சிறைச்சாலையை நூலகமாக்கிய...

பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் உலகத் தலைவர்கள் பலரின் சிறைக் குறிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் திகழ்கிறது.


பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் உலகத் தலைவர்கள் பலரின் சிறைக் குறிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் திகழ்கிறது. அதில் நாட்குறிப்பு போல அவரது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோ, அவரது சிந்தனைகளோ, அனுபவங்களோ பதிவு செய்யப்படவில்லை. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக அவருக்குக் கிடைத்த சில மாதங்களில் அவர் வாசித்த நூல்கள் தொடர்பாகவும், அந்த நூலில் அவருக்குப் பிடித்த வரிகள், வாக்கியங்கள் குறித்த பதிவாகவுமே அவரது குறிப்புகள் உள்ளன.
எழுத்தாளர் பூபேந்திர ஹூஜா 1994-ஆம் ஆண்டு முதன்முதலில் பகத் சிங் சிறைக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இந்தியாவில் பேசப்படுவதற்கு முன்பே 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட லெனினும் இந்தியாவும் என்ற நூலில், பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் குறித்து சோவியத் அறிஞர் எல்.வி.மித்ரோகின் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த நூலுக்கு முன்னோட்டமாக 1971-ஆம் ஆண்டு எல்.வி. மித்ரோகின் எழுதிய பகத்சிங் படித்த நூல்கள் என்ற கட்டுரையும் அதே ஆண்டில் மற்றுமொரு சோவியத் அறிஞரான ஏ.வி. ராய்கோவ் எழுதிய பகத்சிங்கும் அவரது தத்துவார்த்த மரபும் என்ற கட்டுரையும் விளங்குகின்றன. இவையனைத்தும் பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் பற்றியான தொடக்க கால ஆய்வுகளாகும்.
இந்தச் சிறைக் குறிப்புகளை வரி தவறாமல்  வாசித்தால் பகத் சிங் தனது இளம் வயதிலேயே எத்தகைய அறிவுத் தாகத்துடன் விளங்கியுள்ளார் என்பதையும், எந்தெந்த நூல்களையெல்லாம் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாசித்தார் என்பதையும் , அவ்வாறு வாசித்த நூல்களில் எந்தெந்த வரிகள் இவரின் கவனத்தை ஈர்த்துள்ளன என்பதையும் அறியலாம். மேலும் தனி  மனிதன், குடும்பம், நாடு, சமூகம், இலக்கியம், தத்துவம், அறிவியல் முதலிய துறைகள் சார்ந்து பகத்சிங்  விரிவாகவும் ஆழமாகவும் அவர் வாசித்துள்ளார் என்பதையும்  அறிந்துகொள்ள முடிகிறது. விடுதலைக்காகப் போராடு என்ற தலைப்பிலான ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேட்ஸ்வொர்த் கவிதையையும் படைவரிசை என்ற டென்னிஸன் எழுதிய நீண்ட கவிதையையும் இன்னும் இதுபோன்ற உலக அளவிலான கவிஞர்களின் தனிச் சிறப்புமிக்க கவிதை வரிகள் பலவற்றையும் இந்தக் குறிப்பேட்டில் கவிதை வடிவிலேயே பதிவு செய்துள்ளார் பகத் சிங்.
பல்வேறு நூல்களிலிருந்தும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்தும் பல புள்ளிவிவரங்களைச் சேகரித்து அவற்றையும் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள 31 கோடியே 50 லட்சம் மக்களில், 22 கோடியே 60 லட்சம் பேர் மண்ணை நம்பி வாழ்கின்றனர். அவர்களில் 20 கோடியே 80 லட்சம் பேர் நேரிடையாக வேளாண்மையைச் சார்ந்துள்ளனர்  என்ற மாண்ட் ஃபோர்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் இந்தியா பற்றி மட்டுமல்லாமல் பல நாடுகள் பற்றிய பல புள்ளிவிவரங்களும் இக்குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ளன.
உலக அளவிலான பல துறைகள் சார்ந்த ஆளுமைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்களின் தனித்துவம் பற்றியும் சமூக மேம்பாட்டிற்கான அவர்களது பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக எழுதி வைத்துள்ளார்.  தாமஸ் பெய்னி (1737 - 1809):- அமெரிக்க எழுத்தாளர்- அமெரிக்க விடுதலைப் போரிலும் பிரெஞ்சுப் புரட்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டவர்;  பேட்ரிக் ஹென்றி (1736 - 1790):-அமெரிக்க  அரசியல்வாதி - பேச்சாளர் - சட்டப்பேரவை உறுப்பினர்; அப்டன் சிங்க்ளேர் (1878 - 1968):- புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்-நாடக ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி;  ரிச்சர்டு ஜேஃப்பரிஸ் (1848 -1887):- ஆங்கிலேய இயற்கையியலாளர் மற்றும் நாவலாசிரியர்; வி.என்.ஃபிக்னர் (1852-1942):- ரஷியப் புரட்சியாளர் மற்றும் உயிர்த்தியாகி-ஜாரிசத்திற்கு எதிராக முதலில் போர் தொடுத்த பெண்களுள் ஒருவர்-இவரது நினைவுக் குறிப்புகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  இப்படி பல எழுத்தாளர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிக் குறிப்புகளை அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார் பகத் சிங்.
கனவான்களும் கயவர்களும் இருக்கும் வரையிலும், பொருள்கள் பொதுவாக இல்லாத வரையிலும், இங்கிலாந்தில் மக்களும் பொருள்களும் நல்லபடியாக இருக்க இயலாது. பிரபுக்கள் என நாம் அழைப்பவர்கள் எந்த உரிமையால் நம்மைவிட உயர்ந்தவர்களானார்கள்? எந்த அடிப்படையில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்? நம்மை ஏன் அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? நாமெல்லாம் ஆதாம் மற்றும் ஏவாள் என்னும் ஒரே தாய்-தந்தையர் வழியில் வந்தவர்கள் என்றால், நம்மைவிட உயர்ந்தவர்கள் அல்லது மேலானவர்கள் என எவ்வாறு அவர்களைக் கூற முடியும்?  நம் உழைப்பால் வரும் பலனை அவர்கள் கர்வத்துடன் செலவிடுகின்றனர். நாம் கந்தை உடுத்தியிருக்க, அவர்களோ வெல்வெட்டும் கம்பளியும் அணிந்து வெதுவெதுப்பாயிருக்கின்றனர் என்ற வாட் டெய்லர் எழுதிய நூலிலுள்ள வரிகளை அப்படியே தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் பகத் சிங்.
 சர் ஹென்றி மெய்ன்  கூறியிருப்பது என்று தலைப்பிட்டு இங்கிலாந்தின் பெரும் பகுதி நிலம் வழக்குரைஞர்களின் தவறினால் தற்போதைய உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. சாதாரண குற்றவாளிகளிடம் இந்தத் தவறு காணப்பட்டால் தூக்கிலிடப்படுவார்கள். 
மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டு விடுகிறது என்ற வரிகளைப் பதிவு செய்துள்ளார்.
கார்லைல் எழுதிய பெரியவனாகவும், புத்திசாலியாகவும், நல்லவனாகவும், காலம் வேண்டுவதைக் கண்டுகொள்ளக்கூடிய அறிவும் சரியான பாதையில் அதனை நடத்திச் செல்லும் தீரமும் கொண்டவனாகவும் கண்டுபிடித்துவிட்டால் போதும். எந்தக் காலகட்டத்தையும் மீட்கக் கூடியவை இவையே என்ற வரிகளைப் பதிவு செய்து, அதற்கு தலைவர் என்ற தலைப்பையும் சூட்டியுள்ளார் பகத் சிங்.
வறுமையின் கைதிகளே எழுக! வாடி உலர்ந்தவர்களே...நீதி கொட்டி முழங்குகிறது...புத்துலகம் பிறக்கிறது என்று தொடங்குகிறது 1871- இல் பிரான்ஸில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டு பின்னர் உலக அளவில் பரவலாகப் பாடப்பட்டு வரும் சர்வதேச புரட்சி கீதம்.
மண்ணின் மைந்தர்களே விழித்தெழுங்கள் என்ற முதல் வரியைக் கொண்டது பிரான்ஸ் நாட்டு தேசிய கீதம். இந்தப் பாடல்களையெல்லாம் அப்படியே குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் பகத் சிங்.
பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் சிந்தனைகளையும் படித்துத் தன் இதயத்தில் பதியவைத்துக் கொண்டதோடு குறிப்பேட்டிலும் பதிவு செய்யும் அளவுக்கு அறிவுத் தேடலில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பகத்சிங் எத்தனை நூல்களை, எத்தகைய நூல்களை அந்த இளம் வயதில் வாசித்திருப்பார் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பு  மேலிடுகிறது.
இப்போது கிடைப்பதுபோல் அப்போது அத்தகைய அரிய நூல்கள் எளிதில் கிடைக்காத காலம். அவ்வாறு கிடைத்தாலும் அந்த நூல்களை சிறைக்குள்ளிருந்தவாறு, அதுவும் எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பழைமைச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைத் தருவித்துப் படிப்பதென்றால் கட்டுக்கடங்காத ஆர்வமும் சமூகப் பொறுப்புணர்வும் அதற்குரிய வலுவான அடிப்படையும் பக்குவமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு லாகூர் சிறையிலிருந்து தனது நீண்டகால நண்பர் ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். துவாரகாநாத் நூலகத்தில் எனது பெயரைச் சொல்லிக் கீழ்க்கண்ட புத்தகங்களை சனிக்கிழமையன்று குல்பீர் கையில் கொடுத்தனுப்பவும். கார்ல் லிப்க்னேகத் எழுதிய ராணுவ உணர்வு, பி.ரúஸல் எழுதிய ஐவர் சண்டை, பணியில் சோவியத், இரண்டாம் அகில அழிவு, இடதுசாரிப் பொதுவுடைமை, இளவரசர் குரோபாட்கின் எழுதிய பரஸ்பர விளம்பரம், கார்ல் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு யுத்தம்,  நிலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகள், ஆசியாவில் நிலப்புரட்சி, அப்டன் சிங்க்ளேர் எழுதிய ஒற்றன் என்று 10 புத்தகங்களைப் பட்டியலிட்டதோடு பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து புக்காரின் எழுதிய வரலாற்று உலகாயுதம் என்ற நூலையும் வாங்கியனுப்ப முயற்சி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போர்ஸ்டல் சிறைக்குச் சில புத்தகங்களை அனுப்பினாரா, இல்லையா என நூலகரிடம் விசாரிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அங்குள்ளவர்கள் புத்தகப் பஞ்சத்தால் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு சுகதேவின் சகோதரர் ஜெயதேவ் மூலமாகப் புத்தகங்களின் பட்டியல் அனுப்பியிருந்தும் இதுவரை அவர்களுக்கு எந்தப் புத்தகமும் சென்று சேரவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் வாசிப்பதோடல்லாமல் தன்னுடைய சக தோழர்கள் அனைவரும் வாசிப்பதற்கு வழிவகுத்தவர் பகத் சிங்.
ஆழமாக வாசிப்பவர்கள் பெரும்பாலும் துடிப்பாகச் செயல்பட முடிவதில்லை. ஓயாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பவர்களில் பலர், வாசிப்பிற்கு நேரம் ஒதுக்குவதில்லை. வாசிப்புப் பழக்கம் உள்ள பலருக்கு சுய சிந்தனை ஊற்றெடுப்பதில்லை. வாசிப்பு, எழுத்து, செயல், சுயசிந்தனை, சமூக உணர்வு, தியாக மனப்பான்மை  ஆகிய அனைத்து அம்சங்களும் 23 வயது பகத் சிங்குக்கு ஒருங்கே அமையப் பெற்றது அரிதினும் அரிதானதாகும்.

கட்டுரையாளர் : 
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
இன்று பகத் சிங் 88-ஆவது நினைவு நாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com