நீட் தேர்வு: தீர்வுதான் என்ன?

தமிழகத் தேர்தல் களத்தை நீட் தேர்வு பிரச்னை சூடேற்றியது. மாநில உரிமைகளுக்கு எதிரான, பாரபட்சமான நீட் தேர்வு  ரத்து செய்யப்படும். மாநிலங்களே தேர்வை நடத்தி

தமிழகத் தேர்தல் களத்தை நீட் தேர்வு பிரச்னை சூடேற்றியது. மாநில உரிமைகளுக்கு எதிரான, பாரபட்சமான நீட் தேர்வு  ரத்து செய்யப்படும். மாநிலங்களே தேர்வை நடத்தி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கூறியது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றது திமுக. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தொடரும் என மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடக் கூறியுள்ளார்.
 நீட் தேர்வை எழுதும் திறனை தமிழக மாணவர்கள் பெறும் வரை அந்தத் தேர்விலிருந்து விலக்கு கோரப்படும் என அதிமுக உறுதி அளித்துள்ளது. அதிமுகவின் இந்த வாக்குறுதி, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறுவதற்காக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு முரணானது. நிரந்தர விலக்கு நிலையிலிருந்து தற்காலிக விலக்கு நிலைக்கு  அதிமுக வந்துள்ளது.
ஏழை மாணவர்களுக்கும்,  மாநில பாடத் திட்டத்தில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும்,  கிராமப்புற மாணவர்களுக்கும்  நீட்  தேர்வு எதிராக உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு தடையாக உள்ளது. உதாரணமாக, நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்ற 2017-இல் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரும், 2018-இல் நால்வரும் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. அதாவது,  தமிழக அரசின் 2,247 எம்.பி.பி.எஸ். இடங்களில் வெறும் 4 இடங்களை மட்டுமே  அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றனர். 
நீட்  தேர்வு இல்லாத 2016-ஆம் ஆண்டு  அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்.
மத்திய பாடத் திட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு சாதகமாக உள்ளது. நீட் தேர்வுக்கு முன்னர், மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2013-ஆம் ஆண்டில் 1,642 பேரும், 2014-இல்  789 பேரும், 2015-இல் 1,276 பேரும் தமிழக அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர விண்ணப்பித்தனர். அவர்களில் ஒருவருக்குக்கூட இடம் கிடைக்கவில்லை.ஆனால், நீட் தேர்வு  மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்ற 2017-ஆம் ஆண்டு, தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கான  3,534  இடங்களில், மத்திய பாடத் திட்ட  மாணவர்கள் 1,220 பேர் இடம்பெற்றனர் என்பது  இதை உறுதிப்படுத்துகிறது.
சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில உரிமைகள், தாய்மொழி வழிக் கல்விக்கு நீட் தேர்வு எதிரானதாகும். அரசு மருத்துவர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பை உருவாக்குகிறது. இந்த ஆண்டு மொத்த முதுநிலை மருத்துவ இடங்களில் 32 சதவீதத்தை மட்டுமே அரசு மருத்துவர்கள் பெற்றுள்ளனர்.
 நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. சென்ற ஆண்டு தமிழ் மொழி வினாத்தாளில் 44 வினாக்கள் தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு தமிழ் மொழி வினாத்தாளில் வினாக்களே மாறியிருந்தன. நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு எனக் கூறிவிட்டு ,வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வினாக்களை இடம்பெறச் செய்தது  தவறாகும். சில மொழிகளில் வினாக்களை எளிமையாகவும், வேறு சிலவற்றில் கடினமாகவும் அமைத்தது பாரபட்சமானதாகும். வெவ்வேறு வினாக்களில் தேர்வை நடத்திவிட்டு , ஒரே தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது நியாயமல்ல.
தேர்வு மையங்களை ஒதுக்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோதுகூட தேர்வுகளைத் தள்ளிவைக்கவில்லை. இவை தமிழக மாணவர்களைப் பாதித்தது. இந்த ஆண்டும் கடைசி நேரத்தில் மாணவர்களின் தேர்வு மையங்களை மாற்றியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது போன்ற காரணங்களால் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் மருத்துவ ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு விலக்குப் பெற வேண்டும்.
நீட் தேர்வுக்குப் பதிலாக, தமிழக அரசே தனது பாடத்திட்டத்தில் நுழைவுத் தேர்வை நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். வரும் காலத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தத் திட்டமிடுவது  சரியல்ல.  இது பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றன. உடல்நலப் பிரச்னைகள், விபத்துகள், வீட்டில் நடைபெறும் திடீர் துயர நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களால் பிளஸ் 2 இறுதித் தேர்வை சரியாக எழுத முடியாமல் போனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஒரே ஒரு முறை பெறும் மதிப்பெண் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை என்பது, மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை, உருவாக்குகிறது. ஏனெனில், பிளஸ் 2 தேர்வில் ஒருசில பாடங்களில் மதிப்பெண் குறைந்துவிட்டால்கூட, மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவு நிரந்தரமாகத் தகர்ந்து விடுகிறது. அடுத்த ஒரு வாய்ப்பு கிட்டாமலே போய் விடுகிறது. இது நியாயமற்றது.
உயர் கல்வியில் சேர ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்குதல் மாணவர்களின் உரிமையைப் பறித்துவிடுகிறது.  நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மட்டுமே முதல் முயற்சியில் இடம் கிடைக்காவிட்டாலும், அடுத்த சில முறை போட்டியிட்டு  மருத்துவப் படிப்புக்கான இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இது மாணவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், இதுபோன்ற வாய்ப்புகளை மறுப்பது, ஒரே முயற்சியோடு கதவை மூடிவிடுவது தவறான நடைமுறையாகும். மேலும், பிளஸ் 2 தேர்வு ஒரு தகுதித் தேர்வு  ஆகும். ஒரு தகுதித் தேர்வையே உயர் கல்வி இடத்தைப் பெறுவதற்கான போட்டித் தேர்வாக மாற்றுவது சரியல்ல. தனி நபர் விருப்பம் சார்ந்து மதிப்பெண் வழங்கும் ஒரு தேர்வை, மருத்துவக் கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளுக்கான போட்டித் தேர்வாக  மாற்றுவது  நியாயமல்ல.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது பெரிய பலனை அளித்தது என்றும் சொல்லிவிட முடியாது. 2009 -10 முதல் 2016-17 வரை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான்  மாணவர் சேர்க்கை நடந்தது. அந்தக் காலகட்டத்தில்,  தமிழக அரசின் ஒட்டுமொத்த  29,225 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில்  அரசுப் பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்ந்தனர். நுழைவுத் தேர்வு இருந்த காலகட்டத்தில்  அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில், 20 முதல் 30  சதவீத எம்.பி.பி.எஸ் இடங்களில் சேர்ந்தனர். எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கைப் பெற்று, தமிழக அரசே தனி நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். அந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் ஏழை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பை உறுதிப்படுத்தும். இதை விடுத்து, நுழைவுத் தேர்வையே மத்திய அரசு நடத்தக் கூடாது என்ற கருத்து சரியல்ல. அத்தகைய வாதம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களின் முறைகேடான மாணவர் சேர்க்கைக்கே  உதவும்.
நீட் நுழைவுத் தேர்வு அல்லது அதைப் போன்று மத்திய அரசு நடத்தும் தேர்வின் மூலம்  மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் நேரடியாக நடத்த எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.  இதுவே, மாணவர் சேர்க்கை முறைகேட்டைத் தடுக்க   உதவும்.
 மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம், அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கும், ராணுவ மருத்துவக் கல்லூரி, எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இது ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமையிலிருந்து மாணவர்களை விடுவிக்கும். இந்த நுழைவுத் தேர்வுக்கும் தமிழக மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம், தமிழக அரசின் மருத்துவ இடங்களைத் தவிர நாடு முழுவதும் உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இடங்களிலும் தமிழக மாணவர்கள் சேர முடியும்.
நிகர்நிலை மருத்துவ இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.அவற்றின் 50 சதவீத இடங்களை அந்த நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள மாநில அரசுகளின் ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பயின்றால், அவர்களின் கட்டணத்தை அரசே  ஏற்க வேண்டும். வட்டியில்லாத கல்விக் கடன் வழங்க வேண்டும். 
அரசுகளே  கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கி போட்டியைக்  குறைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே மருத்துவக் கல்லூரிகளின் வாயில்களை ஏழை மாணவர்களுக்கும் திறந்திடச் செய்யும். சமூக நீதியை முழுமைப்படுத்தும். நீட்  தேர்வு விலக்கு மட்டுமே சமூக நீதியை முழுமைப்படுத்தி விடாது.

கட்டுரையாளர்:
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com