புதிய உலகம், புதிய திறன்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில்பட்டியில் ஓர் அமைப்பின் சார்பாக நடந்த கூட்டத்தில் பேசுவதற்காகப் போயிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில்பட்டியில் ஓர் அமைப்பின் சார்பாக நடந்த கூட்டத்தில் பேசுவதற்காகப் போயிருந்தேன். மாலையில்தான் கூட்டம்  என்பதால், காலை நேரம் தீப்பெட்டி தயாரிப்புக் கூடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

முதலில் சென்றது பல ஆண்டுகளாக தீப்பெட்டி தயாரிப்பை கைத்தொழிலாய் செய்பவர் வீடு ஒன்று. உயரம் குறைவான அந்த வீட்டுக்குள் சுமார் 10 பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் தவிர மற்ற அனைவரும் பெண்கள், நடுத்தர வயதைத் தாண்டியவர்கள்.  நான் அதிக நேரம் நின்று கவனித்தது அந்த உற்பத்தி வரிசையின் இறுதிப் பகுதியைத்தான்.
குவியலாகக் கிடந்த மருந்து கொண்டை வைத்த தீக்குச்சிகளை எடுத்து, எண்ணி, காலி நீல நிற தாள் ஒட்டிய பெட்டிக்குள் வைத்து, அதை உறை போன்றிருந்த பெட்டிக்குள் செருகவேண்டும். அப்போது  "எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று ராமன் வில்லை எடுத்து நாண் ஏற்றி ஒடித்த வேகத்தை கம்பர் பாடியதுதான் என் நினைவுக்கு வந்தது.

சாதாரணமாக காலை நீட்டிக்கொண்டு தரையில்  அமர்ந்திருந்தவர்கள், அவர்களுக்குள் பேசிக்கொண்டே சரியான எண்ணிக்கையிலான குச்சிகளை எடுத்து, தேவைப்படும் விதம் தலைப்பு மாற்றி, பெட்டிக்குள் தள்ளி, பெட்டியை  
உறைக்குள் செருகி, முழு தீப்பெட்டியாக அதிவேகத்தில் வேறு பக்கம் போட்டார்கள். என்ன ஒரு திறன்! எப்படிப்பட்ட பயிற்சி இருந்தால் அது சாத்தியம் என்று வியந்தேன்.

அடுத்து ஒரு நவீன தீப்பெட்டி உற்பத்திக்கூடத்துக்கு  அழைத்துப் போனார்கள். முதலில் பார்த்த வீட்டைப் போல உற்பத்தி அளவில் 50 மடங்கு பெரியது என்றார்கள். உற்பத்திக்கூடம் நபர்களே  இன்றி வெறிச்சோடி இருந்தது. "விடுமுறை தினமா' என்று கேட்டேன். இல்லை என்றார்கள். அது நவீன தொழிற்கூடம் என்றும் அங்கு மொத்தமே  8 நபர்கள்தான் வேலைக்கு இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். 


முழுவதும் இயந்திரமயமாக்கபட்ட  "ஆட்டோமேட்டிக்' உற்பத்தி. ஒரு கோடியில் தோல் நீக்கபட்ட  வெள்ளை "மட்டி' அல்லது  "அல்பீசியா' மரத்தின் பகுதிகள். இயந்திரத்தின் மறுகோடியில் பயன்படுத்தத் தயாரான தீப்பெட்டிகள். இடையில் இயந்திரத்தை இயக்க, பழுதுபார்க்க என்று மனிதர்கள் ஒரு சிலர் மட்டுமே. 

சற்றுமுன் பார்த்த கைத்திறன்மிக்க அந்தப் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். "அவர்களுக்கு இங்கே வேலை கிடைக்குமா' என்று கேட்டேன். "கிடைக்காது என்றும் அவர்களுக்கு இந்த இயந்திரத்தில் வேலை செய்யத் தெரியாததே காரணம்' என்றும் சொன்னார்கள்.

மெல்ல மெல்ல தீப்பெட்டி தொழில்  இயந்திரமயமாக்கப்படுவதாகத் தெரிவித்தார்கள். அவர்களைப் போல பல ஆண்டுகளாக திறம்பட கைகளால் செய்பவர்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.

தீப்பெட்டி தொழில் இருக்குமா?  இருக்கும். அதில் திறன்மிக்க இவர்களுக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது. காரணம், தேவைப்படும் திறன் மாறிவிட்டது. தீப்பெட்டித் தொழிலில் மட்டுமல்ல; எல்லாவற்றிலுமே தேவைப்படும் திறன்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.  தொழிலில், வியாபாரத்தில், வேலையில் வேறுபாடு இல்லை. ஆனால், அதைச் செய்யத் தேவைப்படும் திறன்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

மாற்றுபவராக இருந்தால் பெரும் வெற்றி. குறைந்தபட்சம் மாறிப்போனதை உணர்ந்து, உடனடியாக அந்தப் புதிய திறன் பெறுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மாற்றங்கள் இயல்பு. மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.  தொடக்க காலத்தை கற்காலம் என்கிறார்கள். நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள்தான் அவர்கள். குகைகளில் வாழ்ந்த மனிதர்கள்.

அப்போதும் பிழைத்துக் கிடக்க, உயிர்வாழ சில திறன்கள் தேவைப்பட்டிருக்கும். மிருகங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவு செய்துகொள்ள கூரான கற்கள் கண்டெடுத்தல், உருவாக்கல், பயன்படுத்துதல் முதலானவை  "திறன் தேவை'களாக இருந்திருக்கலாம்.

மனிதர்களால் மாற்றங்கள் நிகழ்த்தப்படாத அந்த நீண்ட நெடிய பல லட்சம் ஆண்டுகளுக்கு,  அந்த மிகச் சில திறன்கள் மட்டுமே வாழ்ந்து முடிக்கப் போதுமான திறன்களாக இருந்திருக்கலாம்.

சிந்தனை செய்த மனிதன் அடுத்து நுழைந்தது "மெட்டல் ஏஜ்'. உலோகங்கள் காலம். கி.மு. 1200 முதல் 1000 வரை இருக்கலாம்.

அப்போது வாழ்ந்தவர்கள் சிறப்பாக வாழ, உலோகங்களை உருவாக்க, அதில் கருவிகள், ஆயுதங்கள் செய்ய, பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். கற்காலத்தில் இருந்து மாறிப்போன "தேவைப்பட்ட திறன்'.

செப்பு, இரும்பு, வெண்கலம் என்று வெவ்வேறு  உலோக காலங்களில் மனிதர்களுக்குத் தேவைப்பட்ட திறன்கள் ஒன்றாகவா இருந்திருக்கும்? காலந்தோறும் தேவைப்படும் திறன்கள் மாறிக்கொண்டேயிருக்கும். மாறிப்போன திறன் தேவைகளை முதலில் புரிந்து கற்றுக்கொண்டவர்கள், அடுத்தடுத்து கற்றுக்கொண்டவர்கள் மற்றும் கற்காமலே போனவர்கள் வாழ்க்கை வசதிகள் ஒரே போலவா இருந்திருக்கும்?

நாய்களைப் பழக்குதல், குதிரை ஏற்றம், வாள் சண்டை, ஓலைகளில் மற்றும் கல்வெட்டுகளில் எழுதுதல், மரமேறுதல், ஏர் ஓட்டுதல், அறுவடை செய்தல், கயிறு திரித்தல், பானை செய்தல், பாத்திரங்கள் செய்தல் என்று வெவ்வேறு காலகட்டங்களில்  தேவைப்பட்ட  திறன்களின் பின்னாளையத் தேவைகள் எப்படி மாறிப்போயின?

18-ஆம் நூற்றாண்டில் ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இஞ்சினுடன் இங்கிலாந்தில் தொடங்கியது முதல் தொழில் புரட்சி. அதுவரை  உற்பத்தி செய்து கொண்டிருந்த முறைகள் மாறின. நூற்பாலைகள் வேகமெடுத்தன. மனிதன் நீராவியின் ஆற்றலை பயன்படுத்தத் தெரிந்துகொண்டதும் பல்வேறு தொழில்களிலும் பெரும் மாறுதல்கள்.

அதனால், தேவைப்பட்ட திறன்களும் மாறிப்போயின.  மாறியவர்கள் வாய்ப்புகள் பெற்றார்கள், செல்வத்தில் கொழித்தார்கள். வாழ்க்கை வசதிகள் பெருகின. 19-ஆம் நூற்றாண்டில் இரும்பை உருக்கும் பெரும் ஆலைகள் நிறுவ முடிந்து உற்பத்தி பெருமளவில் தொடங்க,  தொலைபேசி, மின்சாரம் என்று பலவிதங்களிலும் வளர்ச்சி பரவி, இரண்டாவது தொழிற்புரட்சி எனப் பெயரிடப்பட்டது.

கணினி, இணையம் போன்றவை மூன்றாம் தொழிற்புரட்சியாக வந்தபின், வேலைவாய்ப்புகளுக்கு தொழில் செய்யத் தேவைப்பட்ட திறன்கள் முன்னில் இருந்து பெரிதும் வேற்பட்டதல்லவா? ஆட்டுக்கல், குந்தாணி, கை ரிக்ஷா, "டேப் ரெக்கார்டர்'கள், தட்டச்சு  இயந்திரங்கள், ரோனியோ மிஷின்கள் போல எல்லாம் நம்மில் பலர் பார்க்க, கண்முன் காணாமல் போனவைதான் எத்தனை! 
உடன் பல்வேறு வேலைகளும் இல்லாமல் போயின. கணினி திறன் பெற்றோரே, நல்வாய்ப்புகள் பெற்றவர்கள் ஆயினர் அல்லவா? தொடக்கத்தில் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின் மாறிய "திறன் தேவை', பின்பு சில நூறாண்டுகளுக்குள்ளாகவே மாற்றம் கண்டன. 

அதன்பின் ஒரு நூறாண்டுக்குள்ளாகாகவே மாறிப் போயின. இவற்றின் மீதெல்லாம் நின்றுகொண்டு சிந்திக்கும் மனித மூளைகள் பலவும், உலகெங்கும், ஒவ்வொரு நொடியும் முன்னிலும் மாறுபட்டதாக, சிறப்பானதாக, சுலபமானதாக, விலை குறைவானவையாக என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்தித்து சிந்தித்து, புதுமைகள் கொண்டுவந்து கொட்டுகின்றன.

"ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்', "ரோபாட்டிக்ஸ்', "இண்டர்னெட் ஆஃப் திங்ஸ்', "பயோ டெக்னாலஜி', "நானோ டெக்னாலஜி', "எனெர்ஜி ஸ்டோரேஜ்', "ஜீன் எடிட்டிங்', "சிந்தெட்டிக் பயாலஜி' (செயற்கை மாமிசம் உள்பட), "3டி பிரிண்டிங்',  "புரோகிராமிங் டி.என்.ஏ.' என்று எத்தனை எத்தனை பல புதிய வாசல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. 

மொபைல், ஆதார், கேமரா, இணையம் ஆகிய நான்கும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் புதிய வாய்புகள் ஏராளம். "ஓலா', "ஊபர்', "ஃபேஸ்புக்', "சுவிகி', "ஓ.எல்.எக்ஸ்.', "பிக் பாஸ்கெட்', "மொபைல் வாலட்', "வேரபில்ஸ்' எல்லாம் இவற்றின் சில வெளிப்பாடுகள்.

டிரோன் தொழில்நுட்பம் வைத்து வானில் பறக்கும் சிறிய கார் போன்ற டாக்ஸிகள் வரவிருக்கின்றன; உரமிடுதல், பூச்சி மருந்தடித்தல் எல்லாம் மிகச் சுலபமாகவிருக்கிறது.

நடப்பது நான்காவது தொழிற்புரட்சி; அதாவது "இண்டஸ்ட்ரியல் ரெவல்யூஷன் 4.0'. "பிசிக்கல்', "டிஜிட்டல்' மற்றும் "பயலாஜிக்கல்' ஆகிய மூன்று வெவ்வேறானவற்றை இணைத்து நடக்கும் மாறுதல்கள்.  விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறைகளின் தேவைகள் குறையாது. தொடரும். ஆனால், அவை செய்யப்படும், வழங்கப்படும் விதங்கள் பெருமளவில்  மாறும். 
இந்தப் புதிய உலகில் வாய்ப்புகள் பெற அவை தொடர்பான திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். ஏதோ ஒரு திறன் அல்ல. முன் செல்லுபடியான, மதிப்பிருந்த திறன் அல்ல. இன்றைக்குத் தேவைப்படும், மதிப்பிருக்கும் திறன் பெற்றவரே வாய்ப்பு பெறுவர்.

கட்டுரையாளர்: மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com