போலவே இருப்பதாக அண்மையில் சொன்னார்). கொரியாவில் 1500 தமிழர்கள் தற்போது வாழ்ந்து வருகிறார்கள் (நூல்: கொரிய வளமும் தமிழ் உறவும்).
கொரிய மொழி ஹங்குல் என அழைக்கப்படுகிறது. இம்மொழியில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. இரு மொழிகளின் இலக்கணத்திலும்கூட நிறைய ஒப்புமை காணப்படுகிறது. அது மட்டுமல்லாது, பண்பாட்டியலிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன.
தமிழ்ச் சொற்களில் ஒரு சில மட்டும் கொரிய மொழியில் அப்படியே இருக்கின்றன. பெரும்பாலான சொற்கள் திரிபுற்று உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, தலை, செவி, மயிர், குடி முதலிய தமிழ்ச் சொற்கள் மாறாமல் கொரிய மொழியில் அப்படியே இருந்தன என்று ஹோமர் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதும் நாள், புல், சோறு, ஏர், நா (நாக்கு) முதலிய சொற்கள் மாற்றமில்லாமல் அப்படியே வழக்கில் உள்ளன. பல தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் திரிந்தும் பயன்பாட்டில் உள்ளன. அம்மா என்ற சொல் அம்மோ என்று வழங்கப்படுகிறது. இந்த என்ற சொல் இ என்று சுருங்கி உள்ளது (இ என்பது சுட்டெழுத்து என்று தமிழ் இலக்கணம் சொல்லும்). 
எல் (கதிரவன், பகல்) இல் என்றானது. கோதை (மாலை) என்ற சொல் கொத்து என்று ஆனது. அண்ணி என்பது ஒண்ணி என்றும் கூழ் என்ற சொல் மூழ் என்றும் மாறியுள்ளன. கொஞ்சம் என்பது சொங்கும் என்று மாறியுள்ளது. பல் என்ற சொல் இப்பல் என்று நீண்டது. 
தாலாட்டு என்ற சொல் உருமாறி தலேதா எனவும் மனைவி என்பது மநோரா எனவும் எனக்கு என்பது நெக்கோ எனவும் சிதைந்து வழங்கப்படுகின்றன. வணக்கம் என்ற சொல் வணக்காம்ட்டா ஆகவும், பாம்பு என்ற சொல் பாம்புபேம் ஆகவும் நீண்டு ஒலிக்கின்றன.
தமிழ் மொழி, ஒட்டு நிலைமொழி. அதுபோன்றே கொரிய மொழியும் ஒட்டு நிலைமொழி என்கிறார், மொழியியலாளர் கென்னெத் காட்ஸ்னர். அதற்கு அவர் சில சான்றுகளையும் காட்டியுள்ளார். தமிழில் கண் என்ற சொல்லும் நீர் என்ற சொல்லும் இணைந்து கண்ணீர் ஆனது. கொரிய மொழியில் கண் என்ற சொல் நன் என்று வழங்கப்படுகிறது. இதனுடன் நீர் என்பதற்குரிய மல் என்ற சொல் ஒட்டிக் கொள்கிறது. நன் என்ற சொல்லும் மல் என்ற சொல்லும் இணைந்து நன்மல் என்றாகும்போது அது கண்ணீர் என்ற பொருளைத் தருகின்றது என்கிறார்.
தமிழில் வினைச்சொல் பன்மையைக் குறிக்கும்போது, மாற்றம் பெறும். இதே முறை கொரிய மொழியின் வினைச் சொற்களில் அமைந்துள்ளது. தமிழில் பெயர்ச் சொல்லுடன் வேற்றுமை உருபு பின்னொட்டாக இணையும். இதே செயற்பாடு கொரிய மொழியிலும் இருக்கிறது.
மேலும், இரு நாடுகளுக்கிடையை பண்பாட்டுத் துறையிலும் ஒற்றுமை உள்ளது. தமிழகத்தில் முன்பு எல்லாரும் ஒரே வீட்டில் கூடி வாழும் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. இது சமுதாய நலத்திற்கு வழி காட்டியது. இந்தக் கூட்டுக் குடும்ப முறை கொரியாவிலும் முன்பு இருந்தது. 
இங்கு, தந்தையே குடும்பத் தலைவனாக இருக்கிறான். அங்கும் இதே நிலைமை இருக்கிறது. தமிழ் நாட்டில் அரசன் இறைவனாகப் போற்றப்பட்டான். கொரியாவிலும் இம்முறை முன்பு இருந்தது. தமிழ்நாட்டு வீடுகளில் உரலும், உலக்கையும் முற்காலத்தில் பயன்படுத்தப் பட்டன. கொரியாவிலும் இவையெல்லாம் முன்பு வழக்கில் இருந்தன.
நெசவுத்தறித் தொழிலிலும் ஒற்றுமை காணப்படுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் பாண்டி ஆட்டம், தட்டாங்கல் முதலிய விளையாட்டுகள் இந்தக் காலத்திலும் விளையாடப்படுகின்றன. இவை போன்ற தமிழக விளையாட்டுகள் கொரியாவிலும் விளையாடப்படுகின்றன.
தஞ்சைப் பெரிய கோயிலில் கொரிய நாட்டு மனிதன் ஒருவனின் சிற்பம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது உண்மையாயின், அதுவும் தமிழகம் - கொரிய வரலாற்று உறவுக்குச் சான்றாக அமையக் கூடும். 
இவ்வாறு, பல துறைகளிலும் தமிழகத்திற்கும் கொரிய நாட்டுக்கும் இடையே உறவுகள் நிலவுகின்றன. இதுகுறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டால் மேலும் பல வியப்பான செய்திகள் வெளிவரக்கூடும். 

கட்டுரையாளர்:
முனைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com