
'தமிழை ஆண்டாள்' என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.
அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.
ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.
ஆண்டாளைப் பற்றி அந்தக் கட்டுரையில் என்னால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.
- வைரமுத்து
***
தினமணி வருந்துகிறது!
தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயரிய எண்ணத்துடன்தான் 'இலக்கிய முன்னோடிகள்' குறித்த கட்டுரைகள் 'தினமணி'யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரைகளின் வாசிப்பும் அதன் தொனியும் எத்தகையவை என்பதை இளம் தலைமுறையினர் அறிவதற்காகவே, முதல்நாள் கவிஞர் வைரமுத்து வாசிக்க அடுத்த நாள் 'தினமணி'யில் கட்டுரை வெளியாகிறது.
கவிஞர் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையை ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இராஜபாளையத்தில் அரங்கேற்றியதன் காரணமே, ஆண்டாளின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும், அவரது தமிழ் ஆளுமை உரக்க ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
கவிஞர் வைரமுத்து தனது உரையின் தொடக்கத்திலேயே ஆண்டாள் அவதரித்த மண்ணைத் தொட்டு வணங்குவதாகக் குறிப்பிட்டே தொடங்கினார். ஆண்டாள் குறித்து உயர்வானவற்றைப் பதிவு செய்த அவரது கட்டுரையில் அமெரிக்க ஆய்வையும் சுட்டிக்காட்டியது தவறு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் தனது நோக்கமே தவிர, அந்தப் பதிவின் மூலம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்தப் பதிவு பலருடைய உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.
'தினமணி' நாளிதழைப் பொறுத்தவரை தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர தூக்கிப் பிடிக்கும் நாளிதழ். இந்தக் கருத்து "தினமணி'யில் வந்திருக்க வேண்டாம் என்கிற பலருடைய ஆதங்கம் புரிகிறது. தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆண்டாளை தமிழ் தெய்வமாக, பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்குரிய அன்னையாக 'தினமணி'யும் கருதுகிறது.
கவிஞர் வைரமுத்து இது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துவிட்டாலும்கூட, 'தினமணி'யின் மூலம் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது என்பதால் வாசகர்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதிலோ, மன்னிப்புக் கோருவதிலோ எங்களுக்கு சற்றும் தயக்கம் இல்லை. 'தினமணி' வருந்துகிறது!
- ஆசிரியர்