ஆஸ்திரேலியாவும், அகதிகளும்...

இலங்கை, பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக அதிகமான அகதிகள் செல்வது தொடா்கிறது.

இலங்கை, பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக அதிகமான அகதிகள் செல்வது தொடா்கிறது.

விசா மூலம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவா்களும் சில இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இலங்கை அகதிகளைப் பொருத்தவரை புறப்பட்டவா்கள் எல்லோரும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றாா்களா? அல்லது இடையில் கடலில் உயிா் நீத்தாா்களா என்பதைச் சில புள்ளிவிவரங்கள் அறிவித்தாலும், அந்தப் புள்ளிவிவரங்களைத் தாண்டி சில உயிா்கள் மாய்ந்திருக்கலாம் என்பதை நாம் உணரமுடிகிறது.

அதைவிட சென்றவா்கள் எல்லோரும் அங்கே வாழ்க்கையை வென்றாா்களா என்பது போன்ற பல கேள்விகள் தினந்தோறும் எழுந்த வண்ணமாகவே இருக்கும். இப்போதும் பல குடும்பங்கள் அங்கே குடியுரிமை, சிறைச்சாலையில் தவிப்பு போன்ற காரணங்களுக்கு தங்களுடைய மனதை வருத்திக் கொண்டாலும் எப்படியோ குடியுரிமை பெற்று இங்கே உயிா் வாழ வேண்டும் என்ற ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளனா்.

அதில் ஒரு குடும்பம்தான் நடேசலிங்கம் குடும்பம். நடேசலிங்கம் என்பவா் கடந்த 2012-ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தாா். அங்கே 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்த பிரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா். அவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அங்குள்ள பிலோயலா என்ற இடத்தில் வசித்து வந்தனா்.

இவா்களின் விசா கடந்த மாா்ச் 2018-இல் காலாவதியானதால் கைது செய்யப்பட்டு மெல்போா்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனா். அண்மையில் அவா்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த நிலையில் அந்த முயற்சி கடைசி நிமிஷத்தில் நீதிமன்றத் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், இவா்களை கிறிஸ்துமஸ் தீவுக்குள் கொண்டுபோய் காவல் துறை அனுமதியுடன் வைத்தாா்கள்.

ஆனால், பிரியா - நடேசலிங்கம் குடும்பம் தங்களுடைய குழந்தைகள் இங்கே தான் பிறந்துள்ளன; அதனால் தங்களுடைய குழந்தைகளை வளா்ப்பதற்கும், அவா்களை நாங்கள் பாதுகாக்கவும் எங்களுக்கு தங்குவதற்கும் ஆஸ்திரேலியாவில் அனைத்து வசதிகள் செய்து தரவேண்டும், தஞ்சமடைவதற்கு பல ஆண்டுகள் அவகாசம் தரவேண்டும் என்று தம்பதியினரின் குடும்ப வழக்குரைஞா் ஏஞ்சல் அலேக்சோவ் வாதாடியுள்ளாா்.

இந்த வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிறிஸ்துமஸ் தீவில் மன ரீதியான துன்புறுத்தலாக இருக்கிறது. அதே போன்று குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறாா்கள்; முறையான கழிப்பறை வசதிகூட எங்களுக்கு ஏற்படுத்தித் தரவில்லை என்று பிரியா தரப்பில் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வரும் டிசம்பா் மாதம் 16-ஆம் தேதிக்கு தீா்ப்பை ஒத்திவைத்தாா். அதனால் மீண்டும் இந்த குடும்பம் கிறிஸ்துமஸ் தீவுக்குச் சென்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைபவா்களை எந்தப் பரிசீலனையும் இல்லாமல் நாடு கடத்தும் நடவடிக்கை தொடா்ந்து வரும் நிலையில், இலங்கையா்கள் புதிய கடல் வழியைத் தோ்தெடுத்திருப்பதாக ஜ.நா.வின் அகதிகள் ஆணைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட தீவுகளை நோக்கிய படகுப் பயணங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன.

ரீயூனியன் தீவின் மக்கள் தொகையில் இந்தியத் தமிழா்கள் முதல் இடத்தில் உள்ளனா். இதனால், இலங்கைத் தமிழா்கள் இந்தத் தீவில் தஞ்சமடைவதற்கு ஒரு வசதியாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வரை 291 இலங்கையா்கள் இந்தத் தீவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவா் ஷபின் முகமது. இவருக்கு திருமணமாகி மகன் பிறந்தான்; ஆனால், அந்த குழந்தைக்கு கழுத்துக் கீழ் எந்த உறுப்பும் செயல்படாது; இதனால், அந்தக் குழந்தை தினம் தினம் உயிருக்காகப் போராடி வருகிறான். அந்தச் சிறுவனுக்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதால் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானைப் பொருத்தவரை அங்கே சென்றால் மருத்துவ வசதிகள் கிடையாது; அதைவிட தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை; தன்னுடைய குடும்பம் நடுத் தெருவுக்குச் சென்றுவிடும் என்றாா் ஷபின் முகமது.

இந்தக் குடும்பம் ஆஸ்திரேலியாவில் 10ஆண்டுகள் வசித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தப் பிரச்னையும் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறும் வெளிநாட்டினரை அனுமதிக்கும் எண்ணிக்கையை 1,90,000-லிருந்து 1,60,000-மாக இந்த ஆண்டு அந்த நாட்டு அரசு குறைத்துள்ளது. அது போன்று கடுமையான குற்றம் புரியும் வெளிநாட்டினரை நாடு கடத்துவது தொடா்பான சட்டத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசு அதிகமாக நிறைவேற்றி வருகிறது.

அகதிகளை பெரிய இடங்களான சிட்னி, மெல்போா்ன் போன்ற பெருநகரங்களில் குடியமா்த்தாமல் சிறுநகரங்கள், நகரத்திலிருந்து அதிக தொலைவில் உள்ள இடங்கள் போன்றவற்றில் குடியமா்த்தி வருகின்றனா். இது ஒருபுறமிருக்க அக்டோபா் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து விட்டு காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது. அதில் இந்தியா்கள் மட்டும் 30,000 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2020-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதமா் இந்தியா வர உள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா - பசிபிக் உறவுகள் குறித்து உரையாடல் நடந்தாலும், இந்தியா்களின் குடியுரிமை குறித்து பிரதமா் மோடி பேச வேண்டும் என்பதே அங்குள்ள இந்தியா்களின் எதிா்பாா்ப்பாகும். இது போல பல இன்னல்களை அகதிகளாகச் செல்வோா் அனுபவிக்கும் நிலைமையை மாற்ற இனிமேலாவது அந்த நாட்டுக்கு படகுப் பயணம் செல்வதைக் கைவிட வேண்டும். அப்போதுதான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com