வயநாட்டில் ராகுலும் ஒரு வேட்பாளர், அவ்வளவே! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புப் பேட்டி

" அனைத்துத் தொகுதிகளையும் போன்று வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது பெயர் ராகுல் காந்தி, அவ்வளவுதான்.
வயநாட்டில் ராகுலும் ஒரு வேட்பாளர், அவ்வளவே! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புப் பேட்டி

" அனைத்துத் தொகுதிகளையும் போன்று வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது பெயர் ராகுல் காந்தி, அவ்வளவுதான். அவர் இல்லாவிட்டால் வேறொரு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடப் போகிறார். இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?"

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர், பொருளாதார நிபுணர், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் ப.சிதம்பரம். தென் தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் ஆட்சி அமையும்போதெல்லாம், அமைச்சரவையில் கண்டிப்பாக இடம்பெறுபவர். நிதி, வர்த்தகம், உள்துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர். இந்தத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், காரைக்குடி அருகே மானகிரியில் இருக்கும் அவரது இல்லத்தில் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

முந்தைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசியல் தலைவராக இது குறித்து உங்களது கருத்து என்ன?

முந்தைய தேர்தல்களுக்கும் இன்றைய தேர்தலுக்கும் ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன. அதை நான் வரவேற்கிறேன். முந்தைய தேர்தல்கள் ஏழை, எளிய, நலிந்த மக்களின் குரல்கள் ஒலிக்காத தேர்தலாக இருந்தது. காலப்போக்கில் தற்போது அவர்களது குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. உரத்த குரலில் அவர்களது எண்ணங்கள் எங்களுக்குக் கேட்கின்றன. குறிப்பாக, பெண்கள், தலித்துகள், நலிந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோரின் குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. இதுதான் உண்மையான ஜனநாயகம்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான உங்கள் கருத்து என்ன?

இதை ஒரு புதுமையான முயற்சியாகவே பார்க்கிறோம். ஓர் அறைக்குள் அமர்ந்து 4 அல்லது 5 நாள்களில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்ய விரும்பவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய நாடு முழுவதும் 174 இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மக்களின் கருத்துகள், கோரிக்கைகள் சரியான சொற்களில் எங்களால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தல் அறிக்கையைப் பொருத்தவரை கருத்து மக்களுடையது, எழுத்து எங்களுடையது. ஆகவேதான், இதை "மக்களின் தேர்தல் அறிக்கை' என்று கூறுகிறோம். எனது அனுபவத்தில் ஓர் அரசியல் கட்சி, இத்தகைய தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளது இதுவே முதல் முறை.

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இப்போது காங்கிரஸின் "நியாய' திட்டத்தை "கதாநாயகன்' என திமுக வர்ணிக்கிறது. இது முரண்பாடாக இல்லையா?

தமிழக அரசு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை, காங்கிரஸின் "நியாய' திட்டத்தோடு ஒப்பிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அதிமுக அரசு அறிவித்தது, வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதைப் போன்றது. ஆனால், நாங்கள் (காங்கிரஸ் கட்சி) ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளோம். ஆகவே, அதிமுக அரசின் திட்டத்துடன் இதை ஒப்பிடுவது சரியல்ல.

வறுமைக்கு எதிராகத் துல்லியத் தாக்குதல் நடத்த இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். அப்படியெனில் வறுமை ஒழியாததற்கு 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதானே காரணம்?

ஒரு காலத்தில் இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 20 சதவீதம்தான். வறுமை ஒழிக்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் என்றால், வறுமை நிலையில் இருந்து 50 சதவீதம் மக்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மக்கள்தொகை உயர்ந்துள்ள நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்றால், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்? அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி என ஒப்புக் கொண்டால், உங்களது கேள்வியையும் ஒப்புக் கொள்வேன். 

வறுமையை ஒழிப்பதற்குத் திட்டமிடாமல், அவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என்று கூறி மானியம் வழங்குவது எப்படி நிரந்தரத் தீர்வாக அமையும்?

இப்போதைய சூழலில், வறுமை நிலையில் இருக்கும் 20 சதவீதம் பேரை உயர்த்துவதற்குப் பல திட்டங்கள் இருந்தாலும், நேரடியாக ரொக்கப் பரிவர்த்தனை செய்வதுதான் சிறந்த நடைமுறை எனப் பல பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில்தான் "நியாய' திட்டத்தைச் செயல்படுத்துவது என முடிவு செய்துள்ளோம்.

வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என ராகுல் காந்தி கூறுகிறார். அப்படியானால் வாராக் கடன் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்காதா? இது வங்கிகளின் செயல்பாடுகளை நலிவடையச் செய்துவிடாதா?

பெரிய நிறுவனங்கள் திவாலானால், "இன்சால்வன்ஸி போர்டு'க்கு அனுப்பி, கடனில் பெரும் பகுதி ரத்து செய்யப்படுகிறது. கடன் தொகையில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, அந்த நிறுவனத்துக்கு அத்தாட்சி தரப்படுகிறது. ஏழை விவசாயி கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் வழக்குத் தொடரக் கூடாது என்று கூறவில்லை. குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது என்றுதான் கூறுகிறோம். கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரும் முதலாளிகள் மீதும் குற்றவியல் வழக்குத் தொடர வேண்டியதுதானே? ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டமா? இது என்ன நியாயம்? 

சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகியன ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன? ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் அந்த அமைப்புகள் இதுபோன்று செயல்பட்டதாகக் கூறப்படுகிறதே?

காங்கிரஸ் ஆட்சியின்போது தேர்தல் காலத்தில் வருமான வரித் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தோம் என்று ஓர் உதாரணத்தையாவது சொல்ல முடியுமா? காங்கிரஸ் ஆட்சியின்போது தேர்தல் காலத்தில் ஒருபோதும் வருமான வரித் துறையினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது கிடையாது. தேர்தல் நேரத்தில் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதைத்தான் தவறு எனச் சொல்கிறோம். நாடு முழுவதும் 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவர் வீட்டில்கூட சோதனை நடைபெறவில்லையே ஏன் என்று கேட்கிறோம். 

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முன்மொழியப்பட்டது. மக்களுக்கு ஏற்ற வகையில் அதைக் கொண்டு வந்திருந்தால், இப்போது பாஜக அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி-ஐ மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருந்திருக்காதே?

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்தது பாஜகதான். ஏறத்தாழ 8 ஆண்டுகள் அதற்குத் தடை செய்தார்கள். முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அரசியல் சாசன திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தது பாஜக. ஆகவேதான், 2014-ஆம் ஆண்டு வரை ஜிஎஸ்டி-யை எங்களால் அமல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அரசு ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியிருந்தால் எளிமையான, எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய, மக்கள் மீது சுமையை ஏற்றாத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கும். 

பெரும்பான்மை எம்.பி.க்களைக் கொண்ட உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், எந்த நம்பிக்கையில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் 145 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நிலையான ஆட்சியையும் கொடுக்க முடிந்தது. 2009-இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தபோது முந்தைய தேர்தலில் கிடைத்த 145 இடங்களில் வெற்றி என்பது 206 இடங்களாக உயரவில்லையா? 2009-இல் இருந்து 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரவில்லையா? இதெல்லாம் அரசியலில் நடக்கக் கூடியவைதான். கணிசமான இடங்களில் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றால், மற்ற கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்க முடியும். அந்த ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்கு 2004 முதல் 2014 வரையிலான எங்களது 10 ஆண்டுகளே சாட்சி.

கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். தமிழகம் அல்லது கர்நாடகத்தில் ஏதாவதொரு தொகுதியில் அவரை போட்டியிடச் செய்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் முரண்பாடு ஏற்பட்டிருக்காதே?

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை. அங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இதுதான் கடந்த 30 ஆண்டுகால கேரள அரசியலின் வரலாறு. இந்தத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போட்டியிடுவதைப்போல, மார்க்சிஸ்ட் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 19 தொகுதிகளில் எந்தவித ஆட்சேபணையும் செய்யாத கம்யூனிஸ்டுகள், 20-ஆவது தொகுதியில் மட்டும் ஆட்சேபணை செய்வது ஏன்? 

வேறு யாராவது போட்டியிட்டிருந்தால், அது இந்த அளவுக்குப் பிரச்னையாகி இருக்காது. போட்டியிடுவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியாயிற்றே?

அனைத்துத் தொகுதிகளையும் போன்று வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது பெயர் ராகுல் காந்தி, அவ்வளவுதான். அவர் இல்லாவிட்டால் வேறொரு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடப் போகிறார். இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஷாநவாஸ் இறந்துவிட்டதால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. உயிருடன் இருந்தால் அவர்தான் போட்டியிட்டிருப்பார். அதையும் குறை சொல்வார்களா? ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதில் எந்த முரண்பாடும் கிடையாது.

இது எதிர்க்கட்சி ஒற்றுமையைக் குலைப்பதாக அமையாதா? 

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. அருகில் உள்ள கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. அந்தந்த மாநிலத்துக்கு ஏற்பதான் கூட்டணி அமையும். ஒரு மாநிலத்தில் கூட்டணி, வேறொரு மாநிலத்தில் நேருக்கு நேர் போட்டி என்பதற்காக அகில இந்திய அளவில் ஒத்திசைந்து ஓர் அரசை அமைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி.

காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருக்கிறதே?

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று அவர்கள் புதுமுகங்கள்தான். அப்போது கூட்டணி இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. கூட்டணி இல்லாத நேரத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்த இளைஞர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு 5 வயது கூடியிருக்கிறது அவ்வளவுதான். 

சிவகங்கை தொகுதியில் உங்களது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் இருக்கக் கூடிய வெற்றி வாய்ப்பு தான் கார்த்தி சிதம்பரத்துக்கும் இருக்கிறது. 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்ற ஆழமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதில் சிவகங்கை மட்டும் விதிவிலக்கல்ல. 

சந்திப்பு: சிவ.மணிகண்டன், 
ச.உமா மகேஸ்வரன், ச.சந்தனக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com