மக்கள் வாக்கும், அரசியல் போக்கும்

தமிழருக்கே உரித்தான பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாகவும், மகிழ்வாகவும் கொண்டாடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்கள்.

தமிழருக்கே உரித்தான பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாகவும், மகிழ்வாகவும் கொண்டாடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்கள். அது முடிந்ததும்  தேர்தல் அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்ற செய்தி வந்தது. அப்போதுதான் தேர்தல் நெருங்கியதை மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.

ஆனால், அரசியல் கட்சிகளின் சிந்தனை தேர்தலில் அரசியல் முடிவுகள் எப்படி இருக்குமோ? சாதக பாதகங்களை உன்னிப்பாக சிந்தித்து, கட்சிகள் காய்களை நகர்த்த முன்னமேயே ஆரம்பித்துவிட்டன. இந்திய நாடு பூரண குடியரசு நாடாக ஜனவரி 26, 1950-இல் மாறியது. அந்த நாளில்தான் மக்கள் பூரண சுதந்திரம் அடைந்தனர். பூரண சுதந்திரம் எனில், மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியை, தாங்களாகவே தங்களது விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என ஜவாஹர்லால் நேரு தலைமையில் இருந்த அரசு நிர்ணயித்தது. நாட்டு மக்களில் ஜாதி, மதம், கல்வி, பணவளம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் 21 வயது நிரம்பியவர்கள் யாவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவித்தது. தற்போது 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்களிக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

தற்கால இளைஞர்கள் மிகவும் துடிப்பாக இருக்கிறார்கள். கல்வியில் செம்மையும்,  உலகின் நடப்புகளை நன்று உணர்ந்து நாட்டின் தேவையை நன்கு அறிந்தவர்கள். மேலும், சுயமாக அறிந்து, ஆட்சியை எந்தக் கட்சி அமைப்பது என்று தீர்மானிப்பார்கள். இவர்களே இந்தத் தேர்தலிலும், அடுத்த தேர்தலிலும் நல்லாட்சியை நிறுவ துணையாக இருப்பார்கள்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கல்வியறிவு முக்கியம். அன்றாடம் செய்தித் தாள்கள், ஊடகங்களின் மூலம் நாட்டின் நிலைமை,  ஆட்சியின் திறமை, மக்களுக்கு உரிமையான வாழ்வாதாரம், சீர்திருத்தம், ஆட்சி முறையில் வேண்டிய மாற்றங்கள் ஆகியவற்றை அறிய முடியும். மக்களின் எழுச்சி மூலமே ஒரு நாட்டின் தரம் உலக நாடுகளில் உயரும் வாய்ப்பு கிட்டும்.
தேர்தலில் வெற்றிபெறும் தகுதி என்னவென்றால் மக்களைக் கவரும் பேச்சு (இது மக்களை இசைபோல் மயக்கும்). பேச்சில் தன் கட்சியில் உள்ள பலங்கள் (இது ஆட்சியில் அளித்த மக்களின் நன்மைகள், பலன்கள்) பற்றி விரிவாக, தெளிவாகப் பேச வேண்டும். உண்மைகளை விளக்கமாகத் தெரிவித்தால் கேட்பவரின் மனங்களில் சிந்தனை அலைகள் பாயும். இதில் எதிர்க்கட்சியினர் செய்த தவறுகள், மக்களுக்குத் செய்யத் தவறியது பற்றியும் விளக்கமாய் கூறி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நன்மைகள் செய்யப் போகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும்.

தற்சமயம் வேட்பாளர்கள் மக்களை மயக்குவதற்கு குறுக்கு வழிகளைக் கையாள்கிறார்கள். அவை தவறான வழிகள் என்றாலும் அவர்களது இலக்கு வாக்குகள்தான். தேர்தலுக்குப் பின் வேட்பாளர்கள் கூறிய நன்மைகளை பொருத்திருந்து பார்ப்பதை விட, கைமேல் கிடைக்கும் பலனையே விரும்புகிறார்கள்.

இதனால், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நன்மைகளைச் செய்கிறார்களா என்று கேட்கும் உரிமைகளை வாக்காளர்கள் இழக்கிறார்கள். குடியரசின் கொள்கையான வாக்கு அளிப்பதன் பயன் (நாட்டின் நலம்) வீணாகிறது.

இப்படிப்பட்ட மக்களினாலேயே நாட்டில் பேராசை, பொறாமை, திருட்டு, வீண் வம்பு, நல்லாரோடு இணக்கமின்மை, நல்லதையே நினைக்கும் தன்மை எல்லாம் தாங்கள் வாழும் மண்ணோடு மண்ணாக மறைகிறது. முக்கியமாக, லஞ்சம் வாங்கும் பழக்கம் நாட்டில் மலிந்துள்ளது. இந்தத் தீய பழக்கத்திலிருந்து மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளை நல்முறையில், நல்லெண்ணத்துடன் வளர்ப்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் கையாள வேண்டும்.  குழந்தைகள் வளரும் பருவத்தில் படித்த நல் வழக்கங்களே என்றும் நிலையாக நிற்கும்.

அண்மையில் ஐந்து மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்சியை ஆனந்தத்தில் அசத்தியது. ஆளும் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவே அரசியல் கட்சிகளின் மனங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் மக்களுக்கேற்ற நல்ல கொள்கைகள், செயல்பாடுகள், மக்களின் வாழ்வாதார வளம் உயர உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர் வசதி போதிய மின்சார வசதி, உயர் மட்ட போக்குவரத்து சாலைகள், வேளாண்மைப் பெருக்கம், சுகாதாரம் ஆகியவற்றின் மூலம் அனைவருக்கும் திருப்தியான வாழ்வை அளிப்பதில் எந்த அரசாங்கமும் பூரணமாக வெற்றி பெறவில்லை.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. வறுமையால் இறந்தோர் பலர், வாழ்வாதாரம் உயராததால் கடன்பட்டு அதில் வட்டியும் கடன் தொகையும் திருப்பித்தர இயலாத நிலை. நீர் வளம் குறைவதும் இதற்கு முக்கியக் காரணம்.  

சீரான நீர் வளத்தால் நெல் மூன்று போகமாக விளைச்சல் காண வேண்டும். ஆனால், நீர் நிலைகளை சரிவரப் பராமரிக்காத காரணத்தால் ஒரு போக விளைச்சலை எடுப்பதற்குள் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வு, நீர் நிலைகளை இணைப்பதுதான். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தது போன்று, கோதாவரியை காவிரியோடு இணைக்க வேண்டும். இதில் தொடர்புடைய மாநிலங்கள் மனதாரச் செயல்பட வேண்டும். எந்தத் திட்டமும் பேச்சு அளவில் மட்டுமே, செயலில் அன்று. மத்திய அரசும் இதில் முனைந்து ஆவன செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கட்சியினரும் பிற கட்சியின் செயல்பாட்டையும், குறைகளையும் மட்டுமே பேசிக் கொண்டு அந்த காரியத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். அந்தச் செயல்களும் மக்களுக்கு பயன் அளிப்பதாக இல்லை. விவசாயிகள் மட்டுமல்ல, நெசவாளர்கள், சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் நிரம்பியது நம் நாடு.

மேலும் குறைந்த சம்பளத்தில் நிரந்தரமற்ற வேலைகளில் இருப்பவர்கள், நோய் மற்றும் முதுமை காரணமாக உழைக்க முடியாதவர்கள் என பல தரப்பினர் நம் நாட்டில் உள்ளனர். கடன் வாங்கி கஷ்டப்படுவது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உடைமைகளை இழப்பது, சொத்துகளை இழப்பது, குடும்பத்தைத் தொடர்ந்து நடத்த வழி தெரியாமல் தவிப்பது, விவசாயத் துறையில் மட்டும் இல்லை.

வர்த்தகக் கடன், நகைக் கடன், வாகன கடன், அடமான கடன், வீட்டுக் கடன், தனியார் கடன் எனப் பல கடன்களை வாங்கி வாழ வழியின்றி தவிப்பவர்களும் நம் நாட்டு பிரஜைகள்தான். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமையும் அரசுகளுக்கு இருக்கிறது. 

இப்படிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் கண்டெடுத்து அவர்களின் உண்மையான கஷ்டங்களைக் கணித்து அதற்கான சீரமைப்பும், பொருளுதவியும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அஃதன்றி பொதுவாகக் கடன் தள்ளுபடி, பல சலுகைகள் செய்வதில் முழு தீர்வு காண முடியாது.
தேவைகள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், கழிவுப் பொருள்களை நீர் நிலைகளில் கலக்காமல் சுத்திகரிக்கும் வசதி, முதலீட்டாளர்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சி, ஏற்றுமதிக்கான வசதிகள் ஆகியவற்றை அரசு கவனிக்க வேண்டும்.

மேலும், நல்ல சமுதாயம் நிலைபெற வேண்டும். இப்போது மலிந்திருக்கும் திருட்டு, கொள்ளை, கொலை குறிப்பாகத் தற்கொலை, சாலை விபத்துகள், குடியினால் ஏற்படும் விபரீத விளைவுகள்-இவையாவும் தவிர்க்கும் நேர்மையான அரசு மிக முக்கியம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். முற்காலத்தில் குறைந்த அளவு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை  அமைந்தபோதும் நல்லாட்சி நடந்தது.

காமராசர், ஓமந்தூரார் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை உதாரணமாகக் கூறலாம். நல்லாட்சி, நேர்மையான சட்டம், விதிகள், அவற்றை பிரயோகப்பதிலும் உண்மை முக்கியம். தேர்தலில் பிரசாரங்கள் முறைகேடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியே சொல்ல வேண்டும். உதாரணம்: மத்தியப் பிரதேசத்தில் ரூ. 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி;  பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு.

மாற்றுக்கட்சி தலைவர்களை, அரசியலாளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இழிவாகவோ பேசுவது கூடாது. இது தன்மானத்துக்கே இழிவை ஏற்படுத்தும். இது தன் கட்சியில் பலமான கொள்கைகள் இல்லை என்பதையே அறிவுறுத்தும். இந்த அவலம் இப்போது பெரும்பான்மையாக உள்ளது.

திறமை கொண்ட- தீமையற்ற 
பிரசாரங்கள் செய்ய வேண்டும்
தேர்ந்த கல்வி ஞானமெய்திய
வேட்பாளரையே தேர்ந்திடல் வேண்டும்

மக்கள் வேண்டுவது நல்ல வேட்பாளரையே. இழிவு கொண்டவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.குற்றச்சாட்டுகள் உள்ள வேட்பாளர்கள் பலர் நிறுத்தப்படுவதையும் நாம் பார்க்கிறோம். 2019 தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது.மக்கள் மெளனமாக நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு தேர்தலே ஒரு வழிகாட்டி ஆயுதம். இதில் லஞ்சம்,  இலவசம் தவிர்த்தால் நல்ல ஆட்சி ஏற்படும்.

கட்டுரையாளர்: முடநீக்கியல் அறுவைச் சிகிச்சை  நிபுணர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com