உலகக் கோப்பை மீண்டும் வசப்படுமா?

​இங்கிலாந்தில் வரும் மே 30-ஆம் தேதி தொடங்கி சுமார் ஆறுவார காலம் உலகக் கோப்பை போட்டி இந்த முறை நடைபெற உள்ளது.  


இங்கிலாந்தில் வரும் மே 30-ஆம் தேதி தொடங்கி சுமார் ஆறுவார காலம் உலகக் கோப்பை போட்டி இந்த முறை நடைபெற உள்ளது.  
உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறும் தங்கள் வீரர்களின் திறமையை அலசி ஆராய்ந்து, உலகக் கோப்பையில் பங்கு பெறுவதற்கான ஆகச் சிறந்த அணியினைக் களம் இறக்குவதற்கு ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகிறது. ஐந்து நாள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆகிய போட்டிகளுக்கான சிறப்புத் திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட தனித் தனி அணிகளைத் தேர்ந்தெடுப்பது உலகம் முழுவதும் வழக்கமாகியுள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை விராட் கோலி, பும்ரா, புவனேஸ்வர், ஷமி போன்ற ஒருசில வீரர்களே மூன்று வகையான போட்டிகளிலும் தேர்ந்தெடுக்கப்
படுவதைக் காண்கிறோம். மூத்த வீரராகிய எம்.எஸ்.தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் இடம்பெற்று வருகிறார். 
துடிப்பும், திறமையும் ஒருங்கே அமைந்துள்ள விராட் கோலி தலைமையில் உலகக் கோப்பையில் களம் காண இருக்கும் இந்திய அணி கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்,  மூன்று ஆல்ரவுண்டர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் கொண்டதாக அமைந்த அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெறாதது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கெதிராகச் சற்று சுமாராக விளையாடியபோதிலும், சராசரியாக 47.06 ரன்களைக் குவித்துள்ள அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது தவறு என்று கெளதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 33 வயது நிரம்பிய அம்பதி ராயுடுவுக்கு அடுத்த உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது நிச்சயமில்லை எனும்போது அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதே சமயம், ரிஷப் பந்த் நல்ல பேட்ஸ்மேன் என்ற போதிலும், விக்கெட்கீப்
பராக அவரது திறமையைச் சரியாக வெளிப்படுத்தவில்லை. மேலும், இவர் 21 வயது இளம் வீரர் என்பதால், எதிர்கால இந்திய அணியில் நிச்சயம் அவருக்கு இடம் கிடக்கும். பிற நாடுகளைப் போலவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவினர், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் இந்த உலகக்கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அண்மைக்காலமாக பலவித சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். 
அதே சமயம், நமது அணிக்கு வலு சேர்க்கக் கூடிய திறமையும் அனுபவமும் உள்ள சில வீரர்களுக்கு இடம் மறுக்கப்படுவதுடன், தேர்வு பெறும் சில வீரர்களும் தங்களது மன உறுதியை இழக்கும்படியாக நடத்தப்படுதை சொல்லித்தான் ஆக வேண்டும். 
உலகத்தில் இருக்கும் எந்த ஓர் அணியின் நிர்வாகமும் இழக்க விரும்பாத ஓர் அற்புதமான பந்துவீச்சாளர் நம் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின். தாம் வீசும் ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு விதமாக வீசும் திறமை பெற்றவர்.
என்ன காரணத்தினாலோ அவரை ஐந்து நாள் டெஸ்ட் போட்டி ஆட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்று அணி நிர்வாகம் தீர்மானித்திருப்பது வியப்பை அளிக்கிறது. ஒருநாள் 
மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்கு அஸ்வினுக்குத் தகுதி இல்லை என்று எந்த அடிப்படையில் அவர்கள் முடிவெடுத்தார்கள் என்பதும் நமக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் (20 ஓவர்கள்) போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார். 
ஒருநாள் ஆட்டங்களில் தமது பந்துவீச்சில் சராசரியாக ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்திருக்கும் அஸ்வின் நமது அணியின் நம்பகமான தூண்களில் ஒருவர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக விளையாடிவரும் அனுபவம் மிக்கவரான அவர், பிற இளம் வீரர்களை உற்சாகப்படுத்துவதுடன், அணித் தலைவருக்கும் பக்கபலமாக இருக்கக் கூடியவர். 
மேலும், அஸ்வின் போன்ற திறமையாளர்கள் விளையாடும்போது, எதிர் அணியினருக்கு உளவியல் ரீதியான அழுத்தம் ஏற்படும். இதனால், ஒவ்வொரு  ஆட்டத்திலும் நாம்  கூடுதலாக ஆதிக்கம் செலுத்தி வெற்றியை ஈட்டவும் அது வழி வகுக்கும். கோலி உள்ளிட்டவர்கள் இதைக் கருத்தில் கொள்ளாதது வியப்பைத் தருகிறது.
தோனிக்கு அடுத்தபடியாக சிறந்த விக்கெட் கீப்பராகவும்,  நம்பகமான பேட்ஸ்மேனாகவும் இருக்கும் தினேஷ் கார்த்திக்கையும் நமது அணியின் நிர்வாகம் சரியாக நடத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழக ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
நல்ல வேளையாக, இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தோனி விளையாட முடியாத சூழ்நிலையில் விக்கெட்கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார். பேட்டிங் திறமைக்காக பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. 
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்  அஸ்வின் இடம் பெறாத நிலையில், தினேஷ் கார்த்திக் மற்றும் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகிய இருவரும் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல உறுதுணையாய் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் போன்று, இந்த இருவரும் சிறப்பாக விளையாடி தமிழகத்
துக்குப் பெருமை சேர்க்கட்டும்.
தினேஷ் கார்த்திக்கும் விஜய் சங்கரும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி, கோப்பையை இந்திய அணி  வெல்ல வழிவகுக்க வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com