நடையும் பறப்பும் உணர் வண்டிகள்... 

அமெரிக்காவில் வர்ஜீனியா கீழைக் கடற்கரை வானிலை ஆய்வூர்தித் தளத்தில் ஒரு போர்க்கள ஓவியம் இடம்பெறுகிறது. நம் நாட்டில்

அமெரிக்காவில் வர்ஜீனியா கீழைக் கடற்கரை வானிலை ஆய்வூர்தித் தளத்தில் ஒரு போர்க்கள ஓவியம் இடம்பெறுகிறது. நம் நாட்டில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக 1792-ஆம் ஆண்டு மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடத்திய யுத்த காவியம். இது குறித்து குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பல முறை கூறி இருக்கிறார். தமது அக்னிச் சிறகுகள் நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
அந்நாளில் ஏறத்தாழ 10 அங்குல நீளமும் ஒன்றரை அங்குலக் குறுக்களவும் கொண்ட இரும்புக் குழாய்களில் வெடிமருந்து நிறைத்து ராக்கெட் தயாரிக்கப்பட்டது. அதுவே 6-7 அடி நீள வாளுடன் தோல் வாரினால் இறுக்கிக் கட்டப்பட்டு ஆங்கிலேயப் படை மீது ஏவப்பட்டது. திப்பு சுல்தான் 1799ஆம்-ஆண்டு துருக்கனஹள்ளி போரில் வில்லியம் காங்கிரீவ்ஸ் என்ற ஆங்கிலத் தளபதியினால் கொல்லப்பட்டார். அவரது 700 இந்திய ராக்கெட்டுகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். ஜூர்க்குகள் என்றழைக்கப்பட்ட ராக்கெட் வீரர்களையும், கஷன்கள் எனப்பட்ட படை அதிகாரிகளையும் அடிமைகள்ஆக்கினார். 
அவர்களிடமிருந்து ஏவுகணைத் தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர் கற்று அறிந்தனர். சுமார் 20 கிலோ எடையை ஒன்றிரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை எறியக் கூடிய ஏவுகணைக் கருவிகளை வில்லியம் காங்கிரீவ்ஸ் வடிவமைத்தார். இவ்வாறு ஆங்கிலேயர் இந்திய ராக்கெட்டுகளைத் தமக்கேற்பத் திருத்தித் தயாரித்தனர். 
1805-ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று காங்கிரீவ் ஏவுகணைகள் ஆங்கிலக் கால்வாய்க்கு அக்கரையில் பூலோன் துறைமுகத்தில் நின்றிருந்த பிரான்ஸ் கப்பல்களைக் குறிவைத்தன. 1806-ஆம்ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான போரில் காங்கிரீவ் அளித்த ஏவுகணைகளைப் பிரயோகித்தார் அவரது நண்பர் சிட்னி ஸ்மித் எனும் இத்தாலியத் தளபதி. அதே ஆண்டு அக்டோபர் 8 அன்று பூலோன் துறைமுகத்தில் நெப்போலியன் கடற்படை மீது ஏறத்தாழ 200 ராக்கெட்டுகள் செலுத்தினார் காங்கிரீவ். 
1807-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 முதல் 5 வரை மூன்று நாள் போரிலும் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் மீது பல நூறு ஏவுகணைகளை பிரிட்டன் வீசியது. முடிவில் அண்ட்ரீ ஃபிரடெரிக் ஷூமேக்கர் என்னும் டென்மார்க் ராணுவப் பொறியியலாளர் தீய்ந்து போன காங்கிரீவ் ஏவுகணைகளைக் கைப்பற்றினார். 
இதற்கிடையில் டென்மார்க் ஏவூர்தி இயங்கியல் குறித்த கட்டுரைப் போட்டி ஒன்று அறிவித்தது. அந்த அறிவிப்பு நிக்கோல்சன் நடத்திய இயற்கைத் தத்துவ சஞ்சிகையில் (ஜர்னல் ஆஃப் நேச்சுரல் ஃபிலாஸஃபி) வெளியானது. அந்தப் போட்டியில் காங்கிரீவ் நண்பரும் 1806- ஆம் ஆண்டு முதல் அரசு ராணுவக் கழகத்தின் கணிதப் பேராசிரியருமான வில்லியம் மூர் என்பவரின்  கட்டுரை பரிசு பெற்றது. 1813-ஆம் ஆண்டு அவர் எழுதிய ஏவூர்திகள் இயக்கம் குறித்த ஆவணம் எனும் நூல் குறிப்பிடத்தக்கது.  1813-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் காங்கிரீவ் ஏவுகணைகள் தயாரிக்கும் ராணுவத் தொழிற்சாலை உருவானது. ஐரோப்பியக் கண்டத்தின் முதலாவது ராக்கெட் கம்பெனி அது. 
டென்மார்க்கைப் பின்பற்றி, பிரஷ்ஷியா (1816), ஆஸ்திரியா (1817), போலந்து (1827), ரஷியா (1827), பிரான்ஸ் (1829), ஸ்வீடன் (1833), சுவிட்சர்லாந்து (1853) போன்ற உலக நாடுகள் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டன. 
பிரான்ஸ் நாட்டினர் வழி ஜெர்மானியர்களுக்கு அறிமுகம் ஆனது ஏவுகணைத் தொழில்நுட்பம், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவிடம் தோற்றுப் போன ஜெர்மனி தன் வசமிருந்த ஏ-4 என்ற சங்கேதப் பெயர் தாங்கிய ஏவுகணைகளை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. அவற்றை வடிவமைத்த வெர்னர் வான் பிரான் என்ற ஜெர்மானிய ஏவுகணை நிபுணரும் 3,500 விஞ்ஞானிகளுடன் அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்டார். 
அப்புறம் என்ன? ஜெர்மனியின் ஏ-4 ஏவுகணை அமெரிக்காவின் வி-2 ஏவுகணை ஆனது. இவ்விதம் இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்காலத்தில் அமெரிக்காவிலும், ரஷியாவிலும் செயற்கைக்கோள் ஏவுகலன்கள் ஆக புதுபிறவி எடுத்தது. 1957 அக்டோபர் 4 அன்று ரஷியாவின் ஸ்புட்னிக் முதன்முதலாக விண்சுற்றி வந்தபோது விண்வெளி யுகம் ஆரம்பம் ஆனது. 
1962 ஆம் ஆண்டுவாக்கில் டாக்டர் விக்ரம் சாராபாய் தலைமையில் அணு விஞ்ஞானி ஹோமி ஜே. பாபாவின் உதவியுடன் இன்கோஸ்பார் எனப்படும் இந்தியன் நேஷனல் கவுன்சில் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் எனும் இந்தியத் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டது.  வானிலை ஆராய்ச்சி, தொலைத்தகவல் தொடர்பு, தொலையுணர்வு போன்ற பயன்பாடுகளே இந்திய விண்வெளியின் ஆரம்பக் குறிக்கோள்கள். 
1962-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று தொடங்கிய சீனா யுத்த காலத்தை ஒட்டி, எல்லை பாதுகாப்புக்காக ராட்டோ என்கிற ராக்கெட் உதவியினால் செங்குத்தாக உயர்ந்தெழும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. யுத்த களங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு குண்டும் குழியுமாகச் சிதிலம் அடைந்த கரடுமுரடான ஓடுதளங்களில் விமானம் ஊர்ந்து எழுவது சிரமம் ஆயிற்றே. இருப்பினும் பின்னாளில் இந்தத் திட்டம் கைவிடப்பெற்றது. 
1963-ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று இந்திய மண்ணிலிருந்து நைக்கி அப்பாச்சி என்னும் முதலாவது வானிலை ஆய்வூர்தி செலுத்தப்பட்டது. நவீனத் தொழில் நுணுக்கங்களை, தனிமனித சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்துவதில் நாம் மற்ற நாடுகளுக்கு இளைத்தவர் அல்லர் என்று நிரூபித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் டாக்டர் சாராபாய் உறுதியாக இருந்தார். 
இன்றுவரை 115 இந்திய செயற்கைக்கோள்களும், 270க்கும் அதிகமான அயல்நாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்திய ஏவுகலன்களால் இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டுள்ளன. இதன் மூலம் 2013-2015 ஆண்டுகளில் மட்டும் ரூ.7,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 
2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று சந்திரயான்-1, 2013 நவம்பர் 5 அன்று செவ்வாய்ச் சுற்றுகலன் மங்கள்யான் போன்ற வேற்றுக்கோள் பயணங்களும் நடத்திக் காட்டினோம். அதிலும் செவ்வாய் ஆய்வில் முதல் பயணத்திலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு இந்தியா. செவ்வாய் சென்று அடைந்த முதல் ஆசிய நாடும் இந்தியாதான். 
1980-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று டாக்டர் அப்துல் கலாம் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட எஸ்.எல்.வி.-3 எனும் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலனின் வெற்றி உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று காலை பிரிட்டிஷ் வானொலி இந்தச் செய்தியினை  இடைத்தரத் தொலை வீச்சுக்கணை (இன்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் மிஸைல்) சார்ந்த ராக்கெட் ஒன்றினை இந்தியா விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது என்றே அறிவித்தது. 
1982-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியன்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் இயக்குநராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவி ஏற்றார். இந்திய தேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டு வந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நவீன ஏவுகணை அமைப்புகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. 
1983-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருங்கிணைந்த நெறிப்பாட்டு ஏவுகணை மேம்பாட்டுச் செயல் திட்டம் உருவானது. பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக், ரெக்ஸ் எனப்படும் வளி மண்டல மறுநுழைவுப் பரிசோதனைக்கான அக்னி ஆகிய ஐந்து புதுவகை ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டன. 
இதற்கு மத்தியில், பிரம்மபுத்ரா மற்றும் ரஷியாவின் மாஸ்கோ ஆகிய இரு இடப் பெயர்களின் கூட்டாகப் பிறந்தது பிரம்மோஸ் ஏவுகணை. 
ஆயுதம் ஏந்தினால் ஏவுகணை. செயற்கைக்கோளைச் சுமந்து சென்றால் அது ஏவுகலன். ஏவூர்தி ஒன்றுதான். சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பு, 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று இந்தியாவின் முதலாவது சொந்த செயற்கைக்கோள் ஆர்யபட்டா விண்ணில் செலுத்தப்பட்டது. 
இந்த ஆண்டு மார்ச் 27 அன்று 274 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் இயங்கி வந்த மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக்கோளினைத் தாக்கித் தகர்க்கும் ஏசாட் (ஏவுகணை எதிர்ப்பு) பரிசோதனையையும் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து இந்தியா நிறைவேற்றியுள்ளது. 
இந்த ஏசாட் (செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை) தாக்குதலுக்கு இலக்கான 740 கிலோ மைக்ரோசாட்-ஆர் எனும் ராணுவச் செயற்கைக்கோள், 2019 ஜனவரி 23 அன்று இரவு 7.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ஏவுகலனில் மாணவர்கள் உருவாக்கிய 1.2 கிலோ கலாம்சாட் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்டது. 
இந்திய வான்படைக்காக எமிசாட் (436 கிலோ) என்னும் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. எலக்ட்ரோ - மாக்னட்டிக் இன்டலிஜென்ஸ் சாட்டிலைட் அதாவது, மின் காந்த அலைவரிசைவழி உளவு பார்க்கும் செயற்கைக்கோள். இதில் தன்னிச்சையாக அடையாளம் காணும் அமைப்பு, அமெச்சூர் செயற்கைக்கோள் வானொலிக் கழகத்தின் பயன்சுமை, அயன் மண்டலத்தின் பின்வாங்கும் மின்தகைமை அளவு ஆகியவற்றை அளக்கும் கருவிகளும் இதில் இடம்பெறுகின்றன. 
ஏற்கெனவே எலக்ட்ரானிக் இன்டலிஜன்ஸ் சார்ந்து எலின்ட் என்கிற மின்னணு நுண்ணறிவுச் செயற்கைக்கோளும், கமின்ட் என்னும் தகவல் நுண்ணறிவுச் செயற்கைக்கோளும் மேலைநாடுகளிடம் புழக்கத்தில் உள்ளன. 
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் என்று பாரதி சொன்னது நிலத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களையும், வானில் பறக்கும் விமானங்களையும் விண்வெளியில் இருந்தவாறே கண்டு உணரும் உளவுச் செயற்கைக்கோள்களைத்தானோ?
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு). 
இன்று இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com