மதத்துக்குள் நாடு வேண்டாம்!

இன்று இமைப்பொழுதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வந்த பிறகு, பிற படைகளின் அவசியம் குறைகிறது.  ஆனால், ஒற்றர் மூலம் வேவு பார்க்க அழகிகள் முதல் அந்தரங்க ஆள்கள்வரை பகை நாடுகளுக்கு


இன்று இமைப்பொழுதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வந்த பிறகு, பிற படைகளின் அவசியம் குறைகிறது.  ஆனால், ஒற்றர் மூலம் வேவு பார்க்க அழகிகள் முதல் அந்தரங்க ஆள்கள்வரை பகை நாடுகளுக்கு அனுப்புவது இன்றும் உண்டு.  இப்போது விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கைக்கோள்களின் உதவி கொண்டு துல்லியத் தாக்குதலை மேற்கொள்ள முடியும். ஆனால், இவற்றை எல்லாம்விட எவரும் அஞ்சத்தக்க ஒரு படை உண்டு.  அதுதான் ஐந்தாம் படை;  கூட இருந்தே குழி பறிப்பது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது போன்றது.  இதனைத்தான் திருவள்ளுவர் பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் என்றார்.
 தாய்நாட்டில், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இனம், மொழி, பிரதேசம் சார்ந்த பெயர்களில் போராட்டங்களை, கலவரங்களைத் தோற்றுவிப்பது;  பகை நாடுகளில் களப் பயிற்சியும், நிதியுதவியும் பெறுவது போன்றவை உட்பகையாகும். இந்த நாட்டில்  எதிரிகளுக்கு துணை நிற்கும் எட்டப்பர்கள் ஐந்தாம் படையினராக   இருக்கின்றனர்.  1993-இல் மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட தேசத் துரோகிகள் தாவூத் இப்ராஹிம், டைகர் மேமனும் தப்பி ஓடி பாகிஸ்தானில் இருக்கிறார்கள்.  டைகர் மேமனின் சகோதரன் யாகூப் மேனன் பிடிபட்டு,  21 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015-இல் அரசு தூக்கிலிட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போராட்டம் நடத்தியவர்களில் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலாவும் ஒருவர். இதுதான் பச்சை தேசத் துரோகம்.  இதே போன்று 2001-இல் நாடாளுமன்றத் தாக்குதல் சதிக்கு திட்டம் வகுத்த காஷ்மீர் மாநில அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை.  இதனை நீதி முறைக் கொலை என்று தில்லி ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தில் நடந்த விழா ஒன்றில் முழங்கியவர்களின் தலைவனாக இருந்தவர் கன்னையாகுமார் என்ற மாணவர். தங்களின் உயர்நிலைப் படிப்பில் கவனம் செலுத்துவதை விட்டு நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் தலையிட இவர்களை ஊக்குவிக்கும் சக்தி எங்கிருந்து பெறப்படுகிறது?
1962-இல் சீனப் படையெடுப்பை நியாயப்படுத்தி, ஆதரவு நல்கிய பொதுவுடைமையாளர்களுக்கு என்ன தேசபக்தி இருக்க இயலும்?  கி.பி. 1191-ல் கைபர் கணவாய் வழியாக வந்த முகமது கோரி, இன்றைய ஹரியாணாவில் தராய் என்னுமிடத்தில் ராஜபுத்திர மன்னன் பிருத்விராஜனோடு போர் புரிந்து தோற்றான்.  அவனைச் சிறைபிடித்த பிருத்விராஜனிடம், மன்றாடி உயிர்ப் பிச்சை வேண்டினான் கோரி முகமது.  பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்ற வழி அவனுக்கு விடுதலை வழங்கினான் பிருத்விராஜன்.
ஆண்டுகள் சில உருண்டோடின. மன்னன் ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தையை மணம் முடிக்க எண்ணி அவனுக்கு மணத் தூது அனுப்பினான் பிருத்விராஜன். ஜெயச்சந்திரன் மறுத்து விடவே சம்யுக்தையை சிறையெடுத்துச் சென்று திருமணம் புரிந்தான்.  மேலும் சில ஆண்டுகள் கழித்து கோரி முகமது மிகப் பெரும் குதிரைப்படையோடு வந்து பிருத்விராஜனை போருக்கு அழைத்தான்.  பிருத்விராஜன் இவனது படைபலத்தை உணர்ந்தும், இவனை எப்படியும் வெல்ல வேண்டும் என்று கருதியும், பிற ராஜபுத்திர மன்னர்களையும், தன் மாமனார் ஜெயச்சந்திரனையும் துணைக்கு அழைத்தான்.
ஜெயச்சந்திரன் உதவ மறுத்தது மட்டுமல்லாது பிற அரசர்களையும் தடுத்து நிறுத்தினான்.  கோரி முகமதுடன் ஜெயச்சந்திரன் இணைந்து போர்க்களத்தில் இறங்கினான். திட்டமிட்டபடி நிராயுதபாணியாக நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பிருத்விராஜனை சிறை பிடித்து அவனது இரண்டு கண்களையும் குருடாக்கினான் கோரி. தனக்கு உதவியாக இருந்த ஜெயச்சந்திரன் தலையை திடீர் என்று துண்டித்து குதிரையின் மேல் வைத்து கன்னோஜி நகரத் தெருக்களில் ஊர்வலம் வரச் செய்தான்.  அப்போது அவன் சொன்னான்: எதிரியைக் காட்டிலும் காட்டிக் கொடுக்கும் துரோகி ஆபத்தானவன்;  ஜெயச்சந்திரன் தன் மருமகன் பிருத்விராஜனுக்கு துரோகம் இழைத்தவன்.
 காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் திரால் என்ற பகுதியில் உள்ள மீர் மொஹல்லா இடத்தைச் சார்ந்த, முதாசீர் முகமது கான் என்பவன் இந்திய மண்ணில் வாழ்ந்து கொண்டே, காஷ்மீரின் சிறப்புச் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டு வீரர்களை பலி கொடுக்கத் திட்டம் வகுத்தான்.  பட்டதாரியான இவன் ஐ.டி.ஐ.-இல் ஓர் ஆண்டு மின்னியல் படிப்பை முடித்தவன்.  2017-ஆம் ஆண்டு முதல் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்துக்கு உதவி செய்து வந்தவன்.  இவனுக்கு சோபியானில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவன் சஜத்பட் கார் கொடுத்தான்; பின்னர் பிஜ்பெஹராவில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைமறைவானான். அதில்அகமது தாரா என்ற காஷ்மீர் இளைஞன் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் காரை ராணுவ வாகனத்தில் மோதி சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேரைக் கொன்றான்.
இந்தச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.  இந்த மாதம் 7-ஆம் நாள் ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுவீசி மக்களைக் கொல்வதற்காக  9-ஆம் வகுப்பு மாணவன் சோட்டு என்பவனுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் ரூ.50,000 கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது கல்லெறிவது, வசை பாடுவது போன்ற செயல்களுக்காக காஷ்மீர் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் களப் பயிற்சியும், நிதியும் தருகின்றன.
இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர் மசூத் அஸார் என்ற கொடிய பயங்கரவாதி. இவர் 1979-89களில் சோவியத்-ஆப்கானிஸ்தான் போரில் காயம் அடைந்து அபுதாபி, சவூதி அரேபியா, ஜாம்பியா, மங்கோலியா, பிரிட்டன், அல்பேனியா போன்ற நாடுகளில் பயணித்து தனது மத தீவிரவாத கொள்கைக்கு நிதியும், ஆள்களையும் திரட்டினார்.  1993-இல் சோமாலியா, கென்யாவில் அல்காய்தாவின் நிர்வாகிகளைச் சந்தித்து இஸ்லாத்துக்கு எதிராக உள்ள நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்தார்.
இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் போர் தொடங்குவதாக அறிவித்தார். காஷ்மீரில் நுழைந்து மதத் துவேஷ பிரசாரத்தை தீவிரமாகப் பரப்பினார்.  1994-டிச.24-இல் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசு.  1999-டிச.24-இல் காத்மாண்டிலிருந்து இந்திய விமானத்தை காந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்தினர்.  இதில் 176 பயணிகள் இருந்தனர். என்ன விலை கொடுத்தாவது பயணிகளை உயிரோடு மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  விமானத்தில் இருந்த வேலூர் பயணிகளுக்காக அவர்களின் உறவினர்கள், கட்சித் தொண்டர்களுடன் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரன் தில்லி சென்று பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினார்.
 அனைத்துக் கட்சித் தலைவர்களோடு பிரதமர் கலந்து பேசி தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று மசூத் அஸார், உமர் ஹெய்க் போன்ற பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்து எல்லாப் பயணிகளையும், விமானத்தையும் மீட்டார்.  இந்த அஸார் ஒரு சமயம் பின்லேடன் தங்கியிருந்த ஆப்கன் மலைக் குகையை சர்வதேசப் படைகள் சுற்றிவளைத்தபோது பின்லேடனைத் தப்பிக்க வைத்தவர்;  சி.ஐ.ஏ. அறிக்கையின்படி இவருக்கு பாகிஸ்தான் மாதந்தோறும் 60,000 அமெரிக்க டாலர்களை அளிக்கிறது.  பாகிஸ்தானில் மட்டும் ஆறு பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு 
வருகின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய காஷ்மீர் பகுதியில் உள்ள பாலாகோட்தான் அஸாரின் தலைமையிடம்.  3 ஏக்கர் பரப்பில் 600 நபர்கள் தங்கக்கூடிய பிரமாண்டமான நவீன வசதிகளோடு கூடிய மாளிகை.  இங்கிருந்துதான் தீவிரவாதக் குழுக்கள், தனி நபர் என இந்தியாவுக்குள் நுழைந்து 2000,  2001, 2005,  2006,  2008, 2011, 2016-இல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; இப்போது 2019-பிப்ரவரி-14 புல்வாமாவில் ராணுவ வாகனத்தின் மீது கார் மோதி தாக்குதல்  சம்பவம் நடைபெற்றுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நமது விமானப் படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் சிறை பிடித்தபோது உலகின் அனைத்து நாடுகளுமே அவரை விடுவிக்க அறிவுறுத்தின.  இதனால் பாகிஸ்தான் விடுவித்தது.  இதற்காக இம்ரான் கானுக்கு நோபல் பரிசு கொடுக்க நம்மூர் அரசியல்வாதிகள் சிலர் பரிந்துரை செய்வதைக் கேட்டு நெஞ்சம் கனக்கிறது.  ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் 14 நாடுகள் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் குரல் கொடுத்தபோது, நான்காம் முறையாக சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதை முறியடித்துள்ளது.
ஐ.நா. சபையில் சீனாவுக்கு வீட்டோ அதிகாரத்தை இந்தியாவின் அப்போதைய பிரதமர் பண்டித நேருதான் தாரை வார்த்துத் தந்தார்.  சீனா தனது நாட்டில் 10 லட்சம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தி தடுப்புக் காவல் போன்றதொரு நிலையில் வைத்து கலாசார வகுப்பெடுத்து வருகிறது.  ஆண்கள் தாடி வளர்ப்பதையும், தலையில் குல்லாய் அணிவதையும்,  பெண்கள் பர்தா அணிவதையும் இன்னும் 5 ஆண்டுகளில் விட்டுவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.  சீனாவின் இந்த அநியாயச்  செயலை உலகுக்கு லண்டன் பி.பி.சி. வெளிச்சம் போட்டுக் காட்டியது.  இத்தகைய மனோபாவம் கொண்ட சீனா,  மசூத் அஸாரை மட்டும் ஏன் பாதுகாக்க விரும்புகிறது?
ஆசிய கண்டத்தில் இந்தியாவின் எழுச்சியும், பன்முக வளர்ச்சியும் தனது மேலாதிக்கத்தைப் பாதிக்கும் என சீனா கருதுகிறது என்கிறார்கள் உலக அரசியல் விமர்சகர்கள்.  எனவே, பல மதங்களைப் பின்பற்றும் கோடானு கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எதிரிகளையும் தாய்நாட்டின் துரோகிகளையும் இனியும் சகித்துக்  கொள்ள முடியாது. நாட்டுக்குள் மதம் இருக்க வேண்டும்.  மதத்துக்குள் நாடு இருக்கக் கூடாது.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு
மிலேச்சரை மாய்த்திட விரும்பான் 
வாழ்வுமோர் வாழ்வுகொல்? என்ற கூற்றை உரக்கக் கூவத் தோன்றுகிறது அல்லவா?

கட்டுரையாளர்:
தலைவர், திருக்கோவலூர் 
பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com