ரூபாய் நோட்டுகளால் ஆபத்து

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கிருமிகள் இப்போது ரூபாய் நோட்டுகளிலும் ஒட்டிக் கொண்டு விட்டன.

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கிருமிகள் இப்போது ரூபாய் நோட்டுகளிலும் ஒட்டிக் கொண்டு விட்டன. சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்பும் நாம் கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், நம் கைகளில் கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்கிருமிகள் பல விதமான நோய்கள் உருவாகக் காரணமாகும்.
 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2015-ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், ரூபாய் நோட்டுகள், சிறுநீரக தொற்று, மூச்சுப் பிரச்னை, காச நோய், வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட 78 வகையான நோய்களைப் பரப்பும் கிருமிகளையும், 18 வகையான ஆன்டிபயாடிக் எதிர்ப்புக் கிருமிகளையும் கொண்டிருப்பதாக எச்சரித்திருந்தது.
 இந்த நோய் கிருமிகளில் 70 சதவீதம் யூகார்யோட்டா, 9 சதவீதம் பாக்டீரியா மற்றும் 1சதவீதம் வைரஸ் ஆகியவை இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருந்தது.
 பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் "ப்ளேக்' நோய் தாக்கியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். விஞ்ஞானிகள் தலையை பிய்த்துக் கொண்ட நிலையில், கடைசியில் அதற்குக் காரணம் அங்கு புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளிலிருந்த கிருமிகள்தான் எனத் தெரிய வந்தது.
 உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள் இப்போது நோய்க்கிருமிகள் கடத்திகளாக இருக்கின்றன.
 ரூபாய் நோட்டுகளில் கிருமிகள் இருப்பதாக வந்த ஆய்வறிக்கையில் வெளியாகியிருந்த தகவல்களையடுத்து, அதில் படிந்திருந்த டிஎன்ஏ கைரேகைகளை ஆய்வு செய்த புதுடில்லியிலுள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிலைய (இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் இன்டிக்ரேடிவ் பயாலஜி) விஞ்ஞானிகளும், "எய்ம்ஸ்' மருத்துவமனை மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை டாக்டர்களும் நோய்களை உருவாக்கும் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் ரூபாய் தாள்களில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
 இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதங்களால் செய்யப்படுவதில்லை. பருத்தியும் லினெனும் கலந்த ஒரு பிரத்யேகத் துணியால் தயாரிக்கப்படுகின்றன. இதுவே கிருமிகள் குடியேற வசதியாக இருக்கின்றன.
 எளிதில் கிழியாமல் இருப்பதற்காக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளின் கடினத் தன்மை காரணமாக, அதில் நோய்க்கிருமிகள் அதிக நாட்கள் வாழும் என்றும், ரூபாய் தாள்கள் எவ்வளவு முறை கைமாறுகின்றன என்பதைப் பொருத்தும், அதன் ஈரத்தன்மையின் அடிப்படையிலும் நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு முன்பு வரை, இந்தியாவில் 17.97 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்தன.
 ரூபாய் நோட்டுகளை எண்ணும் போது விரல்களில் எச்சில் தொட்டு எண்ண வேண்டாம் என்றும், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இறைச்சி விற்பனையாளர்கள் கையாளும் ரூபாய் தாள்களில் அதிக அளவில் நோய்க்கிருமிகள் இருக்கும் எனவும் இத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
 பணத்தை கையாளும் போது, முடிந்த அளவுக்குக் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மிக மோசமான அழுக்கடைந்த பணத்தைத் தொட்டால் உடனே கைகளைக் கழுவ வேண்டும் என்றும், மிகவும் பழைய நோட்டுகளை உடனே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஈரமாக்கக் கூடாது என்றும், ரூபாய் நோட்டுகளையோ, நாணயங்களையோ வாயில் வைப்பது ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 ஆனால், இதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. கடைகளில், பேருந்துகளில், திரையரங்குகளில், வங்கிகளில் என எல்லா இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை எச்சில்படுத்தியே எண்ணுகின்றனர். வங்கிகளில் பணம் பெறும் வாடிக்கையாளரும், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவரும்கூட நோட்டுகளை ஒருமுறைக்கு இருமுறை எச்சில்படுத்தி எண்ணி சரிபார்த்த பின்பே வெளியே வருகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை.
 ரூபாய் நோட்டுகளில் நோய் கிருமிகள் பரவுவது உண்மையெனில் வணிகர்கள் மட்டுமல்லாது நுகர்வோரும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, ரூபாய் நோட்டுகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதை ஆராயும் வகையில் இந்திய மருத்துவக் கழகம் இது குறித்து தீவிர ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதனை தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும் என்றும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
 இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எந்த விவரமும் தெரிவிக்காத நிலையில், மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com