இருப்பைத் தக்க வைக்குமா காங்கிரஸ்?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்கள் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்கள் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. இதில், சிறிய வடகிழக்கு மாநிலமான மிúஸாரமைத் தவிர இதர மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. மிúஸாரமில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு பிராந்தியத்தில், மிúஸாரம் தவிர இதர மாநிலங்களில் பாஜக நேரடியாகவும், கூட்டணி மூலமும் ஆட்சியில் உள்ளது. அதாவது, அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சியில் உள்ளது. மேகாலயம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனால், மிúஸாரம் பேரவைத் தேர்தலை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முக்கியமானதாக கருதுகின்றன.
1987-இல் உதயம்: அஸ்ஸாமிலிருந்து கடந்த 1972-இல் பிரிந்த மிúஸாரம், அதன் பின் யூனியன் பிரதேசமாக இருந்து வந்தது. பின்னர், 1987-இல் முழு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அந்த மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 10 லட்சத்து 91 ஆயிரம். இதில் 95 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர் ஆவார். அதிலும் 87 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் ஆட்சி: கேரளத்துக்கு அடுத்தபடியாக 91.33 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் மிúஸாரத்தில் 40 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த 2008-இல் இருந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
முதல்வராக இருக்கும் லால் தன்ஹாவ்லா (76), மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக உள்ளார். எனினும், நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவும் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, வறுமை அதிகரிப்பு ஆகியவை முக்கிய பிரச்னைகள் அந்த மாநிலத்தில் நிலவி வருகின்றன. இதனால், அவரது ஆட்சியின் மீது இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வலுவான பிராந்திய கட்சி: மிúஸா தேசிய முன்னணி (எம்என்எஃப்) கட்சி, அந்த மாநிலத்தில் வலுவான பிராந்திய கட்சியாக உள்ளது. 
கடந்த 1998 முதல் 2008 வரை மாநிலத்தை ஆட்சி செய்த இக்கட்சி, வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸூக்கு எதிராக பாஜக உருவாக்கிய வடகிழக்கு தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. எனினும், எதிர்வரும் மிúஸாரம் தேர்தலில் தாங்கள் தனித்து போட்டியிட போவதாக என்என்எஃப் அறிவித்துள்ளது. அதேபோல், பாஜகவும் தனித்து போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
பாஜகவின் நோக்கம்: அண்மையில் நடைபெற்ற வடகிழக்கு தேசிய கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மிúஸாரம் பேரவைத் தேர்தலுக்கு பிறகு வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் இருக்காது என்று சூளுரைத்தார்.
திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கடந்த பிப்ரவரியில் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை, பாஜக முடிவுக்கு கொண்டுவந்தது.
நாகாலாந்து, மேகாலயம் ஆகிய இரு மாநிலங்களிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகாலாந்தில் தனிப்பெரும் கட்சியாக நாகா மக்கள் முன்னணி கட்சி உருவெடுத்த போதிலும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது.
மேகாலயத்தில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், வெறும் 2 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்ட பாஜக, தேசிய மக்கள் கட்சியுடன் கைகோத்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இதேபோன்ற சூழல், மிúஸாரம் சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
விமர்சனங்களுக்கு பதிலடி: கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற முத்திரை பாஜக மீது குத்தப்பட்டு வரும் போதிலும், அந்த மதத்தினர் அதிகமுள்ள இதர வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே தாங்கள் வெற்றி பெற்றிருப்பதை பாஜக சுட்டிக்காட்டி வருகிறது. 
மிúஸாரமில் நேரடியாகவோ கூட்டணி மூலமோ ஆட்சியை பிடிப்பதன் மூலம் காங்கிரஸ் இல்லாத வடகிழக்கு பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. அதேவேளையில், மிúஸாரமில் ஆட்சியை தக்க வைப்பதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் தங்களது இருப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை காங்கிரஸூக்கு உள்ளது. அதனை நோக்கி அக்கட்சி காய்களை நகர்த்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com