மன்னித்தலே மனிதம்!

மனிதனாகப் பிறந்த யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாது என்கிற சூழல் இன்றைய காலகட்டத்தில் உள்ளது.  

மனிதனாகப் பிறந்த யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாது என்கிற சூழல் இன்றைய காலகட்டத்தில் உள்ளது.  குழந்தைகளின் இயல்பு கடந்து முதிர்ச்சி அடையும்போது நமது உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது; அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்ய நினைத்தால்கூட குற்றம்தான்.  ஏனெனில், தவறு செய்ய நினைத்தவுடன், மனதில் ஆழப் பதிந்துவிடும்.  பிறகு, என்றாவது ஒருநாள் அதற்கான வாய்ப்பு உருவாகும்போது அந்தப் பழைய எண்ணம் குற்றம் செய்யத் தூண்டுகிறது.

ஆகவே, தவறுகளை நினைக்காமல் இருப்பது மிகமிக முக்கியம்.  இதற்கு ஓர் எளிய வழி நம் மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களும் செயல்கள் நல்லவையாக இருந்தாலும் போதுமானது. தவறான எண்ணம், செயல்களை உடனே நினைத்து மனதுக்குள் வருந்தி மன்னிப்புக் கோருதல் உடனடி நிவாரணமாகும்.  நினைத்தாலே தவறு எனும்போது, தவறு செய்திருந்தால் நமது மனமும் பாதிக்கப்பட்டவரின் மனமும் எப்படி வருந்தும்?  

எனவே, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருதல் என்பது நமது தவறுக்கான தண்டனைதான்.  இதற்காக நாம் எந்தவிதக் கூச்சமோ, வருத்தமோபடத் தேவையில்லை.  நமது தவறினால் பாதிக்கப்பட்டவர் மனம் இளகி நம்மை மன்னித்துவிட்டால், அதன் மூலம் பிறகு அவருடன் ஏற்படும் இணக்கமான உறவு நட்பினை மேலும் வலுப்படுத்தும்.

இந்த மாதிரியான மன்னிப்புக் கோருதல், மன்னிப்பு வழங்குதல் போன்ற பண்புள்ள செயல்களால் மனிதகுலம் என்றும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழும்.   மன்னிக்கும் குணமும் மறக்கும் பண்பும் இல்லாததால் வாழ்வில் பலவிதமான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிறோம். ஆனால், சில ஆன்மிக அமைப்புகளில் இணைந்து சிலவிதமான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டதன் மூலம்  நாம் பழகும் அனைவரிடத்திலும் இணக்கமாகப் பழகும் பண்பு வளர வாய்ப்பு ஏற்படும்.  ஆனால், இந்தப் பண்பை குழந்தைப் பருவம் முதல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு சூழ்நிலைகளால் தவறு செய்யும் மனிதர்களை அப்போதே மறந்து மன்னிக்கும் மனோபாவம் வளர்ந்துள்ளது.  அவர்கள் செய்யும் தவறுகளை உடனடியாக மன்னிக்க முடியாவிட்டாலும், பிறகு அதைச் சிந்தித்து காரண காரியங்களை ஆராய்ந்து இயல்பு நிலைக்கு வர முடிகிறது.  பிறர் செய்யும் தவறுகளுக்கு எதிராகப் பழிவாங்கும் எண்ணம் உருவாகாதபடி,  மன்னிக்கும் மனோபாவம் பக்குவம் ஏற்படுத்தியதை நாம் உணர முடியும். 

இல்லற வாழ்வில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், அதனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக எழுந்த சங்கடங்கள் முதலியவை இந்த மன்னிப்புக் கேட்பதிலும், மனப்பூர்வமாக மன்னிப்பு வழங்குவதிலும் சரியாகிவிடுகிறது என்பது பலரின் அனுபவப்பூர்வமான உண்மை.  இதனால் மனதில் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எழாமல் நல்ல மனநிலையை உருவாக்க முடியும்.  இதன் மூலம் பெரும் குற்றங்கள்கூட தவிர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

நாம் தவறு செய்திருந்தாலும் அதனால் பிறர் மனம் வருந்தும் என்கிற சூழலில் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வது உண்டு.  பிறர் நமக்குச் செய்த தவறுகளை, கொடுத்த சிரமங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி பெறாது.  அதனால் நமது மனம் மட்டுமல்ல, உடல் நலமும் பாதிக்கப்படும்.

மன்னிப்பு வழங்காத நிலையில் நம் மனம் அமைதியின்றி காணப்படும். மன்னிப்புக் கேட்காத போதும் இதே நிலைதான்.  கடமைகளைச் செய்ய முடியாது.  ஒருவேளை தொடர்புடைய நபர் அருகில் இல்லாத சூழலில், மனதளவில் அவரை நினைத்து மன்னித்துவிட்ட மனோபாவம் கொண்டதால் நம் மனம் அமைதி அடைந்ததை உணரமுடியும்.  

அதே சமயம் நாம் மன்னித்துவிட்ட நபர் தானாக முன்வந்து பேசியதும் பிறகு தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததும் நடந்து விடும்.  ஆகவே, நமது உண்மையான மன்னிக்கும் மனப்பான்மை பிறருடைய செயலிலும் மாற்றம் காணும். ஒருவர் நமக்குத் தீமை செய்தும் அவரிடம் சென்று எப்போதும்போல (மனதளவில் மன்னிப்பு வழங்கியபின்) பழக ஆரம்பித்தபோது, அவர் தன் தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்புக் கோரினால், அவரிடம் "ஏற்கெனவே உங்களை மன்னித்துவிட்டேன்' என்று கூறும்போது அவர் நன்றியோடு நம்மை நெருங்கிவந்து கைகுலுக்குவது நெகிழ்ச்சி அளிக்கும். 

நமது வாழ்வின் அத்தனை சிரமங்களையும், தீமைகளையும், தவறுகளையும் நமது மன்னிக்கும் மனோபாவத்தினால் வெல்ல முடிந்தது என்பது மன்னிக்கும் மனப்பான்மை மீதுள்ள நமது ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  
 பிறர் நமக்கு தீங்கு செய்த போதிலும் அவர் மீது நமக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் அப்படிச் செய்யாமல்  மன்னித்துவிடும்போது மனம் இன்பம் அடையும். உலகெங்கும் இன்று நிலவும் வன்முறைகளுக்கும் பிற தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் மன்னிக்கும் மனப்பான்மை இல்லாததே.

சில நேரங்களில் நமது மேலதிகாரியிடம் நமக்கு தீமை செய்தவரை, தவறு செய்தவரைப் பற்றிச் சொல்லி நடவடிக்கை எடுக்க புகார் கூறும் சூழல் ஏற்படும்.  இருந்தும் நமது இந்த மன்னிக்கும் மனோபாவத்தால் அப்படிச் செய்யாமல் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து பொறுமையாக அவர் தவறைச் சுட்டிக்காட்டி, "இனிமேல் நடைபெறாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்' எனக் கூறுவதன் மூலம் அவர் மனதில் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும்; மீண்டும் தவறுகள் நேராதபடி நம்மால் தடுக்க முடியும்.

இப்படிப்பட்ட மனநிலை ஏற்படுவதன் மூலம் நாம் முதலில் தவறுசெய்யாதபடி நமது பண்பு வளர்ந்து விடுகிறது.  நாம் தவறு செய்யாமல் இருந்தால்தான் பிறர் தவற்றை சுட்டிக்காட்டத் தகுதி பெறுகிறோம். 

ஆகவே, நம்மிடம் தவறுகள் நேராத செயல்பாடுகளை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். எனவே, உலக அமைதிக்கு மன்னிக்கும் மனோபாவம் என்பது அடிப்படை.  இந்த நல்ல பழக்கத்தை நாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் பரவச் செய்வோம்.  பிறர் தவறுகளை, குற்றங்களை மறப்போம், அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com