பெண்களும் பொருளாதாரமும்

பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்பு நம் தேசத்தின் சிறப்பு. திரைப்படப் பாடல் ஒன்று உண்டு. 

பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்பு நம் தேசத்தின் சிறப்பு. திரைப்படப் பாடல் ஒன்று உண்டு. 
சேர்த்த பணத்தை சிக்கனமா, 
செலவு செய்ய பக்குவமா
அம்மா கையில கொடுத்துபோடு
சின்னகண்ணு அவங்க ஆறை நூறு
ஆக்குவாங்க செல்லகண்ணு...
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோன்று, சங்க இலக்கியம் பல நுட்பமான தகவல்களை நமக்குத் தருகிறது. சமூகத்தில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பும் நிலையும் என்னவாக இருந்தது என்பதற்கும் விடை தருகிறது சங்க இலக்கியம்.
தமிழர் நாகரிகம் பெண்களுக்குத் தந்த இடம் என்ன என்பதைத் தெளிவாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறது பெருஞ்சித்திரனாரின் கவிதை ஒன்று. குமணன் என்னும் மன்னனிடம் பாடிப் பரிசில் பெற்று யானை மீது தாம் பெற்ற பரிசுகளோடு வீடு வந்து சேர்கிறார் புலவர். தாம் ஏற்றுக்கொண்ட செல்வத்தை தன் மனைவியிடம் தந்து, இதைச் செலவு செய்வது பற்றி என்னோடு நீ கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கூறுகிறார் பெருஞ்சித்திரனார். என்னொடும் சூழாது என்று அவர் கூறும் அந்த ஒற்றைச் சொல், பொருளாதார விஷயங்களில் பெண் கொண்டிருந்த பொறுப்பை, தலைமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
பண்டைக்காலம் தொட்டே பெண்களை குடும்பத்தின் ஆணிவேராக, தலைமையாகக் கொண்டு செயல்படும் தேசம் இந்தியா. ஆண் பொருளீட்டுவதற்காகக் கடல் கடந்து சென்று உழைக்கிறான். அதே நேரத்தில் அப்படிச் சம்பாதிக்கப்பட்ட பொருளைச் செலவு செய்வதற்கு அல்லது பாதுகாப்பதற்கு, அவற்றைப் பன்மடங்காகப் பெருக்குவதற்கான பொறுப்பு பெண்கள் கையில் தரப்பட்டிருக்கிறது.
இந்த அடிப்படை அமைப்புதான் அடித்தளமாக இருந்து உலகப் போர்கள், பல படையெடுப்புகள், அந்நிய ஆதிக்கம், பேரிடர்கள், பெரும்பஞ்சம், உலகமயமாக்கல் தத்துவம் என்று எத்தனை இடர்கள் வந்தபோதும் நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவானதாகக் காப்பாற்றுகிறது.
இந்தியா குடும்ப அமைப்பை நம்பும் நாடு. ஆசிய நாடுகள் அனைத்திலுமே குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தைக் காண முடியும். நாட்டின் பொருளாதாரத்தை இந்தக் குடும்ப அமைப்புதான் தீர்மானிக்கிறது என்றால், அது மிகையாகாது. மேலைநாடுகளில் பொருளாதாரம் என்பதற்கான வரையறைகளை ஆசிய நாடுகளில் அல்லது இந்தியாவில் அப்படியே பொருத்திப் பார்த்தல் என்பது சரியானது அல்ல.
ஏனெனில், நமது பொருளாதார அமைப்பு சற்றே மாறுபட்டது. உழைப்பு, ஊதியம், முதலீடு, உற்பத்திப் பெருக்கம், சேவைகள்-இவைதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. இவை உயரும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். 
செலவு செய்வதற்கான ஆற்றல் என்பதைப் பொருளாதாரத்தின் அடிப்படையாக மேலைநாடுகள் கருதும் நிலையில் சேமிப்பு என்பதும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் கையாள்வதற்கான திறம், இந்தியப் பெண்களிடம் இயல்பாகவே இருக்கிறது. உழைப்பின் அடிப்படையிலேயே பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என்பதை மட்டுமே மேலைநாடுகள் கருத்தில் கொண்டுள்ளன. உழைப்புடன் சிக்கனம், சேமிப்பு ஆகியவை பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியம் என்னும் ஞானத்தை இந்தியப் பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
மேலைநாடுகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள மேன்மேலும், கடன் பெற்று செலவு செய்யும் பொருளாதார நிலையைக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் சிக்கனம், அதன் வழியே சேமிப்பு, சேமிப்பைக் கொண்டு சொத்துகளை அதிகரிப்பதும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதும் என்னும் வழிமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வழிமுறைகளைச் செவ்வனே அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒப்பற்ற செயலை கல்வி, பொருளாதாரம், கலாசாரம் என்ற எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து இந்தியப் பெண்களும் மேற்கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை எந்த நிலையிலும் சரிந்துவிடாமல் காத்து வருகிறார்கள் என்பதே உண்மை. 
மேற்கத்திய பொருளாதார ஆய்வுகள், பெண்களின் உழைப்பும் சமமாக இருக்கும்போது மட்டுமே ஒரு தேசம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய முடியும் என்கின்றன. இத்தகைய மேலைநாட்டு ஆய்வுகள் தரும் புள்ளிவிவரங்களில் உலக அளவில் சராசரியாக 40 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைக்குச் சென்று சம்பாதிப்பதாகக் கூறுகிறது.
அதே நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீத பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கே ஒரு நுட்பத்தை நாம் காண வேண்டியது அவசியம். 24 சதவீத பெண்கள் முறையான ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் அவ்வளவே. மற்ற பெண்கள் முறையான ஊதியம் பெறவில்லை என்றபோதிலும், அவர்களும் தங்களது உழைப்பைப் பல்வேறு வகைகளில் வழங்குகின்றனர்.
அதாவது தினக்கூலியாக, விவசாயம் போன்று உழைப்பை சமமாகச் செலுத்தும் தளங்களில் பெண்கள் இருக்கிறார்கள். மிக எளிய முறையில் இதற்கு நாம் உதாரணங்களை அடுக்க முடியும்.
கிராமத்தில் குடிசை வீட்டில் வாழும் ஒரு பெண், தன் வீட்டைச் சுற்றிலும் கீரையோ அல்லது சில காய்கறிகளையோ போகிற போக்கில் பயிரிட்டு, அவற்றை அக்கம்பக்கத்தில் விற்று அந்தப் பணத்தைச் சேமிப்பாக மாற்றுகிறார்.
நகர்ப்புறங்களில் உணவு சமைத்து விற்பது போன்ற சிறுசிறு பணிகளைப் பெண்கள் தங்கள் குடும்பப் பொறுப்போடுகூட எளிதாகச் செய்து முடித்துப் பொருள் ஈட்டுகிறார்கள். அப்படி இவர்கள் சம்பாதிக்கும் பணம் ஒரு குடும்பத்தின் சேமிப்பாக அல்லது குழந்தைகளின் கல்விக்கான செலவினமாக, வீடு, மனை போன்ற சொத்துக்களாக மறு வடிவம் கொள்கின்றன.
சில நேரங்களில் பெண்களின் இந்தச் சேமிப்பு, குடும்பத்தின் தொழிலுக்கான மூலதனமாகவும் பயன்படுத்தப்பட்டு தனிமனித முன்னேற்றம் குடும்ப முன்னேற்றம் என்பதோடு மட்டுமல்லாது சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக அமைகிறது.
நிர்வாகத் திறமையை இயல்பிலேயே கொண்டுள்ள ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தின் முன்னேற்றத்தில் காட்டும் அக்கறை, ஒட்டுமொத்தமாக தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதை மறுக்க இயலாது.
முறைசாரா தொழில் மற்றும் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பெண்களின் உழைப்பு, முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுமேயானால், இந்தியப் பெண்களின் ஒட்டுமொத்த உழைப்பு தேசத்தின் ஜிடிபியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கென அரசும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் உழைப்பு முறைப்படுத்தப்படுகிறது. பெண் தொழில்முனைவோர் உருவாவதற்கு எனப் பெண்களுக்கான அமைச்சகம் பல திட்டங்களையும் கடனுதவிகளையும் வழங்கி வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.
என்றபோதிலும், இந்த முயற்சிகள் தேசத்தின் மக்கள் தொகையில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மை.
பெண்களின் உழைப்புக்கு மேலும் அங்கீகாரம் வழங்குவதற்கான முயற்சிகள், திட்டங்கள் தேவை. அவற்றை துரிதமாக அரசு ஏற்படுத்தித் தர முன்வருமேயானால் பொருளாதாரத்திலும் மிகத் துரிதமான வளர்ச்சியை வெகு சில காலத்திலேயே அடைந்துவிட முடியும்.
முறையான ஊதியம் பெறும் பணிகளுக்கு அவர்கள் திரும்பும் பட்சத்தில் இந்தியப் பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் உலக அளவில் ஆறாவது இடத்துக்கு முன்னேறக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு நாம் சிலவற்றை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பணியிடத்தில் பிரச்னை, பாதுகாப்பற்ற சூழல், குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சிக்கல், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை, மிகக் குறைந்த சம்பளம்-இப்படிப் பல பிரச்னைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
இத்தகைய பிரச்னைகள் எல்லாம் களையப்படாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அடிப்படைக் கல்வி, உயர் கல்வி, வேலைக்குச் செல்லுதல் இந்த மூன்று நிலைகளிலும் உள்ள இடைவெளியைக் குறைத்தாக வேண்டும். அதே போன்று ஆண்-பெண் என்ற பாகுபாடும் இந்த மூன்று நிலைகளிலும் களையப்பட வேண்டும். சமமான வேலைவாய்ப்புகள் மற்றும் உரிமைகள் இரு பாலருக்கும் வழங்கப்பட வேண்டும். 
எதனையும் நிர்வகிக்கவும் எடுத்துக்கொண்ட பொறுப்பை செவ்வனே செய்து முடிக்கவும் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ள இந்தியப் பெண்களுக்கு, அவர்கள் பணியாற்றுவதற்கான துறை சார்ந்த அறிவு வழங்கப்படுமானால் அது துறைதோறும் தனித்துவம் கொண்ட பெண்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.
தற்போது நல்ல நிலையில் பணியில் இருக்கும் பெண்கள் பற்றிய ஆய்வுகளும் நேர்மறையான நம்பிக்கையை நமக்குத் தருகின்றன. ஆண்களைவிட பெண்கள் தங்கள் வருமானத்தைத் திட்டமிட்டு முதலீடு செய்கிறார்கள் என்றும் இதன் காரணமாக வருமான வரி விலக்குப் பெறுவதிலும் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களையும் கருத்தில் கொண்டு அவர்களின் உழைப்பையும் உள்ளடக்கிய பார்வை, அணுகுமுறை மட்டுமே நாட்டின் வளர்ச்சிப் பாதையாக அமைய முடியும். உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தனிப்பெரும் இடத்தை அடைவது தேசத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் பொருளாதார முக்கியத்துவத்தைப் பொருத்தே அமையும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com