ஹாங்காங்: இந்தியப் பேரரசின் குரல் எங்கே?

அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன

அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. மக்கள் தன்னெழுச்சி கொண்டனர். அனைத்துத் தரப்பு மக்களும் அரசின் ஆள்தூக்கி சட்டத்துக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.
 சட்டத்தைக் கொண்டுவர இருக்கும் நாடாளுமன்றத்தை நோக்கி அந்த நாட்டின் சாலைகள் அனைத்திலும் மக்கள் கோபாவேசத்தோடும், குமுறலோடு எழுச்சி நடைபோட்டும், வீர முழக்கமிட்டும் வந்தனர். நள்ளிரவிலிருந்து கிராமம் கிராமமாக நகரம் நகரமாக ஆண்களும், பெண்களும், சிறியோர் முதியோர், மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் குழந்தைகளுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். துப்பாக்கி அணிவகுப்பு, ராணுவம் என பல்லாயிரக்கணக்கானோரை அரசு ஏவிவிட்டது. சாலைகளின் குறுக்கே தடுப்புச் சுவர்கள். குண்டு முழக்கங்கள், எச்சரிக்கைகள். மக்களின் எழுச்சிக்கு முன்னால் தூள்தூளாகின!
 அன்றைய காலை 11 மணிக்கு கூடவிருந்த நாடாளுமன்றத்துக்குள் மக்களின் பிரதிநிதிகள் நுழைய முடியவில்லை. நகரின் தொடர்புச் சாலைகள் அனைத்திலும் வெள்ளம்போல் மக்கள் திரண்டு கொந்தளித்தனர். பெரும் பெரும் நிறுவனங்கள்; தனியார் துறைகள்; கட்டடங்கள்; மரங்கள்; மதிற்சுவர்கள் அனைத்திலும் மக்கள் கொத்துக்கொத்தாக தேனடைபோல ஒட்டிக் கொண்டனர்.
 நள்ளிரவில் தொடங்கிய மக்களின் ஆவேசக் குமுறல்; எழுச்சிக் குரல்; பிற்பகல் 3 மணி வரை ஓயவில்லை. கை பிசைந்து நின்றனர் துப்பாக்கி ஏந்தியோர். பீரங்கி அணிவகுப்பினர். திடீர் தாக்குதல், தடியடி கண்ணீர்ப்புகை குண்டு. துப்பாக்கி மழை. கிஞ்சிற்றும் அஞ்சவில்லை மக்கள். அரிமாவாய்ச் சீறினர். மக்களின் அறவழிப்போர் போர்க்களமானது. மக்களின் கால்கள் உடைந்தன; மார்பில் குண்டுகள் பாய்ந்தன. குண்டாந்தடியால் எலும்புகள் முறிந்தன; ரத்த ஆறு ஓடியது. பிணங்கள் விழுந்தன. பெரும் கூச்சலால் நகரமே அதிர்ந்தது.
 மக்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு வீதியில் கும்பல் கும்பலாக குவிந்தனர். அதிகார வர்க்கத்தின் மிரட்டல், உருட்டல். பஞ்சு பொதிகளைப் போல சடுதியில் கருகி சாம்பலாயின. "மக்களுக்கு எதிரான சட்டத்தை இப்போது கொண்டு வரமாட்டோம், ஒத்திவைக்கிறோம்' என திமிர்பிடித்த அரசு கொஞ்சம் இறங்கி வந்ததைப்போல நடந்தது; நாடகம் போட்டது. மக்களை ஏமாளிகளாக்க திட்டமிட்டது.
 சட்டத்தை திரும்பப் பெறும்வரை ஓர் அங்குலம்கூட நகர மாட்டோம்; இங்கேயே சமாதியாகத் தயார்' எனச் சூளுரைத்து நின்றனர் போராட்டக்காரர்கள். இதெல்லாம் எங்கே நடந்தது தெரியுமா? சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள "ஹாங்காங்' நாட்டில்தான்.
 கடந்த ஜூன் 8-ஆம் தேதி நடந்த இந்த எழுச்சிமிக்க போராட்டத்துக்குக் காரணம் என்ன? அந்த நாட்டு மக்களின் சுய மரியாதைக்கு சவால்; நாயினும் கேடாக நடத்த சீனா முற்பட்டது. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான புதிய வரைவுச் சட்டத்தை அந்த நகர அரசு உருவாக்கியது. இந்த ஆள் தூக்கிச் சட்டத்தை நிறைவேற்றிடத்தான் நாடாளுமன்றம் கூடியது. அதை தூள் தூளாக்கத்தான் மக்கள் வெகுண்டெழுந்தனர்.
 இந்த வரைவுச் சட்டத்தின் பிறப்பிடம் சீனா. சீனாவால் அடிமை நாடாக ஆக்கி வைக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்கள் கொதித்தெழுந்தது உரிமையைக் காத்திடும் உணர்வுப் போர்.
 தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் எவராக இருந்தாலும் அந்தக் கொடுமைக்கு கொதித்தெழத் தெரியாத இனம் இருந்தால் என்ன, கூண்டோடு அழிந்தால் என்ன என்பதை ஹாங்காங் மக்கள் நிரூபித்திருக்கின்றனர். தன்மானம், சுயமரியாதை, மனித நேயம் கேள்விக்குறியாக மாறும்போது உணர்ச்சியுள்ள மனிதன் அமைதியாக இருக்கமாட்டான்; அதைத்தான் ஹாங்காங் மனிதன் செய்து காட்டியிருக்கிறான்.
 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை பிரிட்டன் ஒப்படைத்தபோது உலக நாடுகள் என்ன செய்தன? ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு விற்றதை உலக ஜனநாயகம் ஏற்றுக் கொண்டது எப்படி? இதுவரை யாரேனும் கேட்டதுண்டா? ஹாங்காங்கில் நீதித் துறையின் மீது கை வைக்கின்ற ஈனச் செயலை அல்லவா சீனா செய்ய முன்வந்திருக்கிறது?
 சீனாவின் ஆட்சிமுறை, நிர்வாக முறை, சர்வாதிகார வெறியாட்டம் ஆகியவற்றை ஹாங்காங்கில் அமல்படுத்த முடியாது. ஹாங்காங் தனியாக அரசியல் சட்டம் வகுத்துக் கொண்டுள்ளது. உரிமை, சுதந்திரம், தனியாக இருக்கிறது. நீதித் துறை, சுதந்திரம் அரசியல் நிர்வாகம் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் சீனா தலையிடுவது எந்த வகையில் நியாயம்? ஹாங்காங் நாட்டுக்கு 2017-ஆம் ஆண்டு வருகை தந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடியபோது வல்லரசு சீனா, மக்களின் சுதந்திர உணர்வை மதிக்கத் தவறிவிட்டது.
 சீன ஆதரவாளர்கள், சுதந்திர ஆதரவாளர்கள் என ஹாங்காங் மக்கள் பிரிந்து நிற்கின்றனர். இதில், சீன ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவான எட்டப்பர்கள். தன்னெழுச்சியாக உரிமைக்காகப் போராடும் அப்பாவி மக்கள் மீது சீனப் பேரரசு துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பதை ஐ.நா. உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்திட முன்வராதது ஏன்? கம்யூனிசவாதிகளே விளக்கம் கூறுங்கள்.
 சீனா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இந்த ஆள் கடத்தல் மசோதாவை ஹாங்காங் மக்கள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஹாங்காங்கின் பெண் நிர்வாகியான கேரி லாம் . சீனா சொல்வதை அப்படியே செய்வதற்காக நியமிக்கப்பட்ட கைப்பாவை அவர்.
 மசோதா திரும்பப் பெறப்படும் என அவர் அறிவித்திருப்பதை ஹாங்காங் மக்கள் நம்பத் தயாராக இல்லை. "மசோதாவை நிரந்தரமாக கைவிட வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக போலீசையும், ராணுவத்தையும் ஏவி தாக்குதல் நடத்தியதற்காக, தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும்' என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து "இந்தப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கும், மக்களின் பிரச்னைகளுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இந்த விஷயத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்வேன்' என கேரி லாம் கூறியிருந்தார். மக்களின் ஒற்றுமை எப்படிப்பட்ட அதிகாரத் திமிரை சுக்குநூறாக உடைத்தெறியும் என்பதை ஹாங்காங் எழுச்சி உலகுக்கு உணர்த்துகிறது.
 இதற்கிடையில் 2014-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் ஜோஷுவா வோங்கை விடுதலை செய்துள்ளது ஹாங்காங் தலைமை நிர்வாகம். மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள பொம்மை அரசின் சூழ்ச்சியை போராட்டக் களத்தில் நிற்கும் மக்கள் உணராமல் இல்லை. மாணவர் இயக்கத் தலைவராக வோங்க் செயல்பட்டு வந்தவர்.
 இப்போது வேறு வழி தெரியாமல் அவரை அரசு நிர்வாகம் விடுதலை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 விடுதலையான வோங்க், "நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்துப் போரில் குதிப்பேன். அரசியல் ரீதியாக பழிவாங்க கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவை முற்றிலும் திரும்பப்பெறுவதோடு, இனி எக்காலத்திலும் இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவர மாட்டோம் என்ற உத்தரவாதம் பிரகடனம் செய்யப்படும் வரை மக்களின் எழுச்சி தொடரும்' என்று அறிவித்துள்ளார்.
 உரிமையைக் காக்கவும், தன்மானத்தை இழக்காமல் இருக்கவும் உயிரைப் பணயமாக வைத்துப் போராடும் மக்களின் எழுச்சித் தீயில் எண்ணெயை சீனா ஊற்றிக் கொண்டிருக்கிறது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள சீனாவின் திமிர் பிடித்த தலைமை, "ஹாங்காங்கில் நடைபெற்று வருவது அமைதிப் போராட்டமல்ல; திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை' என்று கூறியதால் கனன்று கொண்டிருந்த தீயை கிளறிவிட்டிருக்கிறது.
 "நீங்கள் (சீனா) வல்லரசாக இருக்கலாம்; ஆனால் நல்லரசு என்று நாட்டு மக்கள் உணரத்தக்க வகையில் ஒவ்வொரு அடியையும் அளந்தே எடுத்து வையுங்கள். ஆணவமும் அகங்காரமும் உங்களையே சுட்டு சாம்பலாக்கிவிடும்'.
 ஓயாத மக்கள்; முடியாத போராட்டம்; விடியாத இரவுகள் என கடந்த 10 வாரங்களாக ஹாங்காங் மக்கள் களத்தில் நிற்பது உலக சாதனை. இதில் ஜனநாயகத்தின் உச்சமாகத் திகழும் இந்தியப் பேரரசின் குரல் எங்கே என்ற கேள்வியும் உலக அரங்கில் எழ வாய்ப்புள்ளது.
 கட்டுரையாளர்:
 தலைவர், இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com