இரவல் சின்னமும் விழுங்கும் திமிங்கிலங்களும்!

படித்தவர்களும் படிக்காதவர்களும் எளிதில் வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது.


படித்தவர்களும் படிக்காதவர்களும் எளிதில் வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. இந்தச் சின்னங்கள் பிரசாரத்தின்போதும் வாக்குச் சீட்டுகளில் அல்லது வாக்கு இயந்திரங்களிலும்  வாக்காளர்களால் அடையாளம் காணப்பட்டு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க உதவும்.
கடந்த தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்கள் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில அங்கீகாரத்தை அவற்றுக்கு தேர்தல் ஆணையம் வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கிடைக்கும் பல உரிமைகளில் முக்கியமானது தேர்தல் சின்னமாகும். இன்றைக்கு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக பா.ஜ.க., காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய ஏழு கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகளாகும்.
இந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள், நாட்டின் பிற கட்சிகளுக்கு பொதுவாக ஒதுக்கப்படுவதில்லை. சின்னங்களின் முக்கியத்துவம் குறித்துச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் உதயமான கட்சி ஒன்று, ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்காக நீதிமன்றத்தில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் கடைசி நாளன்றுதான், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் சின்னத்தை காலதாமதமாக ஒதுக்குவதால், பிரசாரத்துக்கு குறுகிய காலமே கிடைத்து அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, குறிப்பிட்ட சின்னம் உடைய கட்சிகளுக்கு இணையாக அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களையும் மதித்து காலதாமதம் இன்றி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குவது அவசியம். ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவராக  அறியப்பட்டவர்கள் தாங்கள் இடம்பெறும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும், பெரிய கட்சி மற்றும் சிறிய கட்சிகளைத் தமது சின்னத்தில் போட்டியிட நிர்பந்திப்பதும் வெளிப்படையாக அரங்கேறி வருகிற சட்டவிரோதச் செயலாகும்.
பிற கட்சி சின்னத்தில் போட்டியிடுவது பகிரங்கமாக சட்டத்தை மீறும் செயலாக இருந்தபோதும் அந்த நடைமுறை தொடர்ந்து வருவது சட்டத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவே இருக்கிறது. பிற கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பெரும் ஆளுமைகள் நடத்திய இயக்கங்கள் அடிச்சுவடு இல்லாமல் அழிந்துபோன வரலாறும் நம் முன்னால் உள்ளது.
இரு முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி  தலைவராகவும் இருந்தார்.  அவருடன் இந்தக் கட்சியும் மறைந்து விட்டது. இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடி என்று சிலர் கூறுவது மட்டும் தொடர்கிறது. நாட்டின் முதன்மை தினசரியாகக் கருதப்பட்ட ஊடக நிறுவனத்தின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் உருவாக்கி வழி நடத்திய "நாம் தமிழர்' கட்சியும் அவருடன் மறைந்து விட்டது.  அவர் நிறுவிய ஊடக நிறுவனம் மட்டும் பல பரிமாணங்களுடன் விரிவடைந்து செயல்பட்டு வருகிறது. தமிழர் உரிமைகளுக்காக பல களங்கள் கண்ட ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் இன்று அரசியல் வரைபடத்திலேயே இல்லை.
இந்த மூன்று முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இன்றளவும் நிலைத்திருந்தாலும் அவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் ஏன் அழிந்தன என்பதை ஆய்வு செய்தால் சிரமமில்லாமல் விடை தெரியும்.
முன்பு தனிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவர், காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டதால் இரு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றபோதிலும் கட்சியின் அடையாளத்தை இழந்த காரணத்தால் அந்தக் கட்சி மறைந்தது.
தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக அண்ணா இருந்தபோது அவரது அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சரான சி.பா.ஆதித்தனாரின் கட்சியும் வரைபடத்திலிருந்து அகன்றது.
1971-ஆம் ஆண்டு தேர்தலில் தி.நகர் தொகுதியில் ம.பொ.சி. போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், மேலவை உறுப்பினராகி அதன் தலைவராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டார்.  இன்று அவர் நிறுவிய தமிழரசுக் கழகமும் வழக்கிலிருந்தே அழிந்தது.  இன்னும் பல இயக்கங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் அழிந்ததற்கு இந்த இரவல் சின்னம் காரணமாக அமைந்துள்ளது.
இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 அல்லது தேர்தல் சின்னம் சட்டத்தில் உரிய  பிரிவுகள் அன்று இல்லாததே இந்தக் கட்சிகளின் மறைவுக்குக் காரணம்.
இரவல் சின்னத்தில் தலைவர்கள் போட்டியிட்டதால் அடையாளம் இழந்த இத்தகைய கட்சிகளை அந்தத் தலைவர்களுக்குப் பிறகு மக்கள் தார்மிக அடிப்படையில் ஏற்காததே முக்கியக் காரணம் என்பது வரலாற்று உண்மை.
பிற்காலங்களில் இந்தச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட பல திருத்தங்கள் இந்த இரவல் சின்னம் முறையைத் தெளிவாகச் சட்ட மீறலாகவே உறுதி செய்திருக்கின்றன.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1997-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரிவு 29-இன் அடிப்படையில் ஓர் உறுப்பினர் ஒரே நேரத்தில் இரு பதிவு பெற்ற கட்சிகளில் உறுப்பினராக இருக்க முடியாது.  கட்சிகளைப் பதிவு செய்வதற்கான இந்தப் பிரிவின்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் கட்சி விண்ணப்பப் படிவத்துடன் பல ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.  அவற்றில் தன் கட்சியின் நிர்வாகிகள் வேறு பதிவு பெற்ற கட்சிகளில் உறுப்பினராக இல்லை என்ற பிரமாண வாக்குமூலம் முக்கியமானது.  மேலும் 100 உறுப்பினர்களின் இத்தகைய வாக்குமூலங்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கட்சியின் சட்ட நடைமுறைகளில், தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் வேறு எந்தப் பதிவு பெற்ற கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
1968-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தேர்தல் சின்னம் சட்டத்தில் 13ஏஏ பிரிவு 2000-ஆம் ஆண்டு திருத்தமாக இணைக்கப்பட்டது.  இந்தப் பிரிவின் அடிப்படையில் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோர், அந்தக் கட்சியில் உறுப்பினராகவும், கட்சியின் உறுப்பினர் பட்டியலில் ஏற்கெனவே பதிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று மிக அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. வேறு கட்சி சின்னத்தில் தேர்தலில் வெற்றி பெற்றாலும், இந்திய அரசியல் சாசனத்தில் பத்தாவது அட்டவணை அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு இந்தச் சட்டப் பிரிவு வகை செய்கிறது.
 2004  நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தன் பதவியைக் காப்பாற்ற நீதிமன்றங்களில் தொடர் போராட்டம் நடத்தியதும், தான் தலைமை  வகிக்கும் முஸ்லிம் லீக் ஓர் அரசியல் கட்சியே இல்லையென்று பல வாக்குமூலங்கள் அளித்து தன் பதவியைக் காப்பாற்றிய வரலாறும் கவனிக்கத்தக்கது. இறுதியில் உச்சநீதிமன்ற தீர்ப்பில், "இவர் தி.மு.க. உறுப்பினராக மட்டும் உள்ளார்' என்று கூறி அந்த வழக்கை முடித்து கொண்டு வந்ததும் சமீபத்திய வரலாறாகும்.  காயிதே மில்லத் தலைமையேற்று வழிநடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டுவந்து, அதே பெயரில் புதிய கட்சியாக 03.03.2012-ஆம் ஆண்டு மறுபதிவு செய்ய இரவல் சின்னத்தில் பெற்ற பதவியைக் காப்பாற்ற இவர் அளித்த வாக்குமூலங்களே காரணமாயிருந்தன.
சில புதிய கட்சிகளும் அதன் நிறுவனங்களும் மக்களிடையே விரைவில் அங்கீகாரம் பெற இந்த இரவல் சின்ன நடைமுறையை நாடுகின்றனர்.  இந்தக் கட்சிகள் இவர்களுடன் மறைவது மட்டுமின்றி, இவர்கள் நாடி வந்த பதவிக்காலம் முழுவதும் நீதிமன்றம்/தேர்தல் ஆணையம் அல்லது நாடாளுமன்றம்/சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நெடிய போராட்டங்களிலேயே  நேரத்தைச் செலவிட நேரிடும். மேலும், இவ்வாறு இரவல் சின்னத்தை அளிக்கும் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை விழுங்கும் திமிங்கிலங்களாக இருப்பதை மறுக்க முடியாது.
இரவல் அளிக்கும் பெரிய கட்சிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க அல்லது அவற்றின் தேர்தல் ஆணையப் பதிவை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29ஏ பிரிவு வழிவகை செய்யும் ஆபத்தை உணர்ந்து இந்த முறையை ஊக்குவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  கொள்கை கோட்பாடு அடிப்படையில், தான் சார்ந்த கட்சி தனக்குப் பிறகும் நிலைத்திருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த இரவல் சின்ன நடைமுறையை நிச்சயமாக விரும்பமாட்டார்கள்.

கட்டுரையாளர்: தாளாளர், காயிதே மில்லத் கல்லூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com