சாலையோரச் சவால்கள்!

இப்போதெல்லாம் சாலையில் நடப்பது என்பது பாதுகாப்பானதாக இல்லை. அந்த அளவுக்கு சாலையின் இரு புறங்களிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள். பாதசாரிகள் பயன்படுத்த வேண்டிய நடைபாதைகளை

இப்போதெல்லாம் சாலையில் நடப்பது என்பது பாதுகாப்பானதாக இல்லை. அந்த அளவுக்கு சாலையின் இரு புறங்களிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள். பாதசாரிகள் பயன்படுத்த வேண்டிய நடைபாதைகளை இரு சக்கர வாகனங்கள், சிறு கடை வியாபாரிகள், ஆட்டோக்கள், மின் இணைப்புப் பெட்டிகள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்துக் கொண்டு பல்வேறு விதமான சாலை விபத்துகளுக்கும், உயிர்ப் பலிகளுக்கும் காரணமாகி வருகின்றன.
 சாலை நடைபாதைகள் இன்று வாகனங்கள் நிறுத்துமிடங்களாகி விட்டன. தெருக்களின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் நெடுஞ்சாலைகள் ஒற்றையடிப் பாதைகளாகச் சுருங்கி விட்டன. சாலைகளில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
 அரசியல் கட்சிகளின் கூட்டமாகட்டும், விழாவாகட்டும், மண்டபங்களில் நடத்தப்படும் திருமண விழா, பிறந்த நாள் விழா, காது குத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்களாகட்டும், திருக்கோயில்களில் இறைவனுக்கு நடத்தப்படும் பூஜைகளின் போதும் சாலைகளின் இரு மருங்கிலும் ஃப்ளக்ஸ் பேனர்களையும், கண்ணைக் கவரும் விளம்பரப் பதாகைகளையும் வைத்துச் சாலைகளை ஆக்கிரமித்து, ஏற்கெனவே வந்து போக சிரமமாகவுள்ள சாலைகளில் மேலும் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிரமம் கொடுத்து வருகின்றனர். இதனால், பெருநகரின் சாலைகள் வாகனங்களின் நெரிசல்களால் சிக்கித் தவிக்கின்றன.
 பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம் என்றாலும், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வதும் முக்கியக் காரணம்; பல விபத்துகளுக்கு சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும், விளம்பரப் பதாகைகளும், நடைபாதைக் கடைகளும்தான் காரணம். சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை நெறிபடுத்துவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்கின்றனர் போக்குவரத்துக் காவலர்கள்.
 கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை கடைக்கு முன்பாக நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக சாலை ஓரங்களை இந்த வாகனங்கள் ஆக்கிரமிப்புச் செய்து விடுகின்றன. சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைக்குச் செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடையூறு இல்லாமல் வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும்.
 சாலையோரப் பகுதிகளில் ஏற்கெனவே வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதால், பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்க முடியாத நிலைக்கு பேருந்து ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். பேருந்து நிற்பதால், அதற்கு பின் வரும் மற்ற வாகனங்கள் வேறு வழியில்லாமல் அதன் பின் நிறுத்தப்படுகின்றன. இப்படி தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. மேலும், பேருந்துகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து தள்ளி நிறுத்தப்படுவதால் அப்பேருந்தில் ஏற வேண்டிய பொது மக்கள் ஓடிச் சென்று ஏற முயற்சிப்பதாலும், இறங்க வேண்டிய பயணிகளும் அவசர அவசரமாக இறங்குவதாலும் பெரும் விபத்துகளைச் சந்திக்கின்றனர். குறுகலான சாலைப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்துக் காவலர்கள் அனுமதிக்கக் கூடாது.
 முக்கியப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடங்களை முறைப்படுத்த மாநகராட்சிகள் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டின் சில மாநகராட்சிகளில் வாகனங்களை சாலையின் இரண்டு புறங்களிலும் நிறுத்த தடை உள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் யாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலையில், தெருவில் நிறுத்தினால் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் ஓரத்தில் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,682 இரு சக்கர வாகனங்கள், 90 ஆட்டோக்கள், 103 கார்கள் என மொத்தம் 7,875 வாகனங்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இந்தத் தொகையில் காவல் துறை சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு ரூ.1.60 கோடியை மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும், 1,510 இரு சக்கர வாகனங்கள், 51 ஆட்டோக்கள், 13 கார்கள் என மொத்தம் 1,574 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விரைவில் ஏலம் விடத் தயாராக இருக்கின்றன.
 இது தவிர, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை இன்னும் 15 நாள்களுக்குள் உரிமை கோரவில்லை என்றால் அவை ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்நடவடிக்கையை பொதுமக்கள் பெருமளவில் பாராட்டுகின்றனர். இவ்வாறு சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தினால் நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண முடியும்.
 சாலை விபத்துகளைத் தடுக்க காவல் துறை, நெடுஞ்சாலை துறை மாநகராட்சிகள் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களும் பொறுப்பினை உணர்ந்து, சாலை விதிகளை மதித்து, மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் வாகனங்களை நிறுத்தி விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com